பேரவையின் காலங்காட்டி (FeTNA Calendar)

கடந்த சில ஆண்டுகளாக, பேரவையின் சார்பில் காலங்காட்டி (Calendar என்பதற்கு காலங்காட்டி என்பது பொருத்தமாகப்படுகிறது) வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அடுத்த ஜூலை வரை, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பக்கமென இது வடிவமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழர்களின் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள் என ஒரு ஆண்டும், தமிழர்களின் தொழில்கள் என ஒரு ஆண்டும் ஒவ்வொரு விதமாகப் படங்களும் செய்திகளும் இக்காலங்காட்டிகளை அலங்கரித்தன. இவ்வாண்டு "தமிழ்நிலப் பறவைகள்" என்ற தலைப்பில் படங்களையும், உள்ளீட்டு விவரங்களையும் தொகுத்திருக்கிறோம்.

சங்க இலக்கியங்களிலிருந்து பறவைகளைப் பற்றிய மேற்கோள்களைத் திரட்டுவது மற்றும் படங்களை எடுப்பது ஆகிய பணிகளை தங்கமணி மேற்கொண்டான். நாட்களைப் பற்றிய விபரங்களையும், என்னென்ன நாட்கள் குறிப்பிடத் தகுந்தன என்ற செய்திகளையும் சிவானந்தம் சேகரித்துத் தந்தார். இவர் கடந்த ஆண்டுகளிலும் காலங்காட்டிகளைத் திறம்பட வெளியிடுவதில் பங்காற்றியவர். ஆனந்தி-சந்தோஷ் இணையர் அச்சகத்தை அணுகுவதையும், வடிவமைப்பதில் திரு ராஜகோபால் அவர்களோடு பணியாற்றுவதையும் மேற்கொண்டனர். இடைவிடாத தேடுதலின் பின் பராசக்தி பதிப்பகத்தின் திரு சண்முகக்கனி அவர்களது அன்பான ஒத்துழைப்பைப் பெற்றார்கள். இவர்களோடு சேர்ந்து ராதாகிருஷ்ணன் அய்யாவும் ஓடியாடியதும் குறிப்பிடப்படவேண்டியது. கிட்டத்தட்ட ஓரிரு வாரங்களே விழாவுக்கு இருந்த நிலையில்தான் எல்லாம் கூடி வந்தன. எனவே பெருமளவு நேரம் செலவிட இயலவில்லை என்றபோதிலும் காலங்காட்டி மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. அழகான படங்கள், செறிவான பாடல்களும், விளக்கங்களும் என மேற்புறத்திலும், கீழ்ப்புறத்தில் நாட்களும் அவற்றைப் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் அச்சகத்தினர் அருமையாக அச்சிட்டுத் தர சக்தி குழுவினரின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவிற்கு வந்திறங்கியது காலங்காட்டி.

இதற்காக தங்கமணி எழுதியிருக்கும் முன்னுரை பளிச்சென இருக்கிறது. இயற்கை எப்படி நம்மோடு நாமாக இருந்தது ஒரு காலத்தில் என்று சொல்வதோடு மீண்டும் நம்மை இயற்கையோடு ஒட்டிக் கொள்ள ஒரு உந்துதலையும் தருகிறது. அம்முன்னுரை கீழே:

"அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் எந்த நாட்டவருக்கும் ஒரு பண்பாட்டு அதிர்ச்சி ஏற்படுவது உண்டு. பண்பாட்டு அதிர்ச்சி என்று இங்கு குறிப்பிடப்படுவது சமூக பழக்கங்கள், உணவு உடை சார்ந்த வேறுபாடுகளால் விழைவதை அல்ல. இவற்றுக்கெல்லாம் வேராக இருக்கக் கூடிய மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவில், அடையாளப் படுத்திக் கொள்ளலில் உள்ள வித்தியாசத்தால் விளைவதையே. கீழை நாடுகளின் பண்பாடு என்பது நீண்ட தொடர்ச்சி கொண்டது. அது இன்றும் பழங்குடிகளின் கூறுகள் பலவற்றை தன்னுடன் கொண்டது. தனது பழங்குடிக் கூறுகளை அறியாமையானது என்றோ அறிவுக்கு எதிரானது என்றோ அது தீர்மானமாகக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் கீழைப் பண்பாட்டை பல பழங்குடிக் கூறுகளை, நம்பிக்கைகளை, அறிதல்களை அழிக்காவண்னம் உன்னதப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு எனக் கூறலாம்.

கீழைப் பண்பாடுகள் இயற்கையை முழுமுதலாகக் கடவுளின் வடிவாகக் கொண்டால் அதில் மனிதன் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவது உண்மைதான். ஆனால் அவ்விடம் அவனது தன்னை அறியும் தகைமை கருதியே அவனுக்கு அளிக்கப்படுகிறதே அல்லாமல் எவ்வகையிலும் மற்ற உயிரினங்களைவிட மேலானதாகவோ உரிமை கோருவதாகவோ அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த பிரபஞ்சத் தொகுதியில் அவனும் ஒரு துளி. தன்னை அறியும் திறன் கொண்டதால் மேலும் பொறுப்பதிகமுள்ள ஒரு உயிர். மாறாக மேலை பண்பாடுகள் மனிதனை இந்த பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக நிறுத்துகின்றன. இந்த பிரபஞ்சமும் அதன் உயிர்த் தொகுதிகளும் அவனது வாழ்வின் வளங்கருதியும் அவனது மகிழ்வு கருதியும் அவனுக்காகப் படைக்கப்பட்டனவாகக் காட்டுகின்றன. இந்தப் பண்பாட்டு வேறுபாடு மிக ஆழமானதாகவும், இன்றைய மனித வாழ்வியல் நோக்கத்தின் அடிப்படையைத் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது. கலை, பொருளாதாரம், அறிவியல், மனித வாழ்வின் வெற்றி இப்படி மிகப்பெரிய மனிதச் செயல்பாடுகளின் திசையையும் போக்கையும் தீர்மானிப்பவையாக இந்தப் பண்பாட்டுக் கூறுகளே உள்ளன. மனிதனை ஒரு படைப்பாளனாக உருவாக்கும் கல்விமுறையை வழக்கொழித்து வெறும் உற்பத்தியில் இயந்திரங்களுக்கு நிகரான ஒரு பங்காளியாகவும், தீவிர நுகர்வோனாகவும் மட்டும் சமைக்கும் கல்வி முறை உருவாக்கத்திலும் மேலைப் பண்பாட்டுக் கூறுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

கிழக்கில் குறிப்பாக தமிழ்ப் பண்பாட்டில் இயற்கையின் மாபெரும் கட்டமைப்பில் மனிதன் என்பவன் ஒரு குறிப்பிடத்தக்க, பொறுப்பான இடத்தைப் பெற்றவன். இயற்கையின் சமநிலையைக் குலைக்காவண்ணம் வாழ உரிமையளிக்கப்பட்டவன். தமிழ்ப் பண்பாடு பிரபஞ்சத்தைக் கூர்ந்து கவனித்து அதன் எல்லையற்ற பேராற்றலில் தன்னையும் ஒரு துளியாக உணர்ந்து ஒரு சமநிலையை அடைவதையே விடுதலை என்று அழைக்கிறது. மனித அகவுணர்வுகளை வெளிப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் புற உலகின் அத்தனை சாத்தியங்களையும் தமிழ்ப்பண்பாடு பயன்படுத்திக் கொண்டிருப்பதை நமது இலக்கியங்களைப் படிக்கும்போது உணரலாம். இந்த வகையில் இந்த நாட்காட்டியை சில தமிழ்நிலப் பறவைகளும் சங்கத் தமிழும் அழகு செய்கின்றன."

இந்த காலங்காட்டியின் பி.டி.எப் கோப்பு விரைவில் பேரவையின் இணைய தளத்தினூடாக தரவிறக்கக் கிடைக்கும். பார்த்து மகிழுங்கள்.

ஜூலை 2011 பக்கத்தில் ஒரு அழகிய தூக்கணாங்குருவி அதன் கூட்டினருகில் உட்கார்ந்திருக்கும் படமும், கீழ்க்காணும் பாடலும் அதன் விளக்கமும் அமைந்திருக்கிறது:

எந்தையும் யாயும் உணரக்காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைக்கெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூக்கணங்குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே

இதன் பொருள்: (காதலை) என் தந்தைக்கும் தாய்க்கும் சொல்லி, ஒளிந்திருந்த செய்தி வெளியே வந்த பிறகு, மலைநாட்டின் தலைவன் முன்வந்து கேட்டபிறகு எல்லோரும் (திருமணத்துக்கு) ஒருமனதாக ஒத்துக்கொண்டனர். ஆனால் அதுவரைக்கும் ஊரார் பேசிய வம்பானது, வளைந்த இறகையுடைய தூக்கணாங்குருவி நெடிய பனைமரத்திலே கட்டிய கூட்டைவிடச் சிக்கலானதாக இருந்தது.

ஆங்கிலத்தில் (மொழிபெயர்ப்பு: Robert Butler)- I explained it to mother and father so that they understood; then, once it was out in the open, our Lord of the mountain country came and asked them himself, and they were agreeable - so that now this stupid town, whose opinions are as confused as the nests that the weaver birds, with their curved wings, weave in the tall, dark palmyra palms, is finally at one with us.


இது ஒரு அழகான பாடல். ஒரு பெண் பாடுவதாய் அமைந்திருக்கிறது. இரு காதலர்களைப் பற்றி ஊர் பேசும் வம்பு எத்தகையது என்பதை நளினமாகச் சொல்லும் கவிதை. உறையூர் பல்காயனார் என்பவர் குறுந்தொகையில் எழுதியிருப்பது (374வது பாடல்). ஒவ்வொரு மாதமும் இருக்கும் பாடலை மனனம் செய்வதை பொழுதுபோக்காக ஒவ்வொரு குடும்பமும் கொள்ளலாம்! மேற்கண்ட பாடலை நான் ஓரளவுக்கு மனப்பாடம் செய்துவிட்டேன் :)) இதற்கான மெட்டும் கூடி வருகிறது!