பொம்பளை மாதிரி அடி!


ஒரு பையன் அழுதால் "பொம்பளை மாதிரி" அழாதே என்கிறோம். "பொம்பளை மாதிரி" என்ற அடைமொழி வலிமையின்மைக்கும், அடிபணிதலுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான் அண்மைய நாட்களில் கண்ட ஒரு சில விளம்பரத் தட்டிகளில் இதே அடைமொழி பெண்களை வலிவு கொள்ளச் செய்யும் விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. செரினா வில்லியம்ஸ் ஒரு விளம்பரப் படத்தில், பந்தை விளாசியபடி "Yeah, I hit like a girl" என்கிறார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக் குழுக்கள் "Fight like a girl" என்று சட்டைகளை அணிந்துகொள்கின்றன. எந்த அடைமொழி அவர்களை இழிக்கப் பயன்பட்டதோ, அந்த அடைமொழியையே அவர்கள் தமக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம். Fight like a girl என்பதைப் படித்த போது என் நினைவிற்கு வந்தவர்கள் பெண் புலிகள்தாம். தமிழ்ப் பெண்களின் வீரம் என்றால் புலியை முறத்தால் அடித்து விரட்டிய பொற்காலத்தோடு போயிற்று என நினைக்கும் அவலத்திலிருந்து தமிழினத்தின் வீர மரபைக் காத்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பெண்கள். தடை செய்திருக்கும் உலக நாடுகள் இவர்கள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலையடைந்த தமிழ் நிலத்தில் வீரத்தின் அடையாளமாக இவர்கள் போற்றப்பட வேண்டும்.

2 comments:

said...

//Fight like a girl என்பதைப் படித்த போது என் நினைவிற்கு வந்தவர்கள் பெண் புலிகள்தாம்.//

பெண்களுக்கு உரம் சேர்க்கும் வாக்கியங்கள் இவை.நிகழ்விலே சாகசம் செய்யும் இந்தப் பெண்கள் புறநானூற்றுப் பாட்டிகளின் கொள்ளுப்பேத்திகள் என்பது வரலாறு எழுதி வைக்கும்.

பாலாஜி-பாரி said...

அன்பின் சு.வ.,
நாம் அனைவரும் தாய்வழிச் சமுதாயத்தினர் என்ற இயல்பை பெற்றவர்கள். என்று நிலங்கள் பொருட்டு உடைமையாக்கல் உருவானதோ, அன்றிலிருந்து நமது முன்னோரும் இயல்பில் திரிந்து, பெண்களையும் உடைமையாக பார்க்கத் துவங்கினர். ஆனால் ஒரு இனம் எப்பொழுதெல்லாம் தனது இருத்தலுக்காக போராடுகின்றதோ அப்பொழுதெல்லாம், தாய்வழிச் சமுதாய இயல்பும் தங்களது இருத்தலுக்கு வழி நடத்துகின்றது. இதன் வெளிப்பாடே, பெண் புலிகள். மேலும், இந்த நாகரிக உலகில், இந்த உணர்வு கொச்சை படுத்தப்படுதலும், இதன் பொருட்டு ஒரு அழிவை ஏற்படுத்துதலிலும் முனைந்து இருப்பது மலிந்துள்ளது. ஆனால் தாய் இயல்பையும், இயற்கை நோக்கி செல்லும் எந்த இனமும் வீழ்வது அசாதாரணமானது.
இப்பதிவுக்கு நன்றிகள்.