அட்லாண்டாவில் நடந்த பேரணி !

நேற்று அட்லாண்டாவில் நடந்த பேரணிக்குப் போயிருந்தோம். இங்கிருந்து சுமார் 300 மைல்கள். எங்கள் ஊரிலிருந்து 14 பேர் கிளம்பிப் போனோம். பேரணி பற்றிய அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது. இன்னும் சில நாட்கள் அவகாசமிருந்திருந்தால் மேலும் பலர் வந்திருக்கக் கூடும். சனிக்கிழமை காலை 11லிருந்து 1 மணி வரையில் சி.என்.என் நிறுவனத்தின் முன்னுள்ள நாற்சந்தியில் அமைதியான முறையில் இந்தப் பேரணி நடந்தது. இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி சாலையோரங்களில் நின்றிருந்தோம். ஏறக்குறைய கலந்துகொண்ட அனைவரும் கருஞ்சட்டையணிந்திருந்தார்கள். நடந்து சென்றோரும், வாகனங்களில் சென்றோரும் பார்த்துவிட்டும், கையசைத்தும், வாகனங்களில் ஒலிப்பானை அழுத்தியும் ஆதரவினைத் தெரிவித்துப் போயினர். வாடகை வாகனவோட்டிகள் கிட்டத்தட்ட அனைவருமே கையசைத்துச் சென்றார்கள். நான் முன்பு கலந்துகொண்ட வாஷிங்டன் பேரணி, மேடைகளை அமைத்து, ஒலிபெருக்கிகள், பெரும் படத் தட்டிகள் போன்றவற்றை வைத்து, உரைகள் நிகழ்த்தி, குரலெழுப்பியவாறு அமைந்திருந்தது. அதைப் போலக் குரலெழுப்பலாமா என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைக் கேட்டபோது, இதனை மௌனப் பேரணியாகவே அமைத்திருக்கிறோம் என்றார். தட்டிகளையும் இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உள்ளூர்க் காவலர்களின் விதியும்கூட. சிறுவர்கள் பலரும் பதாகைகளைத் தாங்கியிருந்ததும், பெற்றோர்கள் அவர்களிடம் அப்பதாகைகளைப் படித்து அதுகுறித்துப் பேசிக் கொண்டிருந்ததும் காணக்கூடியதாக இருந்தது.

பல நண்பர்களைச் சந்தித்தேன். புதிய நண்பர்களும் கிடைத்தார்கள். தமிழர்களிடையே பிளவு இருக்கிறது இருக்கிறது என மீண்டும் மீண்டும் கூறியே நம்மைப் பிளவு கொள்ள வைக்கும் அரசியல்வாதிகளுக்கும், சதிகாரப் பத்திரிகைகளுக்கும் நடுவில், ஒற்றுமையாகத்தான் தமிழினம் இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்ப நிலைநாட்டுகின்றன இத்தகைய நிகழ்வுகள். எத்தனையோ மாறுபட்ட கருத்துள்ளவர்களை நான் நேற்று கண்டேன். இந்தியா, ஈழம், தீவிரவாதம், மதம், கட்சிகள் என்ற கருத்துக்களில் அவர்கள் மாறுபட்டிருந்தாலும், அந்த இயல்பான தனிமனித மாறுபாடுகளைக் கடந்து, அவர்களை ஒன்றிணைத்திருப்பது, மனித நேயமும், தமிழினத்தின் மீதுள்ள அன்பும், நம் அண்டையில் ஒரு கொடூர மனிதவுரிமை மீறல் நடக்கும்போது அதனைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற தர்ம சிந்தனையுமே ஆகும். அச்சிந்தையும், தமிழுணர்வுமே வாண்டர்பில்ட் பல்கலையிலிருந்து ஒரு மாணவனைத் தன்னந்தனியனாய் 4 மணிநேரம் ஓட்டிக் கொண்டு வந்து கலந்துகொண்டுவிட்டுப் போக வைத்தது.  எத்தனையோ நண்பர்களுக்கு வர விருப்பமிருந்தும் பல்வேறு சூழல்களால் உடனடியாகக் கிளம்ப முடியாத நிலையிருந்தது. அவர்களுக்காகவே சார்லஸ்டன் நகரிலும் ஒரு பேரணியை நடத்துவதென்று முடிவு செய்துள்ளோம். இதைப் படிக்கும் அண்டை மாநிலத்தவர்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டும். ஈழப் போராட்டத்தின் இந்தக் கட்டமானது மிகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழர்களை ஒன்றிணைப்பதாகவும் இருப்பதைக் காண்பது, ஈழத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தென ஆறுதலளிக்கிறது. எங்கும் ஓங்குக தமிழர் ஒற்றுமை!

4 comments:

said...

சுந்தர வடிவேல்,
*\\தமிழர்களிடையே பிளவு இருக்கிறது இருக்கிறது என மீண்டும் மீண்டும் கூறியே நம்மைப் பிளவு கொள்ள வைக்கும் அரசியல்வாதிகளுக்கும், சதிகாரப் பத்திரிகைகளுக்கும் நடுவில், ஒற்றுமையாகத்தான் தமிழினம் இருக்கிறது\\*

தமிழர்களை பிரிப்பதற்கு தீனி போட நிறையவே இருக்கின்றார்கள். அதையும் தாண்டி உணர்வு ஓங்கி நிற்பதையிட்டு மகிழ்ச்சி.

பேரணியை பற்றி தமிழ் உணர்வுடன் இங்கு இட்டமைக்கு நன்றிகள்

Anonymous said...

அருமை சுந்தர் அவர்களே,
தொடரட்டும் உங்கள் பணி.
சிபி அப்பா.

said...

நல்லது தம்பி!

said...

தமிழ் உணர்வுடனும் மனித நேயத்துடனும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அனைவரையும் அமெரிக்க வழியான அரசியல் தலைவர்களுக்கும் ஆங்காங்கே உள்ள உறுப்பினர்களுக்கும் இணையத்தின் மூலம் மடல்கள் அனுப்பிவைக்கச் சொல்லுங்கள்.
தொடர்ந்து செய்வோம் இனப் படுகொலை நிற்கும் வரை.