எங்கிருந்தோ வந்து என் சைக்கிளுக்கு முன்னே குதித்தது அணில் ஒன்று. சைக்கிளின் முன்னாலேயே பாதையில் ஓடியது. சற்றைக்குப் பின் இன்னொரு மரத்தில் ஏறிக் கொண்டது. அந்தப் பாதையில் மான்களை இரண்டாவது முறையாகக் காண்கிறேன். இதுவும் அதிகாலை வண்டியைப் பிடிக்க வரும்போதே நிகழ்ந்தது. இன்றைக்கு நான்கு மான்கள். இரண்டு பெரியன. இரண்டு குட்டிகள். ஒரு மனிதனைக் கண்டதும் அவை மிகவும் அஞ்சி நின்றன. நின்று ஒரு படம் எடுத்தேன். சிறந்த மான் படங்கள் பலவற்றைப் பார்த்திருந்தபோதும் ஒரு அலைபேசியால் நான் படமெடுக்க என்ன காரணம்? என் பழக்கம் அல்லது எனது புகைப்படம் என்ற சுயம் சார்ந்த ஆவல் என்பதைத் தவிர வேறெதுவும் இப்போது தோன்றவில்லை. நான் மறுபடியும் என் சைக்கிளை மிதிக்கத் துவங்கியபோது மான்கள் காட்டுக்குள் ஓடின. அவை அடுத்த வளைவில் சாலையைக் கடக்குமிடத்தில் நானும் கடப்பேன் என்பதை நானறிந்திருந்ததைப் போலவே அவையும் அறிந்திருக்க வேண்டும். எனவேதான் மரங்களுக்கூடே நின்று அவை நான் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தன. நான் அதன் பிறகு அவற்றைப் பார்க்கவில்லை. எதிர்பாராமல் எதிர்ப் படுகின்றவர்கள் என்னுள் பதிந்து போகிறார்கள். அன்றைக்கொருவர் என் முன்னே நடந்து போவதை வெகு அருகில் சென்றபோதுதான் பார்த்தேன். சைக்கிளின் சத்தம் கேட்டுத் திரும்பியவர் அதிர்ந்து போனார். முன்னால் ஒரு மனிதனைக் கண்டு நானும் அதிர்ந்து போனேன். அவரது அமைதியான நடையினை நான் குலைத்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்ள வேண்டியிருந்தது. இன்னொரு நாள் ஒரு பெண் பாதையோரமாய் ஒதுங்கி நின்றதை அவளருகே சென்றபோதுதான் கண்டேன். அவள் புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.
கடவுச் சீட்டைப் புதுப்பிக்க வேண்டும். அதைப் புரட்டிப் பார்த்தேன். அதன் ஏடுகளுக்குள் என் 10 வருடங்களை விறுவிறுவென யார்யாரோ எழுதி முடித்துவிட்டார்கள். முச்சந்தியில் ஒரு நீரூற்றை வைத்திருக்கிறார்கள். அது எப்போதும் உயரமும் குட்டையுமாய்க் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. நான் அவளோடு ஒரு உரையாடலில் ஈடுபட்டிருந்தேன். ஓங்கியும் தாழ்ந்தும் கொப்பளித்து விழும் தண்ணீரின் நிறம் மாறிக்கொண்டே இருப்பதை இரவுகளில் பார்க்கமுடியும்.
ஒருநாள் முடிந்தமட்டும் களைந்துவிட்டு நீச்சல் குளத்துக்குள் முங்கினேன். மூச்சை அச்சாகப் பிடித்துச் சுழன்றது நினைவு. மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்வரை நான் மூச்சைப் பற்றி நினைப்பதில்லை. தொலைக்கும்போது தவிக்கிறது மனம். தொலைந்து போகின்ற பொழுதுகளில்தான் அனுபவிக்கும் ஆவல் கிளர்ந்தெழுகிறது. இருக்கும் என நினைப்பது ஆறுதல். ஆறுதலாக இருக்கும்போது மனம் அனுபவிக்க அவாவுவது இல்லை. தொலைந்து போகும் என்ற தவிப்பே அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ? தவிப்பு துயரம். உய்த்தல் இன்பம். தவிப்பு பசி. தவிப்பு தாகம். உய்த்தல் உணவு. உய்த்தல் விடாய் தீருதல். தவிப்புக்கும் இன்பத்துக்குமான நாளாந்தத் துள்ளல் அணுக்களினுள்ளே மின் துகள்களின் (எலக்ட்ரான், புரோட்டான்) துள்ளலைப் போலிருக்கிறது என்று சொல்லலாமா. வேகமாய்த் துள்ளும் அணுக்கள், உலோகங்கள், வேகமாய் வினைபுரிகின்றன. நிலைமாறிப் போகின்றன. துள்ளலின்றி, வினைகளின்றி நிலைத்த உலோகங்களை noble metals என்கிறோம். inert என்கிறோம். வினை புரியாதவை, காலத்தால் சடுதியில் மாறாதவை எல்லாம் nobleஆகுமா? ஆறுதல் நிலைத் தன்மையைத் தருகிறது. ஆறுதலும் அமைதியும் ஒருபுறம். தவிப்பும் தேடலும் ஒரு புறம். அமைதி மாற்றமின்மையிலும் செயலின்மையில் இழுத்துக் கொண்டுபோய் விட்டுவிடும். இருப்பவற்றின் மதிப்புகளை உணராமலடித்துவிடும். தேடல் அமைதியைக் குலைக்கிறது. இன்பத்தை வேண்டி நிற்கிறது.
சிலர் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரிச் சாலையில் பெண் பிள்ளைகள் நடந்து போகிறார்கள். சக்கரங்கள் சுழல்கின்றன. எனது நிறுத்தம் அடுத்தது.
பேருந்துக் குறிப்புகள்
Posted by சுந்தரவடிவேல் at 2 comments
Subscribe to:
Posts (Atom)