தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்


தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை, வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அத்தகைய மக்களது தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாக வாழ்ந்து வருகிறது. அவர்களில் இன்று வாழ்ந்து வரும் ஒரு பெரியவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை முந்தாநாள் பார்த்தேன். அவர் இரா. இளங்குமரனார் அய்யா அவர்கள். அய்யாவைப் பற்றிச் சென்ற ஆண்டு பேரவை விழாவின் மூலந்தான் தெரிய வந்தது. ராலேயில் நடந்த அந்த விழாவில் அவர் பேசியபோது என் மூதாதையரின் மொத்த உருவில் ஒருவர் உயிர் கொண்டு வந்து பேசியது போலிருந்தது. 78 வயதிலும் கணீரென்ற குரல், தளராத தமிழறிவு. நிறைய பொத்தகங்களை எழுதியவரென்றும், வேர்ச்சொல் ஆராய்ச்சியிலும், தமிழகராதியின் உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தவரென்றும் தெரிந்தது. அவரைப்பற்றிய "உலகப் பெருந்தமிழர், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்: வாழ்வும் பணியும்" என்ற ஆவணப்படத்தைத்தான் நான் பார்த்தேன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழவந்தாள்புரம் என்ற ஊரில் பிறந்தவர். கிருஷ்ணன் என்பது இயற்பெயர். தமிழாசிரியராக வாழ்வைத் துவக்கி, பின்னர் மறைமலையடிகள், கவிமணி, தேவநேய பாவாணர் போன்ற தமிழ்ப் பெரியவர்களுடன் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுமளவுக்குத் தன்னைத் தன் கவிப்புலமையாலும், தமிழ்மொழி அறிவாலும் வளர்த்துக் கொண்டவர். தன் வாழ்நாள் நினைவுகளை அவரே சொல்லக் கேட்பது, யாரோ நெருங்கிய ஒருவரோடு உரையாடுவது போலிருக்கிறது. தன்னுடைய ஆசானாக நினைக்கும் தேவநேய பாவாணரைப் பற்றிப் பேசும்போதும், தன் மாணவன் ஒருவன் தன்னைக் கவிதை எழுதத் தூண்டிய நினைவைப் பற்றிப் பேசும்போதும் உள்ளிட்ட சில இடங்களில் தழுதழுக்கிறார். திருக்குறளுக்கு இவர் எழுதிய உரை பல இடங்களில் மற்றையோரது உரையிலிருந்து மாறுபட்டது. ஒரு குறளுக்கான உரையை, அந்தக் குறளை மட்டுமே கொண்டு எழுதாமல், நாலடியார்  உள்ளிட்ட வேறு இலக்கியங்களையும், பட்டறிவையும் கொண்டு எழுத வேண்டும் என்பது இவருடைய நோக்கு. திருக்குறள் வாழ்வியல் உரை என்பது இவரது உரை. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்றொரு பெண்பாற்புலவர் இருந்ததாகப் பள்ளியில் படித்திருப்போம். அவரது இலக்கணக் கவிதைகள் மறைந்துவிட்டன என்ற நிலையில் அவரது கவிதைகளை 'காக்கை பாடினியம்' என்று பல்வேறு இலக்கியங்களிலிருந்து தேடித் தொகுத்திருக்கிறார். பெண்பாற்புலவர் ஒருவர் யாப்பிலக்கணம் செய்தது தமிழுக்கே உரிய பெருமை. இந்த காக்கை பாடினியத்தை மீளக் கண்டுபிடித்தது இளங்குமரனாரின் முக்கியமான படைப்புக்களில் ஒன்று. புறத்திரட்டு, குண்டலகேசியின் மறு உருவாக்கம், தேவநேயம் என்ற 16 தொகுதிகளைக் கொண்ட புத்தகம் என்று சுமார் முந்நூற்று எண்பத்து ஏழு பொத்தகங்களை எழுதியிருக்கிறார். முன்னோர்களின் மடிந்துபோன படைப்புக்களை மீட்டெடுப்பது எனது முக்கியமான வேலை என்கிறார். 

தற்போது திருவள்ளுவர் தவச் சாலை என்ற தவச் சாலையை திருச்சிக்கு அருகிலுள்ள அல்லூரில் அமைத்து அங்கே வசித்து வருகிறார். அவரது நூல்களும், அங்கிருக்கும் நூல் நிலையத்திலிருக்கும் அவர் தேடிய 17,000 நூல்களும் பல ஆராய்ச்சியாளுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. அடுத்த முறை ஊருக்குப் போகும்போது நீங்களும் நானும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் திருவள்ளுவர் தவச் சாலை! 

ஆவணப்படம் குறித்த தகவல்கள்: தயாரிப்பு மருத்துவர்கள் அ. செந்தில்-அகிலா, உலகமதி மருத்துவமனை, தொலைபேசி 04142-254502, 281233. 

 (இந்த ஆவணப் படத்தை அன்பளித்த நண்பருக்கு நன்றி!)

6 comments:

said...

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்துப் பேச வேண்டிய பெருமகனார் அய்யா இளங்குமரணார்.
அவரை வாழும் திருவள்ளுவர் என்று சொல்வது மிகையாகாது.
431-2685328 திருச்சி எண்.
முடிந்தவர்கள் அந்த ஆவணத்தை
யூ டூபில் போட வேண்டுகிறேன்.

said...

நன்றி தமிழன் அய்யா!
யூடியூபில் போடுவதற்குத் தயாரிப்பாளர்களிடம் அனுமதி கேட்டுப் பார்க்கிறேன்.

said...

பேரா. மு. இளங்கோவன் இளங்குமரனார் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
http://muelangovan.blogspot.com/2008/10/blog-post_22.html

அன்னாரின் சில நூல்களை வாசித்திருக்கிறேன்.

நா. கணேசன்

said...

மு.இ அவர்களின் விரிவான இடுகைக்கான தொடுப்புக்கு நன்றி, நா.க!

said...

இளங்குமரனாரின் தமிழ்ப் பணி அளவிடமுடியாதது. அவர் செய்து வரும் எத்தனையோ பணிகளில் நம்முடைய திருமண முறையை மீட்கும் முயற்சியும் ஒன்று.

சமீபத்தில் என்னுடைய சகோதரனின் திருமணம் அவர் தலைமையிலேயே நடந்தது. நம்முடைய தமிழ் மரபு சார்ந்த திருமண முறையை மேடையில் நிகழ்த்தி காட்டினார். தமிழகமெங்கும் பல தமிழ்வழி திருமணங்களை அவர் நடத்தி வைத்துள்ளார்.

said...

சுந்தரா,அவரின் பல நூல்கள் இப்போது அமிழ்தம் மற்றும் தமிழ்மண் பதிப்பகம் மூலம் வெளிவருகின்றன.

சில நூல்களை நானும் படித்திருக்கிறேன்.

தமிழ்மொழியின் புத்தாக்க முயற்சிகளில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அவருடையது.