ஈழத்தில் கிடைத்த கீதை

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஈழத்தில் புதிய கீதை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் காலம் ஈழப் போர் நடந்த காலம் (சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது) எனக் கருதப்படுகிறது. அக்காலத்து இலங்கையில் இரண்டு இனக்குழுக்கள் இருந்தன. எது காலத்தில் முந்தையது என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும் இரண்டுக்குமான நிலப்பகுதிகள், வாழும் முறை, மொழி எல்லாம் வெவ்வேறு. பிற்காலத்தில் ஊடுருவிய அந்நிய நாட்டினர் (ஆங்கிலேயர், போர்த்துகீசியர் முதலானோர்) எல்லோரையும் ஒரே ஆளுகைச் சிறைக்குள் வைத்து ஆட்சி நடத்திவிட்டு, போகும்போது நாட்டின் ஆட்சியைப் பெரும்பான்மை மக்களின் கையிலே ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டனர். அந்நியர்கள் போன பிறகு பெரும்பான்மை, சிறுபான்மையை ஒடுக்கியது. ஒரே நாட்டில் பிறந்தவர்கள், சக மனிதர்கள் என்ற முறையில் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்படும் உரிமையைக் கேட்டார்கள். தரப்படவில்லை. சரி, உங்களோடு வைத்துக்கொள்ள விருப்பமில்லாவிட்டால் ஐந்து மாவட்டங்களைக் கொடுங்கள் எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம் என்று கேட்டார்கள். அதற்கும் பெரும்பான்மை இணங்கவில்லை. எமக்குக் கீழ், நாங்கள் தருவதை வைத்துக் கொண்டு இரும் என்றார்கள். அட, ஐந்து ஊர்களையாவது தாருங்கள் என்றது சிறுபான்மை. முடியாது, ஐந்து ஊசிகளை நாட்டும் இடத்தைக்கூடத் தரமுடியாது என்றுவிட்டது பெரும்பான்மை. விளைவு? ஈழப்போர் தொடங்குகிறது. 

போரின் ஆரம்பத்தின்போது ஈழப்படையின் தளபதிகளில் முதன்மையானவனாக விளங்கிய பிரபாகரன் போர்க்களத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் எதிரிகளாகக் கண்டவர்களெல்லாம், அவன் தேயத்து மனிதர்கள், அவனுடைய நண்பர்களும், ஆசிரியர்களும், உறவினர்களும், போர்த்திறம் சொல்லித்தந்த குருமார்களுமாயும் ஆனவர்கள். அவர்களைக் கண்டு அவன் மனம் சஞ்சலமடைகிறது. இவர்களுடனா நான் போரிட வேண்டும், இவர்களைக் கொன்று நான் ஈட்டும் வெற்றி தேவைதானா என்று கலங்கி, துவக்கைக் கீழே போடுகிறான். அப்போது அவனுக்குச் சாரதியாக இருந்த கண்ணபிரான், பிரபாகரனுக்குச் சொன்னதே ஈழத்துக் கீதை. இது பல அத்தியாயங்களாக இருந்திருக்கக் கூடும். இதன் சில பகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கலாம் என்று ஆய்வர்கள் கருதுகிறார்கள். கீதை இரண்டு பகுதிகளாகச் சொல்லப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அதாவது, போருக்கு முன்பு ஒன்றும், போருக்குப் பின்பு ஒன்றும் என்று இரு பகுதிகள் உள்ளதாக அறியப்படுகிறது. போருக்கு முன் சொல்லப்பட்டது பிரபாகரனைப் போர் செய்யத் தூண்டியதாகவும், இதன் இரண்டாவது பகுதி போரின் வெற்றிக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் கண்ணபிரானால் சொல்லப்பட்டதாகவும், அது ஆன்மீகக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் சொல்லப்படுகிறது. மகாபாரதப் போரை முடித்தவுடன், பிரபாகரனின் அழைப்பிற்கிணங்க கண்ணபிரான் ஈழத்துக்குச் சென்றார். அப்போது அவருக்கு உபதேசிக்கப்பட்டதே ஈழத்துக் கீதை. 

அதிகாரம் - 1
அன்பிற்குரிய கண்ணா, போரிடும் எண்ணத்துடன் இங்கு கூடியிருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு என் உடல் நடுங்குகிறது. வாய் உலர்கிறது. ரோமம் சிலிர்க்கிறது, சருமம் எரிகின்றது, துவக்கு நழுவுகின்றது. இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. குழப்பத்தால் என்னை மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுனங்களைக் காண்கின்றேன்.

கருவண்ணா, உறவினரை அழிப்பதால் எனக்கென்ன லாபம்? அப்படியொரு வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

அரசையும், சுகவாழ்வையும் அடைவதற்காக, யாருக்காக வாழ விரும்புவோமோ அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு சுகமாயிருக்க முடியுமா? மூவுலகும் கிடைத்தாலும் நான் இவர்களை இழக்க மாட்டேன். நான் கொல்லப்பட்டாலும் இவர்களைக் கொல்ல மாட்டேன். அல்ப பூமியைப் பெற நான் இதைச் செய்வேனா?

பிரியத்துக்குரியவனே, இந்த ஆக்கிரமிப்பாளர்களைக் கொல்வதால் நமக்கு பாபம்தான் வரும். திருமகள் கணவா, உறவுகளை அழித்துவிட்டு எப்படி மகிழ்வாய் இருக்க முடியும்?

கவலையும், கண்ணீருமாய் கலக்கத்துடன் அமர்ந்துவிட்ட பிரபாகரனைப் பார்த்து கண்ணபிரான் பின்வருமாறு கூறினார்.

அதிகாரம் - 2
பிரபாகரனே, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது. இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்.

பிரபாகரன்: கண்ணா, எனது வணக்கத்திற்குரிய வழிகாட்டிகளை நான் எப்படி எதிர்ப்பேன். தனது ஆசிரியனைக் கொன்று வாழ்வதை விட பிச்சையேற்பதே மேல். அவர்கள் பேராசைப்பட்டாலும் பெரியோர்களே. அவர்கள் ரத்தம் சிந்திய நிலத்தை நான் அனுபவிப்பதா? யார் வெல்வார். எது சிறந்தது என்பதை நாமறியோம். யாரை இழந்தால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அவர்களல்லவா எதிரில் நிற்கின்றனர்.

துயரத்துடனிருந்த பிரபாகரனைப் பார்த்து புன்சிரிப்புடன் இறைவன் கூறினார் : அறிவாளியைப் போல் பேசும் நீ, கவலைப்பட வேண்டாததற்காக கவலைப்படுகிறாய். அறிஞன் இருப்பவருக்காகவோ, இறப்பவருக்காகவோ வருந்துவதில்லை. நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாதிருந்ததும் இல்லை, இல்லாமலிருக்கப் போவதுமில்லை.

உடலில் உயிராயுள்ள ஆன்மா, பாலகன் - இளைஞன் - வயோதிகன் என உடலை மாற்றிக் கொண்டிருப்பது போல இறப்பின் போது வேருடலுக்கு மாறிக்கொள்கிறது. தன்னை (ஆத்மாவை) அறிந்தவன் இதற்காகத் திகைப்பதில்லை. கோடையும் குளிரும் பருவ காலத்திற்கேற்ப நிலையற்று மாறுவது போல, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் புலன் நுகர்வாலேயே ஏற்படுகின்றன. இதில் பாதிப்படையாமல் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.

சிறந்தவனே, இன்ப துன்பங்களினால் பாதிப்படையாமல் தன்னிலை மாறாதிருப்பவனே விடுதலைக்குத் தகுதி பெற்றவனாவான். 

நிலையானது, நிலையற்றது இந்த இரண்டிலும் உண்மையை அறிந்தவர்களின் தீர்வு நிலையற்றதற்கு நீடிப்பு, நிலைத்தவைக்கு முடிவில்லை என்பதாகும்.உடல் முழுவதும் அழிவற்ற ஒன்று (ஆன்மா) பரவி இருக்கின்றது. அதனைக் கொல்வதற்கு யாருமில்லை. அது அளவிட இயலாதது. 

ஆதலால் ஈழகுலத் தோன்றலே, போரிடுவாயாக. 

அதிகாரம் - 3
ஆன்மா அழிவதுமில்லை, அழிப்பதுமில்லை. இதை அறிவாளிகள் அறிவார்கள். ஆன்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. முன்பு உண்டாகாமல் பின்பு உண்டாகிறதுமில்லை. அது பிறப்பற்றது, நித்தியமானது, சாசுவதமானது, புராதனமானது, உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை.

ஆன்மாவை அழிவற்றதாக, பிறப்பற்றதாக, மாறாததாக அறிந்திருப்பவன் யாரையும் கொல்வதுமில்லைம் கொல்லச்செய்வதுமில்லை.

நைந்து போன ஆடைகளை புறக்கணித்து, புது ஆடைகளை ஏற்பதுபோல, ஆன்மாவானது உபயோகமற்ற உடலைப் புறக்கணித்து, புதிய உடலை ஏற்கின்றது. அத்தகு தனிப்பட்ட ஆன்மாவை, ஆயுதம் பிளக்காது, நெருப்பு எரிக்காது, நீரும் நனைக்காது, காற்று உலர்த்தாது. எங்கும் இருப்பது, என்றுமிருப்பது, அசையாதது, மாறாதது, மாற்றமுடியாதது, கண்ணுக்கெட்டாதது, சிந்தைக்கு அப்பாற்பட்டது. இவைகளை அறிந்து நீ உடலுக்காக வருந்தாதே.

மேலும் ஆன்மா எப்போதுமே பிறந்து இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும் அதில் துக்கப்பட என்ன இருக்கிறது? பிறப்பதெல்லாம் இறப்பது உறுதி என்றால் இறப்பதெல்லாம் பிறப்பதும் உறுதி அல்லவா? தவிர்க்க முடியாத இவ்விஷயத்தில் நீ கடமை செய்யக் கலங்கலாமா?

தோன்றுபவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடையில் தோன்றி, இறுதியில் தோன்றா நிலையை அடைகின்றன. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது. எனவே பிறப்புடைய எந்த ஆன்மாவுக்காகவும் நீ வருந்தத் தேவையில்லை. உனக்கான தர்மத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தாலும் நீ வருந்தத் தேவையில்லை. 

நீதிக்காகப் போரிடுவதைக் காட்டிலும் ஒரு வீரனுக்கு வேறு கடமைகள் உண்டோ? தயங்காதே. வீரனுக்கு வலிய வரும் போர்வாய்ப்புகள் மேலுலகின் கதவுகளைத் திறக்கின்றன. அதனால் அரசர்கள் மகிழ்கின்றனர். இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யாவிட்டால், அதர்மம் புரிவதுடன், உனது பெயரையும், புகழையும் இழந்து பாபமடைவாய். உலகம் உன்னை அவமதிக்கும். மதிக்கப்பட்டவனுக்கு வரும் அவமானம் மரணத்தைக் காட்டிலும் கொடியது.

ஆதலால் பிரபாகரனே, இன்ப துன்பங்கள், லாப நட்டங்கள், வெற்றி தோல்விகள் இவற்றைக் கருதாமல் போரிடு, இதனால் பாபம் ஏற்படாது.

அதிகாரம் - 4

பிரபாகரன் : ஆயர்குடிக்கரசே, பலனை விரும்பும் செயலை விட, நிலையான அறிவு சிறந்ததாயின், கோரமான கொலைத் தொழில் புரிய என்னை ஏன் பலவந்தப்படுத்துகிறீர்?

எனக்குகந்த வீரனே, பலனில் பற்றின்றி, கடமைக்காக செயல்படுவாயாக. இதனால் மேன்மை அடையலாம். ஜனகர் போன்ற மன்னர்கள் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தே பக்குவமடைந்தனர். எனவே உலகுக்கு நல்வழி காட்டவாவது செயல்படுவாயாக. வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதையே மக்கள் பின்பற்றுகின்றனர். அவர்களின் செயல்களையே உலகம் உதாரணமாகக் கொள்கிறது. அறிவிற் சிறந்த ஞானியும் கூட தன் இயல்புப்படியே நடக்கிறான். இயல்பினைத் தடுப்பதால் ஆவதென்ன?

பர தர்மங்களைச் சிறப்பாய் செய்வதைவிட குறையாயினும் சுயதர்மத்தை செய்வது நல்லது. பிற தர்மம் பயம் தரும். சுயதர்மமோ புரிகையில் அழிவுற்றாலும் நல்லது தான். எனவே கலக்கத்தை மறந்து உன் அறத்தைச் செய். 

செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.

எனவே பிரபாகரா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, எழுந்து போரிடு.

அதிகாரம் - 5

போரிடுபவரில் உன் எதிரிகள் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் துவக்குச் சுடுபவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. பொன்சேகா, மகிந்த, கோத்தபாய போன்றவர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறுமனே போரிட்டு, வெல்.

நீ போரிட மறுத்தால், உன் வீரம் வீணாகும். மேலும் நீ தவறாக வழி நடத்தப்பட்டு, உன் இயற்கையே உன்னைப் போரிட வைத்துவிடும். மயக்கத்தால் நீ செய்ய மறுப்பதை உன் வீர இயல்பே செய்ய வைத்துவிடும்."

இவ்வாறாகக் கூறி பிரபாகரனுக்குப் போரிடும் மனத் திட்பத்தை ஊட்டினார் கண்ணபிரான். 

இப்போது கிடைத்திருக்கும் இந்த ஈழத்துக் கீதைக்கும் இந்தியாவில் இதே காலகட்டத்தில் மகாபாரதப் போரின்போது அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட பகவத் கீதைக்கும் பெரிய ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இரண்டையும் உபதேசித்தவர் ஒரே ஞானாசிரியராகிய கண்ணபிரான் என்பதாலும் இவ்வொற்றுமை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

8 comments:

said...

:)

Anonymous said...

உங்கள் விளையாட்டை எவரேனும் ரசிப்பார்களா! அதுவும் இந்த நேரத்தில்.:(

said...

இதனை விளையாட்டு என்று கருதி நான் எழுதவில்லை, அனானி!

Anonymous said...

//அட, ஐந்து ஊர்களையாவது தாருங்கள் என்றது சிறுபான்மை. முடியாது, ஐந்து ஊசிகளை நாட்டும் இடத்தைக்கூடத் தரமுடியாது என்றுவிட்டது பெரும்பான்மை. விளைவு? ஈழப்போர் தொடங்குகிறது.//

இந்தப் பிச்சை எடுக்கும் பழக்கம் பார்ப்பனர்களுடையது. சுமூகத் தீர்வு ஈழத் தமிழனுக்கு என்றும் விருப்பமே. இருப்பினும், இப்படிக் கெஞ்சிக் கூத்தாடும் மானங்கெட்டத் தமிழன் ஈழத்துப் பரம்பரையில் இல்லை. பார்ப்பனப் பார்வையிலிருந்து எழுதப்பட்டதின் தழுவலாக இது இருப்பது வருத்தமே.

Anonymous said...

//அரசையும், சுகவாழ்வையும் அடைவதற்காக, யாருக்காக வாழ விரும்புவோமோ அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு சுகமாயிருக்க முடியுமா? //

உங்கள் கண்ணன் இவ்வளவு அறிவிலியா? உரிமைக்கானப் போரைச் சுக போகத்துடன் ஒப்பிடுவது தர்மமா?

Anonymous said...

//ஈழத்தில் கிடைத்த கீதை//

ஈழத்தில் கிடைத்திருப்பது கீதையில்லை. பகுத்தறிவு. உபதேசம் கேட்டுக் கண்டோ, மறு கன்னத்தைச் சிங்களவனிடம் காட்டிக் கொண்டிருக்க மதியற்ற பிறவியல்லர்.

Anonymous said...

//உபதேசித்தவர் ஒரே ஞானாசிரியராகிய கண்ணபிரான் என்பதாலும்//
Joke of the Millennium.

Anonymous said...

இவ்வளவு கதையும் பேசிக் கொள்ளும் நேரம் மட்டும் போர்க் களத்தில் கிடைக்குமேயானால்...........இவ்வளவு மென்மையானத் தாக்குதல் மட்டும் இருந்திருந்தால்...? உங்கள் கீதைப் போற்றப்படவேண்டிய ஒன்று.