சில புழுக்களை ராணியாக்குவது எப்படி?

தேனீக்களின் வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். சமூக ஒழுங்கு மட்டுமில்லை, புதுப்புது உயிரியல் விளக்கங்களையும் தேனீக்களிடமிருந்து பெறலாம். அதுமாதிரியாக வந்திருப்பதுதான் இந்தப் புதுக் கதை. உங்களுக்கு ராயல் ஜெல்லின்னா என்னன்னு தெரியுமா? வளர்ந்த தேனீக்களின் தலைப்பகுதியில் (உமிழ்நீர் சுரப்பிகளுக்கருகில்) ராயல் ஜெல்லி சுரக்கிறது. அதுவே தேனீக்களின் புழுப் பருவத்தில் முக்கியமான உணவு. எல்லாப் புழுக்களும் ஒன்றுதான். ஒரே ராணித் தேனீயால் இடப்பட்ட முட்டையிலிருந்து வந்தவைதான். எல்லாப் புழுக்களுக்கும் சில நாட்களுக்கு ராயல் ஜெல்லி கிடைக்கும். ஆனால் தொடர்ந்து அதிக அளவில் ராயல் ஜெல்லி மட்டுமே புகட்டப்படும் புழுக்கள் மட்டுமே பின்னாளில் ராணித் தேனீயாகின்றன. புரிந்துகொள்ள வேண்டிய 1) ராயல் ஜெல்லியைத் தாராளமாகச் சாப்பிடும் புழுக்கள், இனப்பெருக்கத் திறனும், நீண்ட ஆயுளும், பெரிய உருவமும் கொண்ட ராணித் தேனீக்களாகின்றன; அதே வேளையில் ராயல் ஜெல்லி கொஞ்சூண்டு கிடைத்த புழுக்கள் சிறியதான, குறைந்த ஆயுளைக் கொண்ட, மலட்டுத்தன்மை கொண்ட வேலைக்காரத் தேனீக்களாகின்றன. அப்படின்னா அந்த ராயல் ஜெல்லியில என்னமோ இருக்கு. சரி அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

நம் உடம்பு மரபலகுகளின் (ஜீன்கள்) வேலைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு மரபலகு எல்லா நேரங்களிலும் எல்லாத் திசுக்களிலும் இயங்கிக் கொண்டு இருப்பதில்லை (இயங்குதல் என்பது அதற்கான புரதத்தை உண்டாக்குதல் எனக் கொள்க). சில நேரம் அமைதியா இருக்கும். அந்த அமைதிக்குக் காரணம் அந்த மரபலகின் மூலக்கூறுகளில் (டி.என்.ஏ) ஏற்படும் ஒரு சின்ன வேதியியல் மாற்றம், Methyl ஏற்றம். (சரக்கு அடிச்சா அதுல இருக்கது Ethyl alcohol. எத்திலை விடக் கொஞ்சம் சிறியது மெத்தில். ஆனா நீங்க சரக்கடிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கான்னு கேக்கப்படாது. இல்லன்னு நானும் சொல்ல முடியாது!). மெத்திலேற்றம் நடந்த மரபலகு அமைதியா இருக்கும். அமைதியா இருந்தா அது உண்டாக்க வேண்டிய புரதம் உண்டாகாது. அந்தப் புரதம் இல்லன்னா அந்த செல்லோட வேலைப்பாடு மாறும். ஒன்ன மாதிரி நாலு பேரு இருந்தா வேலை நடந்துடும் அப்படின்னு நாம சொல்றது இல்லையா. அதுமாதிரிதான், ஒரு நாலு புரதங்கள் சேர்ந்தா, அல்லது இல்லாமப் போனா, உடம்பே மாறிப் போயிடும். இந்த மெத்திலேற்றத்தைச் செய்யும் ஒரு நொதிக்குப் பேர் DNMT3. சில மரபலகுகளை DNMT3 மெத்திலேற்றம் செய்து வைக்கும்போது அந்த மரபலகு அமைதியாக இருக்கிறது. இப்போ நீங்க DNMT3 ஐ லபக்குன்னு புடுங்கி எறிஞ்சுர்ரீங்க, அப்போ என்னாகும், எந்தெந்த மரபலகுகளை DNMT3 அமுக்கி வைத்திருந்ததோ அதெல்லாம், மடை திறந்த வெள்ளமாகப் பாயும். அந்தப் புரதங்களெல்லாம் அதிகமாக உருவாகி, செல்லை, உடம்பை மாற்றும். புரிந்துகொள்ள வேண்டிய 2) DNMT3 ஒரு விசை. அதை இயக்குவதன் மூலம் முக்கியமான மரபலகுகளின் வேலைகளை இயக்கலாம். சரி, இதுக்கும் தேனீக்கும் என்ன சம்பந்தம்? அதான் அடுத்தது.

தேனீக்களின் புழுக்கள்ல இருக்க DNMT3 ஐ நீக்கிட்டா அந்தப் புழுக்கள் எல்லாம் ராணித்தேனீயா மாறுது. பூம்!! ராயல் ஜெல்லி புகட்டாமலேயே இது நடக்குது. இது எப்படி நடக்குது? DNMT3 இல்லாத போது புழுக்களில் இருக்கும் 'இராணித் தேனீயாக்கும்' புரதங்கள் தங்குதடையின்றி உருவாகின்றன. சாதாரணப் புழுக்களில் ராயல் ஜெல்லியை நன்றாகப் புகட்டினால்தான் இப்படியான ஒரு நிலை ஏற்படும். அப்படியென்றால், ராயல் ஜெல்லி எப்படியோ ஒரு வழியாக DNMT3 மூலம் ஏற்படும் மெத்திலேற்றத்தைக் குறைத்து ராணியாவதற்குரிய வழியைச் செய்கிறது. புரிந்துகொள்ள வேண்டிய 3) தேன் புழுக்களின் உடலிலிருந்து DNMT3 ஐக் கழற்றிவிட்டால் அத்தனையும் ராணியாகிவிடும்.

அதுனால என்னா இப்ப?
1) நாம் இயற்கையைப் படுத்தும் பாட்டில் உலகம் முழுக்கத் தேனீக்கள் குறைந்துகொண்டே வருகின்றன. ராணித் தேனீக்களை நிறைய உருவாக்கினால் கூடுகளை உயிர்ப்பித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
2) ராயல் ஜெல்லியை ஏற்கெனவே புட்டியில அடைச்சு வச்சு, நீடித்த வலிமை, குன்றாத இளமை, அழகு அப்படின்னு கந்தர் சஷ்டி கவசம் பாடினா கிடைக்கக் கூடிய அத்தனை நன்மைகளும் ராயல் ஜெல்லியால கிடைக்கும் அப்படின்னு ஒரு இணையத்துல கடை கட்டிக்கிட்டுத் திரியிறாங்க்ய. அவங்களுக்கு லாபம் பார்க்க இன்னொரு 'அறிவியல் கண்டுபிடிப்பு.'
3) தேனீக்களுக்கு என்ன? DNMT3 இன்னும் எதுக்குத் தேவைன்னு தெரியாத நிலையில் அதைப் புடுங்கி எறியுறது தேனீக்களுக்கு ஆபத்தாகப் போகலாம். இன்னொரு மரபுமாற்றம் செய்யப்பட்ட வீரிய கொடுக்கால் இப்போதிருக்கும் தேனீக்கள் கொட்டப்பட்டு விரட்டப்படப் போகின்றனவா?

17 comments:

said...

/சில புழுக்களை ராணியாக்குவது எப்படி?/

[மவனே, அவுங்க மட்டும் தலயங்கத்த வயக்கம்போல வாயப்பயத்த வெளக்கெண்ணைல அமுக்கி வியுங்கனதுமாதிரி வாசிச்சு வெச்சாங்க, இன்னிக்கு ஒன்னோட போஸ்டு ஜூடான இடுவல செமஜோர மெதந்துகிட்டிருக்கும். அறிவியல வளக்கணுமின்னாலும் இப்புடி ஒரு அடாவடி தலேயங்கமா?] ;-)

said...

நான் கூட என்னமோ நல்ல தீனின்னு வந்தேன். அப்புறம் தேனியாஆஆஆ
::)))))

சுந்தரவடிவேலும் சோதியில் ஐக்கியம்ன்னு ஒரு தலைப்பு மிஸ்ஸாயிடுத்து..

said...

அண்ணே, பச்சக்குன்னு தலையில ஒட்டிக்கிறாமேரி தலைப்பு வக்யணுமின்னு வச்சுப்புட்டேன். என்னய எதுவும் வம்புல இஸ்த்துவுட்றாதீங்கோ :))

Anonymous said...

கருத்து ஒன்னு ராணித்தேனிகல் குறைந்து கொண்டு வருவதை ஏற்க்கமுடியாது சில இடங்களில் ராணிகள்தான் டாப்பு,

கருத்து ரெண்டு ரஜல் ஜெல்லி எல்லாம் சுமா பம்மாத்து கடைசியில் புச்வானமா பூடும்.

கருத்து மூணு, நிச்சயமா ரானியாக வேண்டிய புளு, ஒரு கொடுக்கு கிட்ட வசமா மாட்டிக்கிட்டு.

said...

நான் ஹூக்கு மாட்டிவிடவே தேவையில்லை. அது தானே அன்னைத்தேதிக்குப் பரபரப்பைத் தேடி தம்பியோட புளக்கு வூட்டாண்டே வந்து, "மவனே என்ன பத்தித்தானே சொல்லிருக்கே. செருப்பு பிஞ்சிடும் ஷட் அப்"புன்னு சொல்றாப்ப, கப்புன்னு குனிஞ்சு குந்திக்கிட்டா, வாலு வேறே வூட்டாண்டே நெருப்பு வெய்க்க வளந்து வளைஞ்சு போய்டும். எவர எதுக்கு குட்டி ஹிட்டாவினாத்தான் என்ன? ஹிட்டாவினா செரிதேன்.
அவ்ளோதான்.

said...

பாருங்க, சொல்லி வாய் மூடல, கொழுவி சாப்பிட வந்துட்டாரு! சோதி இல்ல கொழுவி, இருட்டுக்குள்ள லைட்டடிக்கிறேன்:))

அனானி,
உலக அளவில் தேனீக்கள் குறைந்து வருகின்றன. காரணம், நாம் பயன்படுத்தும் உயிர்க்கொல்லி மருந்துகள், உரங்கள் முதலானவை அவற்றின் நாளாந்த வேலைகளைக் குழப்பிவிடுகின்றன என்றொரு கருத்து உண்டு. இது ஒரு பெரிய இழப்பு, மில்லியன் கணக்கான வருடங்களாக வாழ்ந்து வரும் தேனீக்களுக்கும், அவற்றினால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கையால் கிடைக்கும் உணவை அண்டியிருக்கும் நமக்கும்.
//சில இடங்களில் ராணிகள்தான் டாப்பு,// ஆமாம், தேன் கூட்டில் ராணித் தேனீயே தலைமை. அதனாலதான் அந்தச் சமூகம் உருப்படியா மில்லியனாண்டுகளாக நீடிக்கிறது என்கிறீர்களா, அதுவும் சரிதான்:)
கருத்து ரெண்டு- எதை வச்சுச் சொல்றீங்கன்னு தெரியல. யூகிக்கலாம். வேணாம்.
மூனு- நிறைய இடங்களில் இதுதான் கதை:(

said...

//எவர எதுக்கு குட்டி ஹிட்டாவினாத்தான் என்ன? ஹிட்டாவினா செரிதேன்.
அவ்ளோதான்.//
:))

Anonymous said...

ராஜல் ஜெல்லி சூப்பர் மருந்துதான் அது நமக்கு செரிமானம் ஆகாது அதால வேண்டாம், அதில் விஷம் ஏதாவது இருக்கா அய்யமாக இருக்கு.

said...

எதுக்கும் பாத்துப் போங்க..:)

said...

//ராஜல் ஜெல்லி சூப்பர் மருந்துதான் அது நமக்கு செரிமானம் ஆகாது அதால வேண்டாம், அதில் விஷம் ஏதாவது இருக்கா அய்யமாக இருக்கு.//

ராயல் ஜெல்லியை நிறைய நோய்களைத் தீர்க்கும் மருந்தாகக் கூவி விற்கிறார்கள். ஆனால் அவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியாது. அதிலிருக்கும் வேதிப் பொருட்களாக அறியப்பட்டவை கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் சர்க்கரை. இவற்றில் எது நன்மை பயக்கிறது என்று சரிவர அறியப்படவில்லை. ஒவ்வாமை ஒரு பெரிய கடும் விளைவு. இது குறித்து நான் வாசித்தது இது: http://www.quackwatch.com/01QuackeryRelatedTopics/DSH/bee.html

said...

மலைநாடான் :))

said...

வழக்கம் போல நன்றாக எழுதி இருக்கிறாய். தேனிக்கள் எப்போதுமே ஆச்சர்யத்தைத் தருகின்றன.

said...

சுந்தரா,இங்க ஆஸ்ட்ரேலியாவிலிருந்து அவ்வப்போது குட்டிகள் தொலைபேசி ராயல் ஜெல்லி வாங்குங்க எனச் சொல்லி பெரிய பிராணாவஸ்தையாக இருக்கிறது;கேட்டால் , அதை சாப்பிட்டால்,இந்திரனாகலாம்,சந்திரனாகலாம் என்ற ரேஞ்சுக்கு பேசுறாங்ய..
என்னமோ ஒண்ணும் புரியலப்பு...

அப்புறம்,தலைப்ப பாத்தா கொஞ்சம் விவகாரமா இருக்கு,சாண வாளி தூக்கிகிட்டு ஆள் வந்துடாமப்பு,சூதானாமா இருந்துக்க...கொஞ்சம் பயந்து போயித்தான் சொல்லுறேன்..

Anonymous said...

இயல்பான தமிழில் அழகாக உயிரியற் செய்திகளைச் சொல்லியிருக்கீங்க.
பாராட்டுக்கள்! தொடரவும்!

- பிரதாப்

said...

தங்கமணி, நன்றி பையா!

அறிவு, எதையாவது வாங்கித் தின்னுப்புடாதே! மற்றபடி தலைப்பு இந்த இடுகைக்கு மட்டுமே சம்பந்தமுள்ள அக்மார்க் அறிவியல் தலைப்பூ!

நன்றி பிரதாப், முயல்கிறேன்!

said...

நான் ஏமாறலையே!

:-))

said...

//நான் ஏமாறலையே!//
:)) நீங்க யாரு!