எங்கே போனேன்

நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்களா? அப்படின்னா இது உங்களுக்குப் பெரிய அதிசயமா இருக்காது. போகாதவங்களுக்கானது இந்தப் பதிவு.

சியாட்ல் (Seattle) நகரம் வாஷிங்டன் மாநிலத்துல இருக்கு (இந்த வாஷிங்டன் அமெரிக்கத் தலைநகர் இல்ல!). அங்கெ ஒரு அஞ்சு நாள் இருந்தேன். எலும்பாராய்ச்சியாளர் மாநாடு (American Society for Bone and Mineral Research). அந்த அமைப்புல சுமார் அம்பது நாடுகளைச் சேர்ந்தவங்க இருக்காங்க. நிறைய அமெரிக்கக் கூட்டம். பல நாடுகள்லேர்ந்தும் மக்கள் வந்திருந்தாங்க. சில தமிழர்களையும் சந்தித்தேன்.

ஒரு பெரிய மாநாட்டரங்கில் நடந்தது. காலையில யாராச்சும் பெரிய ஆள் ஒருத்தர் பேசுவார். இவரோட பேச்சு எலும்புத் துறையில் எல்லோருக்கும் பொதுவான விஷயங்களைப் பத்தி இருக்கும். அப்புறமா சின்னச் சின்னக் கூட்டங்கள். சின்னச் சின்ன அரங்குகளில். ஆனாலும் அவங்கவங்க ஆராய்ச்சி அவங்கவங்களுக்குப் பெருசு. நம்ம வலைப்பூக்கள் மாதிரி. சுவரொட்டி/தட்டிகளிலும் தங்களோட ஆராய்ச்சி முடிவுகளை ஒட்டி வச்சுப் பேசிக்கிட்டிருப்பாங்க. ஒரு பக்கம் பாத்தீங்கன்னா கடைக்காரங்க. நா மருந்து வச்சிருக்கேன், நா கண்டுபிடிக்க புது மிஷினு வச்சிருக்கேன்னு கண்காட்சி காட்டுவாங்க. திருவிழா மாதிரிதான். காலையிலெ எட்டுலேருந்து சாயங்காலம் ஒரு அஞ்சு மணி வரைக்கும் இப்படி. பயனுள்ள நாட்கள். புதுப் புதுப் பாதைகள். பெருஞ்சந்தையிலிருந்து சில அழகான மணிகளை வாங்கிக் கொண்டு வந்தது மாதிரியான ஒரு அனுபவம். இதுக்குத்தான், இந்தத் தெளிவுக்கும், தீர்மானத்துக்கும், ஒரு பரந்த புரிதலுக்காகவுந்தான் வருசத்துக்கு ஒன்னு ரெண்டு தரம் மாநாடுகளுக்குப் போறது.

சியாட்ல் மைய நகரம் அழகானது. அமெரிக்காவில் நிறைய ஊர்களில் சாலைகளில் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் இதுவோ மக்கள் கூட்டம் நடக்கும் உயிர்த் துடிப்பானது. பசிபிக் பெருங்கடல் பல மைல்கள் தள்ளியிருந்தாலும் (கடலைப் பார்க்க ரெண்டு மணி நேரம் கார்ல போகனும்னார் ஒரு நண்பர்) கடலின் தண்ணீர் வளைந்து வளைந்து சியாட்ல் வரை உள்ளே வந்திருக்கும். அதிலே படகுகள். மூடுபனி கவிந்திருந்தது ஒரு தரம். அந்தக் கரையிலே சாப்பாடு, வியாபாரம், கண்காட்சி, பூங்கா, மக்கள் கூட்டம். பைக் சந்தை (Pike place market) அழகானது. நண்பர் குழாமோடு ஓரிரவு உண்டு குடித்துக் கும்மாளமிட்டுத் தெருக்களில் நடந்து ஒரு நடனக் கூடத்துக்கு வந்தோம். அந்தோ விதிவசமே, திங்கக்கிழமை லீவுங்க!

எல்லாம் ஒவ்வொரு உலகங்கள். அந்த மாநாடு ஓருலகம், இந்த வலைப்பூ ஓருலகம், வீட்டிலொன்று, வேலையிலொன்று. உள்ளேயொன்று கிடந்து எல்லாத்தோடயும் கலந்துக்கத் துடிக்குது. இதுலயா, இதுலயா, எதுல நானிருக்கேன்னு ஒட்டி ஒட்டிப் பாக்குது. போவட்டும். அறிவியல்ல கொஞ்சம் பொழுதைப் போக்கணும்னு ஒரு எண்ணம். பாக்கலாம்!

1 comments:

said...

கடலின் தண்ணீர் வளைந்து வளைந்து சியாட்ல் வரை உள்ளே வந்திருக்கும்.2 வருடங்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்கு சியாட்ல்/டகோமாவிலுள்ள தங்கையைக் காணச் சென்றிருந்தோம்.

எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள்,பரப்புகள் மற்றும் மேகமூட்டங்கள் எனக்கு சரிவரவில்லை.மந்தமாய் இருப்பதாகப் பட்டது ஊர்.ஒரு வித நீர்நாற்றம் எங்கும் அடித்தது.

பாலை நிலம் பழக்கமாகி விட்டதாலோ என்னவோ..