அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்

அவமானச் சுவரைப் பற்றிய இந்தக் கட்டுரையை ( thamuyesa (தமுஎச): அவமானச் சுவர்) வாசித்தபின் எனக்குத் தோன்றியவை:

ஆதிக்க சாதி இந்துக்களுக்கு அரசு, அதிகாரிகள், காவல் துறை, கட்சிகள், பெரும் மக்கள் படை, ஊடகங்கள், செல்வம் என எல்லா ஆதரவுகளும் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாகத் தாங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் என்ற சாதிய இறுமாப்பும் இருக்கிறது. ஆனால் இதுநாள் வரையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு அவமதிக்கப்படும் தலித்துகளுக்கு ஆதரவு எது? பெரும்பான்மையாக இருக்கிற சாதி இந்துக்களின் மனங்களிலே 'தாம் உயர்குடிகள்' என்ற நினைப்பு ஒழிந்து, அனைவரும் மக்கள்தாம் என்ற புரிதல் வந்தாலொழிய அங்கே அமைதி நிலவாது. இவ்விடத்தில் வலுத்தவர்கள் இரண்டு விதங்களில் செயற்படலாம். ஒன்று தங்களது அதிகாரங்களைத் தட்டியெழுப்பலாம். அல்லது தங்களிடம் இருக்கும் ஆன்மாவைத் தட்டியெழுப்பலாம். ஆன்மாவைத் தட்டியெழுப்புவது கடினம். அதற்கு இத்தனைக் காலங்களாக, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்திருந்த சாதிய 'உயர்வை'த் தொலைக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒன்றுதான் என்ற சமத்துவத்தின் தாங்கமுடியாத அவமானத்தை, தலித்துகளும் தாமும் ஒரே பிறவிதான் என்ற உண்மையின் வலியைத் தாங்க வேண்டியிருக்கும். தாம் மட்டுமே துய்த்து வந்த ஊர் வசதிகளான குளம், கிணறு, பள்ளி, கடை, கோயில் எல்லாவற்றிலும் சம உரிமையை தலித்துகளோடு பகிர்ந்துகொள்ளவேண்டிய கீழ்நிலையை அடைய நேரும். ஆனால் மற்ற தேர்வான அதிகாரத்தைக் கையிலெடுப்பது சுலபம். கூப்பிடு தூரத்தில் தம் சாதியைச் சேர்ந்த செல்வாக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட ஒரு போராட்டத்துக்கு என்னவிதமான தீர்வினை ஆதிக்க இந்துக்கள் எடுக்க முடியும்? சுலபமான தீர்வே. தம்மிடம் இருக்கும் எல்லா வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை அடக்கலாம், திரிக்கலாம், பூசி மெழுகலாம், ஒன்றுமே இல்லாமல் ஆக்கலாம்.

ஆக, இது ஆதிக்க சாதி மனிதருக்குள்ளே ஆன்மாவுக்கும் அதிகாரத்துக்கும் நடக்கின்ற போட்டி. எதைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். தலித்துகள் இன்றைக்கு 'தேசிய'த் தலைவர்களைக் கொண்டு வந்து சமத்துவத்தை நிலைநாட்டப் பார்க்கலாம். ஆனால் எல்லாக் கூட்டமும் போனபிறகு, எல்லா ஆதரவுகளும் அகன்ற பிறகு அங்கேயிருக்கும் சிறுபான்மை தலித்துகளுக்கு எவரால் பாதுகாப்பு அளிக்க முடியும்? ஆதிக்கம் செலுத்தும் சாதி இந்துக்களிடமிருந்து அவர்களது சாதிய வெறி அகன்று, எல்லா மனிதர்களும் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால்தான் தலித்துகளுக்குப் பாதுகாப்பு. அப்போதுதான் தலித்துகளுக்கு சமவுரிமையை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

ஆதிக்க சாதி இந்துக்களிடையே, உத்தப்புரமாகட்டும், இந்தியாவின் வேறு எப்பகுதியுமாகட்டும், 'தாம் உயர்ந்தவர்கள்' என்ற நிலையை உடைக்க, எல்லோரும் சமம் என்ற உணர்வைப் பரப்ப அரசும், சமூக அமைப்புகளான கோயில்கள், சங்கங்கள் முதலானவையும், ஊடகங்களும் என்ன செய்கின்றன? நம் சமூகச் சூழலில், சிறுமைக்கும், பெருமைக்குமான வேறுபாடு தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டே வருகிறது. உதாரணமாக இந்தத் தொழில் செய்வது அசிங்கம், இது உயர்ந்த தொழில் என்று இடைவிடாது சுட்டப்படுதல். சுபவீ அவர்களின் கட்டுரை ஒன்றில் படித்தபோதுதான் திருக்குறளின் ஒரு வரி சுள்ளென்று உறைத்தது, "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்." அதாவது செய்கின்ற தொழிலால் சிறப்பு வந்து சேர்வதில்லை. எல்லாத் தொழிலும் ஒன்றுதான். ஆனால் வருணாசிரமத்தின்படி கட்டமைக்கப்பட்ட நம் சமூகத்தில் இது பெரிது, இது சிறிது என்ற தொடர்ச்சியான புகட்டுதல் நடந்தபடியே இருக்கிறது. இது நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அதனால்தான் டெல்லியில் இடவொதுக்கீட்டை எதிர்த்த மருத்துவ மாணவர்கள் இனி நாங்கள் சிரைக்கவும், சாலை கூட்டவும் போகலாம் என்று வேடம் போட்டு, அத்தொழில்களை அவமதிக்க முடிகிறது. இது மேன்மை, இது பெரிது, இதுதான் உயர்ந்தது, புனிதமானது என்று தொடர்ச்சியாக ஒரு கற்பிதம் இந்தியக் காற்றில் செறிந்து அடர்ந்து மிதக்கிறது. மேகக்கூட்டத்தைப் போல அது இந்தியப் பெருநிலமெங்கும், ஏன் கடல்களைக் கடந்து வாழும் இந்தியர்களிடையேயும் அது கவிந்துகொள்கிறது. சாதிய இந்துக்கள் அந்த உயர்ந்த கற்பிதத்தைத்தான் சுவாசிக்கிறார்கள். அந்த உயர்ந்த நிலையினை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாழ்ந்தவர்களிடமிருந்து தம்மைத் தெளிவாக, நன்றாகப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த அமைப்பை இந்து மதமும், அதன் ஆணி வேரான வருணாசிரமும் நன்கு காப்பாற்றி வைத்திருக்கின்றன. பிறப்புவாரியாக உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் ஒரு மதமும், அதனைக் குறை களையாது அப்படியே பின்பற்றுவோரும், அதற்காகப் பெருமை கொள்வோரும் இருக்கின்றவரை இந்தியர்களிடையே ஒற்றுமை இருக்காது. சமூக மாற்றத்தை, தனிமனிதருக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்தாமல் வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வது பயன் தராது.

6 comments:

said...

சுந்தரா,

மிக நேர்த்தியாக உட் சென்று மன் அவலத்தின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்திருக்கிறாய்.

இது போன்ற புகட்டல்கள் சமூகத்தாலும், கண் மூடியான பொற்றோர்களாலும் எந்த விதமான கேள்விகளுக்கும் அப் புகட்டல்களை உட்படுத்தாமல் தலை முறையாக கையிறக்கம் பெறப் படுவதாலேயேதான் இது போன்ற வன்முறை எண்ணங்கள் செழித்து வளர்கிறது.

என்னுடைய சிறு எதிர் பார்ப்பு என்னவாக இருக்கிறது எனில், எல்லா இடங்களிலும் பொருளாதாரமும், கல்வியறிவும் நீக்கமற நிறைந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது என்ற நிலையில் இது போன்ற வன் முறை எண்ணங்கள் ஒழிய வாய்ப்புகள் அதிகம் என்பதே.

அந் நிலையில் நீ குறிப்பிட்ட எது போன்ற மன ஆயுதத்தை அவர்கள் கைலெடுக்கப் போகிறார்கள் என்பதனை இக் காரணிகளும் நிர்ணயிக்கலாம், அது வரையிலும் காட்டு வாசிகளாக பிறந்து, தன்னை தூக்கி நிறுத்தி, ஒரு காட்டு வாசியாகவே மரணித்தல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்...

said...
This comment has been removed by the author.
Anonymous said...

i agree with the essence of your article. At the same we should not degrade the communal harmony and unity. unless there is a common banner which will unite people, we can't avoid short sighted castist behaviour. A banner like united Hindustan may work to eradicate other differences. Govt also must ensure that all people are treated equally and rewarded based on their merits rather than caste or religion. it begins from the top

Params

Anonymous said...

If these disscriminations are on account of Hinduism and Varnasharama Dharma alone then you should know certain things:
1, No hindu movement or mutt or organisations like VHP justify untouchability and discrimination
against dalits.In 1964 when VHP was
formed they declared that they are
against untouchability and discrimination against dalits.
2, RSS trains all castes in Vedic
learning.
3,These days it is accepted that
there are dalit christians and
dalit muslims and they too face
discrimination
4,Ma Amritananda Mata , Sathya Sai Baba and many other Hindu saints
of these times are non-brahmins
and are accepted by Hindus.

There should be a social movement against untouchability
and discrimination and all parties
and movements including hindu
movements should join that.
But what is happening? Punitha Pandian editor Dalit Murasu
refuses to join hands with CPI(M) in this and argues that abolition
of Hinduism is the only solution.
DK is praising the government.
Other political parties are keeping
a safe distance from CPI(M) in this
issue. So are the caste associations and heads of mutts.
This is a tragedy because except CPI(M) others do not see this as a problem worth fighting. By demolishing the wall the state has
taken a step forward but by trying to concede the demands of other castes it has taken two steps backwards. So the wall is gone
but not the discrimination.

said...

//எல்லா இடங்களிலும் பொருளாதாரமும், கல்வியறிவும் நீக்கமற நிறைந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது என்ற நிலையில் இது போன்ற வன் முறை எண்ணங்கள் ஒழிய வாய்ப்புகள் அதிகம் என்பதே.//
ஒத்துக் கொள்கிறேன் தெகா. மனதுக்குள்ளே சாதியக் கூறுகள் இருந்தாலும் மாற்றாரின் உரிமையைப் பறிக்கும் அளவுக்கு நிலை செல்லாது. அமெரிக்காவில் நம் சமூகத்தினரிடையே இதை ஓரளவு காணமுடிகிறது. அதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒற்றுமையைக் குலைப்பதற்கான சதிகள் தொடர்ந்தும் அரங்கேறுவதைப் பார்க்கமுடிகிறது.

பரமபிதா,
//unless there is a common banner which will unite people, we can't avoid short sighted castist behaviour.//
சரிதான். ஒரு குடையின்கீழ் திரள்வதுதான் பலம் தரும். ஆனால் அதனையடுத்த வாக்கியத்தில் குறிப்பிடுவதைப் போல, சாதிய வேறுபாடுகளைக் கற்பித்துக் காப்பாற்றும் ஒரு மதத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைவது எவ்வாறு சாத்தியம்? அதே நேரத்தில் தனிமனிதர்களுக்கு ஆன்மீகத்துக்கான தேவையிருப்பதையும் நான் மறுக்கவில்லை.

said...

இந்தப் பதிவை இப்போதுதான் வாசித்தேன். நன்றாக எழுதி இருக்கிறாய்.

இந்து மதம் என்ற அமைப்பு இப்போதும் வருணாசிரமத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது. அதன் சாமியாகள் மத அமைப்புகள் போன்றோர் வெளிப்படையாக சாதி வேறுபாட்டை அரசியல் காரணங்களுக்காக பாவிக்க முடியவில்லையே தவிர அவர்கள் அதை பாதுகாக்கும் எல்லா முயற்சியையும் செய்யவே செய்கிறார்கள். சங்கராச்சார்யார்கள் சாதி மற்றும் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்தையே இன்றுவரை வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றனர். காஞ்சி மடத்தின் பெரிய பரமாச்சார்யாரின் வருண்ணாச்சிரம நிலைப்பாடு பற்றி நக்கீரனில் அக்னிஹோத்திரம் தத்தாச்சாரியார் எழுதிய கட்டுரைகளில் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டது. வடக்கில் சங்கராச்சாரியார்களின் சாதி அபிமானம் இன்னும் வெளிப்படையானது. இதையெல்லாம் எந்த இந்து அமைப்புகளும் (RSS or VHP) கண்டித்தோ, இந்தக்கராணங்களுக்காக இவர்களை புறக்கணித்தோ செல்லவில்லை மாறாக இவர்களை வணங்கியும், வாழ்த்தியுமே செல்கின்றன.

எல்லா மதங்களின் அடிப்படை குணாதிசயமே ஏதாவது ஒன்றை தவறானது, கீழானது என்ற கற்பித்தத்தை கொண்டு இயங்குவதுதான். ஆபிரகாமிய மதங்களுக்கு மற்ற நம்பிக்கையாளர்கள் கீழானவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக, பாவிகளாகத் தெரிவது போன்றதே இந்து சமூகத்தில் படிநிலைகளாக அமைந்த சாதியமைப்பில் வெளிப்படுவதும். ஆனால் கடந்த நூற்றாண்டில் போடப்பட்ட இந்து மதம் என்ற புதிய வட்டத்துக்குள்ளேயே இந்த படிநிலை தாழ்த்துதல் தெரிவதால் அது புதிராகவும் ஒரு அமைப்புக்குள் நிகழ்கிற ஏற்றத்தாழ்வாகவும் தோற்றம் காட்டுகிறது. ஆனால் இது ஒரு அமைப்புக்குள் இருக்கிற ஏற்றத்தாழ்வல்ல.