சிலுவையில் தொங்கும் முயலும், முட்டையும்

இந்த வருடமும் ஈஸ்டர் வருகிறது! வழக்கம் போலவே முயலையும், முட்டையையும் கடைகளில் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பலூன் முயல், பஞ்சு முயல், துணி முயல், முட்டை முட்டாய், முட்டை ரொட்டி, முட்டைக்குள் முட்டாய் என்றும், டோரா முட்டை, ஸ்பைடர் மேன் முட்டை என்றும் பலவகையாக நீங்கள் பார்க்கலாம். இந்நாட்களில் ஏசுவை விட, புனித வெள்ளியைவிட அதிகமாகப் பேசப்படுவது ஈஸ்டர் கொண்டாட்டம், அப்போதைய துணிக்கடைத் தள்ளுபடிகள், பீர் கடை கொண்டாட்டங்கள் இவை பற்றித் தாம். ஒரு மனுசன், நீங்க யோசிக்கிறதுக்கு நாலு தத்துவத்தைச் சொல்லிட்டு, உங்ககிட்ட அதைச் சொன்னதுக்காக சிலுவையில தொங்கிப் போனாரே அதை நெனைக்கிறீங்களா, அல்லது அவரு மறுபடியும் வந்தாருன்னு கொண்டாட நெனைக்கிறீங்களா, அல்லது உங்களுக்கு சுகமும் துக்கமும் கொண்டாட்டாந்தான் என்ற பேரின்ப நிலையில இருக்கீங்களா? ஒன்னுமே புரியலையேப்பா. அது சரி, என்னத்துக்கு இத்தனை முட்டை? முட்டைக்கும் ஈஸ்டருக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை 40 நாள் விரதமிருந்தவங்கள்லாம் விரதம் முடிக்கிறப்ப தெம்புக்காக முட்டை சாப்பிடுவாங்களான்னு யோசிச்சேன். இருக்கலாம். ஒருத்தரு சொன்னாரு, முட்டை என்பது உயிர்ப்பின் அடையாளம். அதுக்குள்ளேருந்துதான் எல்லாம் வருது. அதே மாதிரி ஏசுவும் மறுபடியும் வருவார். சரி, இருக்கட்டும், முயல்? அதுவா, அது வந்து ஸ்பிரிங்க் வருதுல்ல, அது. துள்ளித் துள்ளிக் குதிக்குதுல்ல, அதான். ரொம்பச் சரி. உங்க கடைகளையும், 50% சிறப்புத் தள்ளுபடி விளம்பரங்களையும் பாத்துட்டு, உங்களுக்காகத் தொங்கின ஆளோட ஆத்மா சாந்தியடைஞ்சாச் சரிதான்.

படம்: எல்லாப் பெற்றோர்களும் தலா 12 பிளாஸ்டிக் முட்டைகளை வாங்கி அதற்குள் பரிசை (மிட்டாய் என்று அர்த்தம்) வைத்துப் பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அங்கே ஆசிரியர்கள் அதை 'ஒளித்து' வைத்துவிட்டுப் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார்கள். நல்ல செய்தி என்னவென்றால், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு எண்ணைச் சொல்லிவிட்டு அந்த எண் போட்டிருக்கும் முட்டையைத்தான் அந்தப் பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு எண்ணையும் 12 முட்டைகளின் மேல்தான் போடுவார்கள். இதனால் எல்லோருக்கும் ஒரே எண்ணிக்கையுள்ள முட்டைதான் (12) கிடைக்கும். தெறமை இருக்க புள்ள பொறுக்கிக்கன்னு விட மாட்டாங்க. ஏன்னா சில பிள்ளைகள் பொறந்ததுலேருந்து முட்டை பொறுக்கிக்கிட்டே இருக்கும், சிலதுகளுக்கு முட்டைன்னா என்னன்னே தெரியாது, அதை எங்க ஒளிச்சு வைப்பாங்கன்னே தெரியாது. அப்படி இருக்கப்ப “இந்தா புள்ளைகளா, இங்கின 240 முட்டை இருக்கு, தகுதியும் தெறமையும் இருக்க புள்ளைக போயி பொறக்கிக்கங்க”ன்னா வகுப்பு வெளங்குமா? அதுக்குத்தான் சமமாக் குடுக்கணும்கறது. படம் மாசிலன் எடுத்தது.

0 comments: