கறுப்பு ஜூலை பேரணி அறிவிப்பைக் கண்டதும் போக வேண்டுமென நினைத்தேன். இங்கிருந்து வாஷிங்டன் சுமார் 500 மைல்கள். ஒரு நாள் விடுப்பில் எட்டு மணி நேரங்கள் ஓட்டிக் கொண்டு போய், திரும்பி வந்து அடுத்த நாள் வேலைக்குப் போவது சற்றே கடினம்தான் என நினைத்துத் தயங்கியபோது நண்பர் ஒருவர் சொன்னார், ராலே (வட கரோலினா)யிலிருந்து பேருந்து கிளம்புகிறது. ராலே நாலைந்து மணி நேரப் பயணந்தான். கிளம்பினேன். மகன் நானும் என்றார். ஆறு வயதாகிவிட்டதே, இனி இதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்க வேண்டும், அதோடு விடுமுறைதானே, சரி கிளம்புங்கள் என்றுவிட்டேன். நாங்கள் இருவர் மட்டும் தொலைதூரம் காரோட்டுவது இதுவே முதன்முறை. வழியில் பேச்சும் சிரிப்புமாகச் சில நேரம் இருந்துவிட்டுத் தூங்கிப் போனார். இரவில் மழையும் இடியும் மின்னலுமாக, அதுவொரு அனுபவம். இரவு 12 மணி வாக்கில் ராலே போய்ச் சேர்ந்தோம். காலை மூன்றறைக்கு எழுந்து தயாராகிப் பேருந்திற்குச் சென்றோம். சுமார் 45 பேர்களுடன் பேருந்து கிளம்பியது.
தூங்கி வழிந்து அதற்கு நடுவில் காலைச் சாப்பாடும் சாப்பிட்டு ஒரு வழியாய் முழித்த போது கிட்டத்தட்ட பத்து மணியாகியிருந்தது, பேருந்தும் வாஷிங்டனில் இருந்தது. குழந்தைகள் அவர்களுக்கான தோழமைகளை விரைவிலேயே கண்டுகொள்கிறார்கள். அவர்கள் ஆடித் திரிந்தார்கள். பேரணியை ஒழுங்கு செய்திருப்பது PEARL என்ற இளைஞரமைப்பு. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருக்கும் பிள்ளைகளால் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுகளாக இயங்குவது இது. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம், ஆட்சியாளர்களுக்கு, ஈழத்தில் மக்கள் படும் அவலங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருத்தல், அதற்காக அமெரிக்க மக்களைத் திரட்டுதல். இவ்வாண்டு பேரணியில் பர்மாவின் விடுதலைப் போராட்டத்தினரும் இணைந்து கொண்டனர். 8.8.88 அன்று நடைபெற்ற எழுச்சியில் 3000 பர்மியர்கள் கொல்லப்பட்டதை அவர்களும் நினைவு கூர்ந்தார்கள். இந்த இரண்டு நாடுகளிலும் சீனாவின் பங்கு முக்கியமானது. சூடானுக்கு மட்டுமல்லாது இலங்கைக்கும் பர்மாவுக்கும் ஆயுதங்களையும், நிதியையும் வழங்கி, அங்கு ஒரு பெரிய போரைத் திணிப்பதில் சீனாவின் கை இருக்கிறது. எனவே சீனாவை இதை நிறுத்துமாறு கோருவதும் இப்பேரணியின் நோக்கம்.
வெள்ளை மாளிகையை ஒட்டிய செனட் மாளிகையின் வெளியில் இப்பேரணி நடந்தது. ஒரு அம்மா ஒலிபெருக்கியின் மூலம் குரல் எழுப்ப, பேரணிக்கு வந்திருந்தோர் வலமாக வந்து அவருடன் இணைந்து ஒலித்தோம். இவரைப் பின்புதான் Dr. Ellyn Shander என்று அறிந்தேன். சுனாமிக்குப் பின் பணிக்கு ஈழத்திற்குச் சென்று வந்ததன் பின்னர் அமெரிக்காவில் போராட்டங்களுக்குத் தனது ஆதரவினைத் தெரிவித்து வருகிறார். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் petitiononlineஇல் இவரது மனு ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. மகனும் நானும் கைகளைக் கோர்த்துக் கொண்டு குரலெழுப்பிக் கொண்டு போனது எனக்கு உணர்வு பூர்வமாக இருந்தது. மனமெங்கும் மக்களின் அவலத்துக்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. மகனின் ஓங்கிய குரல் என்னுள் நம்பிக்கையையும் எழுச்சியையும் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். வலத்தின் முடிவில் கூட்டம் ஆரம்பமானது. கொளுத்தும் வெய்யிலுக்குச் சிலர் மர நிழலில் அண்டிக் கொண்டார்கள். இரு செனட் உறுப்பினர்களின் உரைகள் வாசிக்கப்பட்டன. ஒரு மக்களவை உறுப்பினர் வந்து பேசினார். அவர்களின் உரைகள், தற்போதுதான் தாம் இந்நிகழ்வுகளைப் பற்றி அறிவதாகவும், இதுபோன்ற அறிவுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்பதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தாம் துணை நிற்போம் என்பதாகவும் அமைந்திருந்தது.
பர்மிய அமைப்பினர், இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பினர், ஊடக சுதந்திரத்திற்கான அமைப்பினர் எனப் பலரும் வந்திருந்து தம் ஆதரவினைத் தெரிவித்தது மனதுக்குத் தெம்பை அளித்தது. 1983 கலவரத்தில் தப்பிப் பிழைத்த சிலரின் அனுபவங்கள் சொல்லப்பட்டன. இறுதியில் சிலர் பாடல்களைப் பாடினார்கள். இரு அம்மையார்கள் தமிழில் பாடினார்கள். Ellyn Shander மார்டின் லூதர் கிங்கின் ஒரு பாடலைப் பாடியபோது அவருடன் எல்லோரும் இணைந்து பாடினோம். PEARL இளைஞர்களும் இரு பாடல்களைப் பாடினர். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது. சுமார் 5 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
ஒரு போராட்டத்துக்குப் பல முகங்களுண்டு. ஒவ்வொரு முகத்திலும் நிற்பவரின் வேலைகளும் வெவ்வேறு மாதிரியானவை. எல்லாமும் சேர்ந்தால்தான் போராட்டம் வெற்ரியடைகிறது. ஈழத்தில் போர்க்களத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாடுகளிலே இருப்பவர்கள் அப் போராட்டத்திற்கு என்ன செய்ய முடியும்? மனித உரிமைகள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கே தொடர்ந்தும் மீறப்பட்டு வருகிறது. அரசாங்கம், மக்களைக் காப்பதற்குப் பதிலாகக் கொடிய அடக்கு முறையை ஏவியபடி இருக்கிறது. மற்ற நாட்டினர் தத்தமது காரியங்களிலே கண்ணாயிருக்கிறார்கள். இந்நிலையில், நாம் நம் தரப்பின் நியாயங்களை எல்லோருக்கும் சொல்வது அவசியமாகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், தமிழ் என்றொரு மொழி இருப்பதையும், இலங்கை என்றொரு நாடு இருப்பதையும் அறியாதவர்கள் அதிகம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். எனவே அமெரிக்கர்களிடம் ஈழத்தைக் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும், அங்கு நிகழும் மனிதவுரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதுதான் PEARL. இது மக்களின் கருத்துரிமையின் வழியே சென்று ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடும் இது ஒரு சட்டபூர்வமான அமெரிக்க அமைப்பு. வெளிநாடுகளில் இருக்கும் நாம் செய்ய வேண்டியதெல்லாம், PEARL போல அந்தந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் நடத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளித்தல்.
பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மகன் கேட்டார், "China China, Shame on You" என்று ஏன் கத்தினோம் என்று. தம்பி, இது உன்னுடைய சீன நண்பர்களுக்கோ, சீன மக்களுக்கோ எதிரானதில்லை. அவர்களுடைய அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு செயலுக்கு மட்டுமே எதிரானது என்று விளக்கினேன். குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இப்பேரணியில் கலந்து கொண்டதும், மகனோடு சென்று வந்ததும் மிகுந்த நிறைவையளித்தன. ஈழத்தில் உரிமையோடான வாழ்வொன்று மலரும் என்ற நம்பிக்கை ஓங்குகிறது. பேரணியை ஒழுங்கு செய்த PEARL இளையோர்களுக்கும், பயணத்தில் உதவிய வட கரோலின நண்பர்களுக்கும் எனது நன்றி!
மதியம் சனி, ஜூலை 26, 2008
வாஷிங்டனில் நாங்கள் கண்ட கறுப்பு ஜூலை பேரணி
Posted by சுந்தரவடிவேல் at 7/26/2008 08:16:00
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
விரிவான பதிவை அளித்தமைக்கு நன்றி
சுவ
நீங்கள் உங்கள் மகனோடு இந்த பேரணிக்கு சென்று வந்ததில் நான் பெருமை கொள்கிறேன். சிறு வயது முதலே உங்கள் மகனுக்கு நாட்டுநடப்பை இப்படி கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் அவனுக்கு நல்ல முன் மாதிரியாக உள்ளீர்கள்! பாராட்டுகள் பல!
மயிலாடுதுறை சிவா...
>>> கைகளைக் கோர்த்துக் கொண்டு குரலெழுப்பிக் கொண்டு போனது எனக்கு உணர்வு பூர்வமாக இருந்தது. மனமெங்கும் மக்களின் அவலத்துக்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. மகனின் ஓங்கிய குரல் என்னுள் நம்பிக்கையையும் எழுச்சியையும் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன் <<<
கண்களை கலங்க வைத்துவிட்டது :-( , இந்த நம்பிக்கை நனவாக வேண்டும் ..
>>>> குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். <<<
:-) , பல விஷயங்கள் சொல்லிவிட்ட வரிகைள் இவை
Thank you Dr. Sundaravadivelu.
Keep up the good community work.
anbullah
Nanjil A. Peter
பதிவுக்கு மிக்க நன்றி.
/* ஒரு போராட்டத்துக்குப் பல முகங்களுண்டு. ஒவ்வொரு முகத்திலும் நிற்பவரின் வேலைகளும் வெவ்வேறு மாதிரியானவை. எல்லாமும் சேர்ந்தால்தான் போராட்டம் வெற்ரியடைகிறது. ஈழத்தில் போர்க்களத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாடுகளிலே இருப்பவர்கள் அப் போராட்டத்திற்கு என்ன செய்ய முடியும்? */
உண்மையான வரிகள். தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டின் சட்ட வரம்பை மீறாது ஈழத்தில் நடக்கும் அவலங்களை அந் நாட்டு மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். இப்படியான நிகழ்வுகள் மிகவும் அவசியம்.
தமிழ்ப் பெற்றோர்கள் உங்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்.
மீண்டும் உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.
//மகனின் ஓங்கிய குரல் என்னுள் நம்பிக்கையையும் எழுச்சியையும் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன்//
சுந்தரவடிவேல் அவர்களுக்கு வணக்கம், மேற்கண்ட இந்த வரிகள் இனி வரும் இளைய சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டுகிறேன். ஒரு தமிழ் தாயும், தகப்பனும் தனது குழந்தைகளுக்கு இவ்வாறு விளங்கப்படுத்த வேண்டும்.
எனக்கெல்லாம் நான் இருக்கும் இடத்திலே இது போல ஒரு போராட்டமோ அல்லது ஒரு சின்ன ஒன்றுகூடலோ நடக்கவில்லையே என்ற ஆதங்கம். நல்லதொரு பதிவுக்கு நன்றி.
மனிதகுல பிரட்சணைகள் தீர்க்கவே முடியாதவைகளா? மனிதனை ஆட்டிப் படைக்கும் அரசியல் குரூரம் தீரவே தீராதா? பிரட்சனைகள் தீர்ந்து, சமத்துவமும் சமாதானமும் தவழும் புதிய யுகம் பிறக்கவே பிறக்காதா? - இப்படி ஒவ்வொரு எதார்த்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன. தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அறிவகத்தை பார்வையிடுங்கள் உலகின் சமாதனத்திற்கு எளிமையான நடைமுறைக்கு உகந்த தீர்வுகளை சொல்லி செயல்படுத்த முயன்றிருக்கிறோம்.
கைய கொடுங்க சுந்தர், பெருமையாய் இருக்கு நீங்க செஞ்சத நினைத்தால்.
பல தகவல்கள் அடங்கிய, மிக தேவையான, பரப்புரை அடங்கிய பதிவு.
நன்றிகள் சுந்தர்.
ஆம்! குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர்.
நண்பர் சுந்தரவடிவேலும் மகன் மாசிலனும் நம்மோடு இணைந்து பேருந்தில் பயணித்து பேரணிக்கு வந்தது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி. வேலை, நேரம், பொருட்செலவு என்ற எல்லைகளெல்லாம் கடந்து ஈழத்து உறவுகட்கு நியாயம் கேட்கும் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்ட நமது தமிழகத்து நண்பர்களுக்கு எமது மனம் கனிந்த நன்றிகளை உங்கள் தளத்தினூடாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
"விடியலுக்கில்லை தூரம், நம் நெஞ்சம் முழுவதும் வீரம்".
ஜெயறாஜா, வட கரலைனா
அன்புள்ள சுந்தரவடிவேலு
தங்களுடைய கறுப்பு சூலை பதிவு மிகவும் அருமை.
மேலும் தமிழ்ப் பணி தொடரட்டும்.
முத்து(வேல் செல்லையா)
உங்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.
Post a Comment