Showing posts with label கறுப்பர்கள். Show all posts
Showing posts with label கறுப்பர்கள். Show all posts

கறுப்பங்க ஏரியா

நேற்று நான் பேருந்திலிருந்து இறங்கி கடைவரைக்கும் நடக்க வேண்டியிருந்தது. இரண்டுக்குமிடையே சுமார் 1 கிலோ மீட்டர். முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். அமெரிக்காவில் ஆ.அ மக்களைக் கண்டாலே நிறைய பேருக்கு ஒரு பயம், விலக்கம் என்பன இருக்கும். புதிதாக ஊருக்கு யாரேனும் வந்தால், இன்ன தெருவைத் தாண்டி வடக்கே போகாதீர்கள், இன்ன இடத்தில் வாடகைக்கு வீடெடுக்காதீர்கள் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் நிகழும். பல ஆண்டுகளாகவே இது குறித்த போராட்டம் எனக்குள் உண்டு. ஒரு முறை அவர்களது முடிதிருத்தக் கடைக்குச் சென்றிருந்தேன். முற்றிலுமாய் அவர்களே. எல்லாருக்குமாய் பிட்சா கொண்டுவரச் சொன்னார் கடைக்காரர். எல்லோரும் எடுத்துக் கொண்டனர். பெப்பரோனி, மற்ற இறைச்சிகள் இருந்ததனால் நான் சற்றே தயங்கியபடி இருந்தேன். "நீங்கள் எங்களுடையதையெல்லாம் சாப்பிடமாட்டீர்கள்" என்று யாரோ கேட்டார்கள். அப்படி இல்லை என்று மறுதலிப்பதற்காகவே ஒரு துண்டை எடுத்துக் கொண்டேன். அவர்களிடம் இருக்கும் சகோதர உணர்வும், எளிமையும், வெள்ளை மனதோடு பழகும் வழக்கமும் என்னைக் கவர்ந்தவை. ஆனால் குற்றம் புரிவதாகக் கண்டுபிடிக்கப்படுபவர்கள் பலரும் அவர்களாகவே இருப்பதனாலும், அவர்களது பகுதிகளில் குற்றங்கள் அதிகமாக நிகழ்வதனாலும் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தத்தின் மேலும் ஒரு முத்திரை குத்தப்பட்டிருப்பதை நீங்களும் அறிந்திருக்கலாம். ஒரு நாள் தெருவைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு ஆ.அ ஐயா, அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஒரு நங்கையிடம் (வெள்ளையர்) அமெரிக்காவின் அதிபர் யார் தெரியுமா என்று கேட்டார். அது ஒபாமா அதிபரான புதுசில். ஒபாமா அவர்களுக்கு ஒரு சக்தியளிக்கும் சின்னம் என்று உணரமுடிந்தது. நிற்க. இத்தகைய தெருவில் நடந்துகொண்டிருந்தேன். இவர்களும் நாமும் ஒன்றாகத்தான் பரிணமித்தோம். ஆப்பிரிக்காவிலோ குமரிக்கண்டத்திலோ இவர்களோடுதான் நாம் அனைத்தையும் கற்றிருந்திருப்போம். இவர்களைப் போலவே பலரை நம்மூர்களில் காணலாம். அந்தமானிலும், ஆஸ்திரேலியாவிலும், பசுமை வேட்டை நடக்கும் வட இந்திய மலைக்காடுகளிலும், இந்தோனேசியாவிலும் இவர்களைக் காணலாம். ஏழு தீவுகளாய் உலகின் நிலப்பகுதி உடைந்தபோது நாம் பிரிந்து போயிருக்கலாம். இவர்களை ஏன் அச்சத்தோடு பார்க்க வேண்டும். இதோ என்னைப் பார்த்துத் தலையசைக்கிறார்கள், கை காட்டுகிறார்கள். யாரேனும் தாக்க வந்தால், இதோ பார்த்தாயா நானும் உன் சகோதரன் தான் என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைப்பு ஓடுகிறது. வீடுகள் தெருச்சாலைக்கு அண்மித்தபடி இருக்கின்றன. பெரிதாய், தள்ளி இருந்து, உயர்ந்து, பெரிய கதவுகளைப் பூட்டியபடி, ஆளரவமற்று இவ்வீடுகள் நம்மைப் பயமுறுத்துவதில்லை. நம்மூர்ப்பகுதிகளில் இருப்பதைப் போலவே இருக்கின்றன. முன்புறங்களில் மனிதர்கள் திரிகிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்திருக்கிறார்கள். பேசிச் சிரித்திருக்கிறார்கள். குழந்தைகள் வண்டியுருட்டி விளையாடுகின்றனர். . ஐந்தாறு பையன்கள் விடலைப் பையன்கள் சைக்கிளில் அமர்ந்தும், சாலையில் நின்றும் பேசிக்கொண்டிருந்தனர். நான் அவ்வழியே சென்றபோது "no bomb buddy" (குண்டு எதுவும் இல்லையே நண்பா என்பதாக) என்றான் ஒரு பையன். நான் சிரித்தபடியே no bomb for buddies என்றேன். சிரித்தார்கள். கடந்தேன். எதிரே வருபவர்கள் தமது வேலையைக் கவனித்துச் செல்கிறார்கள். அல்லது ஒரு புன்முறுவலோடு தலையசைக்கிறார்கள். என்னைத் தவிர ஒரேயொரு வேற்றினத்துக் காரரைக் கண்டேன். அது ஒரு வெள்ளைக்காரப் பிள்ளை, தன் ஆ.அ நண்பியோடு காரின் மேல் உட்கார்ந்திருந்தது. இவர்களது பகுதிகள் நம் நாட்டின் சேரிகளைப் போலத் தனியே கிடக்கின்றன. இவர்களோடு கலப்பார் வெகு குறைவு. ஏழ்மை, கல்வியின்மை, பாகுபாடு முதலிய காரணங்களால் இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியேதான் இருப்பார்களா என்று பலவிதமான யோசனைகளோடு கடைக்கு வந்து சேர்ந்தேன்.