இது எந்தப் பாடலின் கடைசி அடியென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
பலரும் இதன் பொருளைப் புரிந்துகொண்டதாக நான் நினைப்பது - இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் எனக்குத் தா என்பதாகவே. ஆனால், சங்க காலத் தமிழ் நூல்களில், முக்கியமாக, முதல் மற்றும் இடைச்சங்க நூல்கள் பெரும் கடற்கோள்களினால் அழிந்துபட்டன என்பதைப் பல இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. முக்கியமாகப் பலரால் கையாளப்படுவது "பஃறுளி ஆற்றோடு பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்பது சிலப்பதிகாரம். இத்தகைய கடற்கோள்களினால் முதலிரு சங்கத்து நூல்களுள் பெரும்பாலானவையும், தமிழர்களின் சொற்களும், வாழ்வும், கலையும் பெருவாரியான அழிவுக்குள்ளாயின. முதல் இரு சங்கங்கள் முறையே மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் இருந்ததாக ஆய்வர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையிலேயே மூன்றாவது சங்கம் வடமதுரையில் (தற்போதைய மதுரையில்) அமைக்கப்பட்டது. கடற்கோள்களில் தப்பிப் பிழைத்த பலநூல்களும் சரி, கடைச்சங்க காலத்து நூல்களும் சரி, பிற்காலத்தில் மூண்ட அரசியல், சமூகப் பிணக்குகளின்போது அழிக்கப்பட்டமையும் நிகழ்ந்திருக்கிறது. இந்த மூன்று சங்கத்து நூல்களும் தமிழர்களின் வரலாற்றைப் பெரிதும் புரிந்துகொள்ள உதவக்கூடியன. பெரும் அறிவுக் களஞ்சியங்களாவன. ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் மாளாத மாண்புடையன. இவற்றைக் கற்பதற்கான நெடுவாழ்வு சாதாரண மாந்தர்க்கில்லை. கல்வி கரையில, கற்பவர் நாள்சில என்றதனை இங்கு நினைவுகூர்க. எனவேதான் மெய்யறிவினாலே, ஓதாக்கல்வியாலே இம்முச்சங்கங்களின் தமிழையும், இலக்கியங்களையும் உணர்ந்து சுவைத்து இன்புற ஏங்கித் தவித்த மனதாக, "பாலும் தெளிதேனும்" என்ற பாடலைப் பாடிய இந்த ஔவையார் (பல ஔவையார்களில் இவர் பிற்காலத்தியவராக இருக்கக்கூடும்) "சங்கத் தமிழ் மூன்றும் தா", அதாவது இந்த மூன்று சங்கத்துள் வளர்ந்த தமிழையும் எனக்குத் தா என்று இறைஞ்சுகிறார் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகிறது.
இப்பாடலை இன்னும் சிறிது நோக்கினால், "கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே" என்பது யாரை அல்லது எதனைக் குறித்தென்று ஒரு கேள்வி எழுகிறது. இதன் பரவலான விளக்கம் பிள்ளையார் என்பது. ஆனால் மணி என்பதைப் பலரும் பலவிதமாகப் பொருள் கொள்கின்றனர். மணி என்பதை நம் உள்ளத்தே உறைகின்ற ஞானத்தின் குவிய இடத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஞான மணியே, நன்மணியே, பொன்மணியே, நடராஜ மணியே என்பார் வள்ளலார். இந்த ஞானத்தையே "தூமணி" என்பதாகக் கொள்ள இடமிருக்கிறது. துங்கக் கரிமுகம், கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியைப் பார்த்தால் தோன்றும் கோலம். தோன்றி மறைந்து விளையாடும் ஒரு காட்சி. ஒளியும் இருளுமாய்க் கலந்து காட்டும் கோலம். அதுவே ஞானத்தின் இருப்பிடமாகப் பலராலும் காட்டப்படுவது. திருமூலரிலிருந்து பல சித்தர்களும் சிந்தையைச் செலுத்துவது இவ்விடத்துக்கே. இக்காலத்து யோகாசன வியாபாரிகளுக்கும், மத வியாபாரிகளுக்கும்கூடப் புரிந்தோ புரியாமலோ இவ்விடத்தின்மீது ஒரு மயக்கமுண்டு. ஆக, அங்கே இருக்கின்ற ஞானத்தால் பலவற்றையும் உணர முடியும். மெய்யுணர்தல். மெய்யறிவு. மெய்ஞானம். இது ஓதாமலேயே வாய்க்கக்கூடியது என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தூமணியிடமே ஔவையார் முச்சங்கத் தமிழையும் தரச்சொல்லி வேண்டுகிறார். சரி, முதல் வரியில் வரும் சாப்பாட்டுச் சரக்குகள் என்னத்துக்கு? "பால், தெளிதேன், பாகு, பருப்பு" என்ற நான்கும் மனிதர்கள் உயிரைக் கட்டிக் காத்துக்கொள்ளப் போதுமான அத்தனைச் சத்துக்களையும் கொண்டுள்ளன. இவற்றை மட்டுமே உண்டுகொண்டு வேறு உண்டியைத் தேடாது உயிர்வாழ்ந்துவிட முடியும். சாதகருக்கும் உண்டி தேவை. காற்றைக் குடித்து உயிர்வாழ எல்லோருக்கும் முடிந்துவிடுவதில்லை. அதே நேரத்தில் ஆடம்பரமான பெருவுணவுக்கும் நேரம் கூடுவதில்லை. எனவேதான் இந்த அடிப்படை உணவுப்பொருட்களை மட்டுமே கொண்டு உன்னைப் பேணிக்கொண்டிருக்கிறேன், எனக்கு வேண்டியதைக் கொடு என்கிறார்.
மதங்கள் எதனை வேண்டுமானாலும் மக்களிடமிருந்தும், அவர்தம் மூதாதையரிடமிருந்தும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றையே இன்னொருவிதமாக மக்களிடம் பரப்பலாம். மக்களிடம் தம் ஆளுமையைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனைக் கோலங்களையும் புனையலாம். ஆனால் மெய்தேடும் மக்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் மெய்யென்று எண்ணலாகாது. தீர விசாரிப்பதைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும். மெய்யை அடையும் வரை தேட வேண்டும். தேடினால் கண்டடையலாம்.
Showing posts with label Three Sangams. Show all posts
Showing posts with label Three Sangams. Show all posts
சங்கத் தமிழ் மூன்றும் தா!
Posted by சுந்தரவடிவேல் at 11 comments
Labels: Bell, Ganesh, Three Sangams, Wisdom, ஔவை, சங்கத் தமிழ், மணி, மெய்ஞானம், விநாயகர் அகவல்
Subscribe to:
Posts (Atom)