நா பொம்பளை

நிறுவப்படாத குற்றமொன்றுக்காய்
சிறைச் சுவர்களுள்ளேயே
வலிசுமந்து திணறிப்பிரசவித்து
பாலருந்தும் மகவைப் பிரிந்து
ஆண்டிருபதாகியும் மூச்சுத் திணறி
இருட்டறையில் கிடப்பவள்
பொம்பளை இல்லை

யோனிகளுக்குள் செருகிய
துப்பாக்கியை வெடிக்கப் போகிறானக்கா
நீங்களும் அப்பாவும் காப்பாற்றுங்களக்கா
என்று அலறியவர்களில் யாரும்
பொம்பளையா எனத் தெரியவில்லை

சட்டங்களுக்கு முன்னும் பின்னும்
அரசின் ஆசியோடு வன்புணரப்பட்டும்
தெருக்களில் அம்மணமாய் விரட்டப்பட்டும்
என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டும்
நித்தம் சீரழியும் எவளும்
அடித்துச் சொல்வேன்
பொம்பளையே இல்லை.

நா பொம்பளை.

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய்
என்று பாரதியை நான் ஒப்பித்தபோது
நீ கைதட்டியிருந்தால்
அதற்கு நான் பொறுப்பல்ல.
அது நேற்று.

நான் எந்தையின் நாவினடியில்
மூழ்கித் திளைத்துப் பாடம் பயின்றவள்
என்நாவிலும் எந்தையே நடமிடுகிறான்
எனவே இன்று சொல்கிறேன்
நா பொம்பளை

சட்டமே நீதியே என்னைக் காப்பாற்று!
நீதி தவறியபோது
பொம்பளையொருத்தியின்
கற்பின் வலிமையால்
எரிந்தது மதுரை
சொன்னது என் தமிழ்.
எச்சரிக்கிறேன்!
நீதி தவறாதே
இன்னொரு பொம்பளையின்
கற்பினால் எரிந்தது
இன்னொரு தலைநகரென்று
வரலாற்றைச்
சொல்ல வைத்திடாதே!