Showing posts with label ஓம். Show all posts
Showing posts with label ஓம். Show all posts

தமிழர்கள் ஓம் என்று சொல்லலாமா?


வயலிலே இருக்கின்ற பயிர்களிலே ஒவ்வொன்றுக்கும் நீர் தேவை. வாய்க்காலில் ஓடி வரும் தண்ணீர் வாய்மடையை அடைந்து வயலுக்குள் நுழைகிறது. பயிர் ஒவ்வொன்றையும் நனைக்கிறது. தண்ணீரைக் காணாத பயிர் வாடும். அதனைப் போலத்தான் நம்முடலின் செல்களும். ஒவ்வொன்றுக்கும் உயிர்வாயு (ஆக்சிஜன்) தேவையாயிருக்கிறது. காற்றில்லாத இடம் மரணிக்கிறது. ஒவ்வொரு செல்லுக்கும் காற்றைக் கொண்டுபோகத்தான் நாளங்களும், நுண்குழல்களுமிருக்கின்றன. அவை காற்றைச் சரிவர ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுபோகும் வழிமுறைகள்தான் யோகாசனங்களும், மூச்சுப் பயிற்சிகளும். சில யோகாசனங்களைச் செய்யும்போது, வளையாத இடங்களை வளைத்துப் பிடிக்கும்போது அங்கே இரத்தம் பாய்வதை உணரமுடியும். இரத்தம் பாய்வது புதிய காற்றைத் தரவும், பழைய கசடுகளை அடித்துக் கொண்டுபோய் வெளியேற்றவும். உடலை வளைக்காது ஒரே வேலையை வருடம் முழுக்கச் செய்யும் இன்றைய சாமானியர் ஒவ்வொருவருக்கும் தேவையானது இத்தகைய இரத்த ஓட்டம். இதனைச் செய்யும் ஒரு முறைதான் ஓம் என்ற உச்சரிப்பு. மூச்சை நன்றாய் இழுத்து ஓ.....ம்........என்று சொல்லிப் பாருங்கள். ம்....என்று குறைந்துகொண்டே போய்க் கடைசியில் ஓசையும் வராத ஓரிடம் வரை செல்லுங்கள். அப்போது உங்கள் செல்கள் காற்றைக் கேட்டுக் கெஞ்சுவதைக் காணலாம். பசிக்கின்ற வயிற்றைப் போல் அது ஏங்கும். காற்றுக் குறைந்த இந்நிலையை hypoxia என்பார்கள். இந்நிலையில் செல்கள் தமது பாதுகாப்புச் செயற்பாட்டை முடுக்கிவிடுகிறன்றன. சாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளைக் கையாளுகின்றன. இதுவரை சாவென்றால் என்னவென்றே அறியாத, கஷ்டமென்றால் என்னவென்றே அறியாத செல்கள் ஏதோ ஆபத்து என்று தம்முடைய வாழும் திறத்தையெல்லாம் உசுப்பிவிடுகின்றன. இப்போது மீண்டும் காற்றை இழுத்துக் கொள்ளுங்கள். Reoxygenation என்பது இந்நிலை. அது எல்லா செல்களுக்கும் மீண்டும் காற்றை அனுப்புகிறது. இதைப் போலத் திருப்பித் திருப்பிச் செய்வது செல்களின் உயிர்ப்புத்தன்மையைக் கூட்டும். இது செல்களைப் பெரும் ஆபத்துக்களிலிருந்து (severe hypoxia) தப்பிக்க வைக்குமளவுக்கு முன்கூட்டியே தயார்நிலையில் வைத்திருக்கிறது (preconditioning).

ஓம் என்பது ஒரு உச்சரிப்பு. ஒற்றைச்சொல் மறை. மறையென்பது மந்திரம். இவ்வுச்சரிப்பிலிருந்தே அண்டம் பிறந்ததென்பர், மந்திரங்கள் பிறந்ததென்பர், யாவும் இதனுள்ளே அடக்கமென்பர். இவ்வோசையின் பிறப்பையோ, இதிலிருந்து பிறக்கின்றவற்றையோ குறித்து எழுதும் கல்வி எனக்குக் கிடையாது. ஆனால் இவ்வுச்சரிப்பையே பண்டைய தமிழர்கள் தம் உடலை வலிமையாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்தினர். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் பலவிடங்களில் இந்த ஒற்றைச் சொல்லின் மகிமையைப் பேசுகிறார். வளியெங்கும் நிறைந்திருக்கும் காற்றை மட்டும் அள்ளிப் பருகியே உயிர் வாழலாமென்கிறார். இன்றைய ஆராய்ச்சிகளில் மூலச்செல் (stem cell) பற்றிய அறிவு வளர்ந்துகொண்டே வருகிறது. மனிதவுடலில் எல்லா வயதிலும் இந்த மூலச் செல்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. கருவிலே குழந்தையாயிருந்தபோது இருந்த செல்களின் ஒரு தொகுதி இன்னமும் அழியாமல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருந்துதான் உடலின் மற்ற இடங்களுக்கு மூலச்செல்கள் நகர்ந்து சென்று மாறுபாடடைந்து வெவ்வேறு வகையான வேலைகளைச் செய்யக்கூடும் என்கிறது இன்றைய அறிவியல். இந்த மூலச்செல் டெப்போவைத்தான் திருமூலர் "மூலாதாரம்" என்கிறாரா? "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து" என்கிறது விநாயகர் அகவல். கால் என்பதற்கு காற்று என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த மூலாதாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழிமுறைகள்தான் ஓம் என்ற உச்சரிப்பின் வழியான மூச்சுப் பயிற்சியும், மற்றபிற யோகாசனங்களும் என்று தோன்றுகிறது. இதனைக் குறித்த முறையான அறிவியல் ஆய்வுகள் பெரிதும் இல்லை. பண்டைத் தமிழர்கள் கைக்கொண்டிருந்தவைதாம் இந்த முறைகளெல்லாம். சித்தர்களும், மொழியறிஞர்களும் தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்தவைதாம். ஆனால் இன்றைய நிலையில் இப்பயிற்சிகள் மதங்களுக்குள் சென்று பிணைந்துகொண்டதால், மதம்சாரா தமிழர்கள் விலகியே நிற்கிறார்கள். நாம் நம்மைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குட்பட்ட, அரசியல் நிலைகளால் திசைதிருப்பப்படுகின்ற சமூகமாக உணராமல், அதற்கும் முற்பட்ட செல்வ, இலக்கிய, வாழ்வியல் செழிப்புற்ற சமூகமாக உணரவேண்டும். யோகாசனம், மூச்சுப் பயிற்சி முதலான இத்தகைய பயிற்சிகளை நம்முடையன என்ற உரிமையோடு மீண்டும் கைக்கொள்ள வேண்டும். வலிமையான வாழ்வினை நாமும் வாழ வேண்டும். அழகிய, வலிய உடலை நாமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். பதினெட்டுச் சித்தர்களும் நம்முடையவர்கள் என்ற உரிமை நமக்கு வேண்டும். அவர்கள் போதித்த மருத்துவமும், ஆன்மீகமும் தமிழரதுதான் என்ற விழிப்பு வேண்டும்.