நான், எங்க தாத்தா மற்றும் கமலஹாசனின் தாயுள்ளம்

வாரமானாலும், வாரக் கடைசியானாலும் விடியலிலிருந்து எனக்குச் சுழல்வதாகத் தெரியும் கடிகாரம் என்னையும் நிறுத்துவதில்லை. என்னால் இந்த இயக்கமின்றியும் ஓய்ந்திருக்க முடியாது. இது சைக்கிளை மிதிப்பதை நிறுத்திவிட்டால் விழுந்துவிடுமோ என்ற அச்சங்கொண்ட ஓட்டமில்லை. காற்றைக் குடித்து நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். சில நேரம் பாயும். பதுங்கித் தேங்கும். கழிவு கலக்கும். தெளியும். ஆறு மாதிரிதான். நேற்று மதியம் தோட்டத்தைக் கொத்தி, வாழைக் கன்று வைத்து, புல்லுக்கு மருந்தடித்துப் பின் மதியம் பிள்ளைகளோடு கதை படித்தேன். பெரியவர் பள்ளிக்குப் போகிறார். அஞ்சரையாச்சே. பள்ளிக்குப் போகும் வரை தமிழில் இனித்த வாய் இப்போது ஆங்கிலத்துக்கு அடிக்கடித் தாவுகிறது. மீட்டு மீட்டுக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. வாரக் கடைசித் தமிழ்ப் பள்ளி கொஞ்சம் உதவுகிறது. மற்றபடி பிள்ளை தமிழில் பேசுவது வீட்டின் கையில்தானிருக்கிறது. ஒரு பெரிய ஆங்கில வெள்ளத்தை எதிர்த்துத்தான் தமிழ் வாய்க்கால் பாயவேண்டியிருக்கிறது.

செவுடர் தாத்தா அப்பாவுக்குச் சித்தப்பா. செவுடர் என்பதை வசையாகவோ ஊனமாகவோ உணர்த்தப்பட்டதே இல்லை. அது ஒரு காரணப் பெயர். வெளிச்சியன், கருப்பையா என்பதுபோல் செவுடர். ரொம்பச் செவிடில்லை. எல்லாம் புரியும். பழனி அவர் பெயர். அவருக்கான மரியாதை அவருக்குக் கிடைத்தே வந்தது. 85 வயது வரை வேலை செய்தார். போன வாரம் செத்துப் போனபோது அவருக்கு வயது 95. எனக்குத் தெரிந்து தினமும் சாராயம் குடித்தார். சந்தோசமாகச் சிரித்தார். அவரது அண்ணியான என் அப்பாயியை வாய்ச்சண்டைக்கிழுப்பார். வெத்தலையும் புகையிலையும் சாராயமும் கலந்து மணக்கும் அவரது அண்மைக்கு இழுத்து "முட்டை முக்காக் காசு, முழு முட்டை எத்தனைக் காசு?" என்று கேள்வி கேட்பார். சுருக்குப் பையில் காசு வைத்து வேட்டி மடியில் முடிந்திருப்பார். ஒரு முறை எல்லோருக்கும் அவ்வைந்து காசு கொடுத்தார். சிரிப்பும், ஆர்ப்பாட்டமும், உழைப்புமாய்க் கழிந்துபோன அவரது வாழ்வுக்கு என் வணக்கம்.

கமலஹாசன் ஒகேனக்கல்லில் பேசியது பிடித்திருந்தது. மற்றவர்களது பிடிக்கவில்லை என்பதில்லை. அதிலும் கமல் பேசியதில் ஒன்று. தாய்மையுள்ளம் வேண்டும் என்றது. சில நாட்களாகவே அவ்வப்போது இந்த யோசனை எழுவதும் அமிழ்வதுமாக இருக்கிறது. கீற்றில் சில வாரங்களுக்கு முன் யாரோ எழுதியிருந்த சிறு பத்தி கிளப்பிய பொறிதான் அது. உலகின் போர்கள் அனைத்திற்கும் பின்னணியில் ஆண்களின் வெற்றிகொள்ளும் மனோநிலைதான் இருக்கிறது. குழப்பங்களின் முக்கியக் காரணி அது என்பதாக இருந்தது அப்பத்தி. சுட்டி கிடைத்தால் தருகிறேன். உண்மையாகத்தான் தோன்றுகிறது. ஆண்கள் மற்றவொரு ஆணை விஞ்சுவதில் அக்கறை காட்டுகிறோம். இது பெண் இணையைப் புணர்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பரிணாமப் பண்பிலிருந்து கிளைத்ததாகக் கூட இருக்கலாம். போட்டி மனப்பான்மை. ஐந்து ஆண்கள் மட்டும் இருக்குமிடத்தில் பிரச்சினை இராது. அங்கே ஒரு பெண் வந்துவிட்டால் பிரச்சினை முளைக்கும் என்று பெண்ணின் மேல் பழியை வைப்போம். ஆனால் பிரச்சினை பெண்ணால் வருவதில்லை. அப்பெண்ணை அடைவதற்கு ஆண்களினிடையே தோன்றும் போட்டியினால் வருவதே பிரச்சினை. கமலஹாசன் பேசியது தாயுள்ளம் வேண்டுமென்று. பெண்ணுறுப்புத் தேவையில்லை. எல்லோருக்குள்ளும் தாயுள்ளம் இருக்கிறதென்று. உண்மை. அதைக் கண்டுகொண்டோமானால் மற்றவரை மன்னிக்கவும், ஏற்றுக் கொள்ளவும், அரவணைத்துப் போகவும் முடியும். தாயுள்ளம் அடிமைத்தனமில்லை. அது பகுத்தாய்வது. ஆராய்ந்து கொள்வது. தாயுள்ளம் போராட்டக் குணம் மிக்கது. தற்காப்புக்காக மட்டுமேயன்றிப் பிறரின் சொத்தினை அபகரிக்கும் நோக்கோடு அது போராட்டத்தினைத் தொடுப்பதில்லை. தன் குட்டிகளைத் துன்புறுத்த வரும் ஒருவரைத் தாக்கி விரட்டும் அதே மூர்க்கம்தான் அடுத்தவரது குட்டிகளைக் கொல்லுதல் கூடாது என்ற புரிதலையும் தருகிறது. ஆண் விலங்குகளில் எத்தனையில் இக்குணத்தைக் காணவியலும்? ஆட்சியதிகாரங்களை வைத்திருப்பவர்கள் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும், கர்நாடகம், தமிழகம், அமெரிக்கா, யாராயினும். பெண்ணாக இருக்கும் ஆண்களுக்குத் தாயுள்ளம் சாத்தியப்படாது. ஆண்+அவம் = ஆணவம். ஆணவம் என்பது ஆணின் அவம் (கீழான, பயனற்ற). அப்படின்னா போராட்டம் தேவையில்லையா? தேவைதான். போராட்டம் என்பது ஒரு சுழல். எங்கு எது ஒரு போராட்டத்தைத் தொடங்கிவிட்டதோ அவ்விடத்திலேயேதான் அப்போராட்டம் முடிவுறும். குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள், புரியும்!

தலைப்பு: இன்றைய பதிவர் வட்டத்தில் இது ஒரு பிரச்சினை. எனக்கும், என் தாத்தாவுக்கும் (நானறிந்தவரை) கமலஹாசனோடு எவ்வித உறவுமோ அல்லது கொடுக்கல் வாங்கலுமோ கிடையாது. நான் எழுத வந்தவற்றைப் பற்றித் தலைப்பில் குறிப்பிட வேண்டும், ஆனால் அப்படிக் குறிப்பிடும்போது உங்களது மனம் உங்களையும் அறியாமல் அவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக் கொள்ளும். இதை அறிந்திருந்தும் இப்படி ஒரு தலைப்பையோ அல்லது "கமலஹாசனை விட்டுப் பிரிந்த எங்க தாத்தா" என்பதான தலைப்பையோதான் நான் வைக்க வேண்டியிருக்கிறது!

7 comments:

said...

தாயுள்ளம்...எல்லா குழந்தைகளையும் மன்னிக்குமோ..

மத்திய அரசு, அத்தகைய தாயுள்ளத்தினுடனேயா, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது...?

:))))

said...

தாத்தாவை நினைவில் இல்லை; நினைக்க முடிகிறது. இப்படியான மனிதர்கள் அருகிப்போகிற தலைமுறை இது. வயது தருகிற தனிமை, செருக்கு, பயம், அங்கீகாரத்துக்கான ஏக்கம் இப்படியாக முதுமை ஒரு சுருங்கிக்கொண்டே போகிற நாட்களில் மலர்ந்து மணம்பரப்பி, விரிந்து, உதிர்ந்துபோகிற வாழ்வு அரிதாகி வருகிறது.

இப்படியான தாத்தாக்களுக்கு வணக்கம்!

said...

இங்குள்ளவர்கள் அவர் பட்டும் படாமலும் பேசினார் என்று சொல்லிக்கொன்டிருக்கும் போது அருமையான கட்டுரை

said...

நல்ல பதிவு!

தாயுள்ளம் நடுவண் அரசிற்கல்லவா வரவேண்டும்.

இப்போதைய நிலை, தாயில்லாத குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொண்டு பகை வளர்ப்பது போல் தான் இருக்கிறது. கண்டிக்கத் தகுதியான தாயாகிய நடுவண் அரசு மரித்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Anonymous said...

//ஆண்கள் மற்றவொரு ஆணை விஞ்சுவதில் அக்கறை காட்டுகிறோம். இது பெண் இணையைப் புணர்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பரிணாமப் பண்பிலிருந்து கிளைத்ததாகக் கூட இருக்கலாம்//

அருமையான சிந்தனை.

said...

உறவுகளுக்குல் மரியாதையோடு கூடிய வம்பிழுத்தல், வேலை அல்லது போதை என்று வாழ்க்கை,- எங்கள் தாத்தா கூட இப்படித்தான் "பாசமுள்ள பாப்பாத்திக் கூட பேசமுடியல இந்த பாலாப் போன கல்லுக்கடைய மறக்கமுடியல" என்று பாடி எங்கள் அம்மாயியை வம்புக்கிழுப்பார். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

said...

அழகாக எழுதி இருக்கிறீர்கள்!

எல்லாத்தேடல்களுக்கும்
விடையில்லாத
ஓட்டம் இது!

ஏனெனில்...
நாம் ஓடிக்கொண்டிருப்பதே
விடையுடன் தானே?

:)
//கமலஹாசன் பேசியது தாயுள்ளம் வேண்டுமென்று. பெண்ணுறுப்புத் தேவையில்லை. எல்லோருக்குள்ளும் தாயுள்ளம் இருக்கிறதென்று. உண்மை. அதைக் கண்டுகொண்டோமானால் மற்றவரை மன்னிக்கவும், ஏற்றுக் கொள்ளவும், அரவணைத்துப் போகவும் முடியும். தாயுள்ளம் அடிமைத்தனமில்லை. அது பகுத்தாய்வது. ஆராய்ந்து கொள்வது. தாயுள்ளம் போராட்டக் குணம் மிக்கது//


அற்புத வரிகள்!