நான் பிராமணத் துவேஷியா?

எழுத வந்துவிட்டால் விவாதங்களிலே சக்தி விரயமாவதைத் தடுக்க முடியாதோ என்னவோ. ஒன்றும் சொல்லாமல் போய்விடலாம். அது எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளப்படும். சொல்லலாம். அதுவும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளப்படும். ஆக, பேசினாலும் பேசாவிட்டாலும் ஒவ்வொருவரும் தத்தம் மனோநிலைக்குத் தகுந்த மாதிரி எடுத்துக் கொள்வார்கள்.

அச்சுதன் கவிதையும் அதையொட்டிய வெளிப்படையான நேர்மையான விமர்சனங்களும் முடிந்துவிட்டன என்று நினைத்தேன். அது இன்னொரு பக்கம் இன்னொன்றைக் கிளப்பியிருக்கிறது. அருண் என்னையும் சேர்த்துத்தான் சொன்னார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். என் மேல் ஒரு முத்திரையைக் குத்துவதன் மூலம் என்னுடைய எல்லா விதமான உணர்வு வெளிப்பாடுகளுக்கும் பிராமண எதிர்ப்பாளச் சாயம் பூசப்பட்டுவிடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நான் எதிர்த்தது சில கொள்கைகளை, நம்பிக்கைகளை, நடைமுறைகளை. நான் எந்தச் சமூகத்தினரையும் ஒட்டு மொத்தமாக நிறுத்தி நீங்கள் எல்லாரும் பொய்யர்கள் என்று சொல்லவில்லை. அதே போல எல்லா பிராமணரல்லாதவர்களையும் அணைத்துக் கொண்டு ஆஹா நீ சொல்வதே உண்மை என்றும் சொல்லவில்லை. அருணின் பக்தியை விமர்சித்த அதே நேரத்தில் அவருடைய சமூகப் பிரக்ஞை குறித்த எனது மதிப்பையும் நான் என் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். டுபுக்கின் நகைச்சுவையையும் நான் ரசித்தே இருக்கிறேன். இவர்களது விரோதி நான் என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கோ அவர்களுக்கோ எந்த லாபமில்லை. (வலைப்பூக்களிலே கலகலப்பும், புரிந்துணர்வும் மாண்டுபோகும் நட்டமுண்டு). ஆனால் என் மீது இன எதிர்ப்பாளன் என்ற அவப்பெயர் குத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் எனக்கு எல்லா மதத்துக்கார நண்பர்களும் இருக்கிறார்கள். நான் மனிதர்களோடு அவர்களது தன்மைகளுக்காகவே இணக்கம் கொள்கிறேன். மதத்துக்காகவும் சாதிக்காகவும் அல்ல.

ஒருவன் கறுப்பின மக்களின் துயரங்களைப் பற்றியும், அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளைப் பற்றியும் எழுதுகிறானென்றால், அவனை வெள்ளையன் விரோதி என்று முத்திரை குத்துவது சரியில்லை. அவனுக்கும் வெள்ளைக்கார நண்பர்கள் இருப்பார்கள். அவனுக்கும் வெள்ளைக்காரனின் பல பழக்க வழக்கங்கள் பிடிக்கும். அவன் மதிக்கும் வெள்ளைக்காரப் பெரியவர்கள் இருப்பார்கள். கருத்துக்களை விட்டுவிட்டு அல்லது அவற்றுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் சாதீய அடிப்படையில் "டேய் நம்மாளு ஒருத்தனை அவன் கிண்டல் பண்ணிட்டாண்டா, மொத்துங்கடா அவனை" என்று குழுவாகச் சேர்ந்து கொண்டு விமர்சனங்களைக் கிளப்புவதுதான் சாதீயம் என்பது. அதுதான் கண்டிக்கப் பட வேண்டியது. இது எந்தச் சாதியானாலும் சரி. இங்கிருப்பவர்கள் யாருக்கும் உலகம் கெட்டழிய வேண்டும் என்ற ஆசையோ அல்லது தமிழனோ இந்தியாவோ தாழ வேண்டுமென்ற நோக்கோ இல்லை. என்னைப் பாதித்த விஷயங்களை உண்மையாக நான் எடுத்து வைக்கிறேன். உங்களுக்கு உண்மையென்று படுவதை நீங்களும் சொல்லுங்கள். உண்மை உங்களிடமிருந்தாலும், என்னிடமிருந்தாலும் அது நின்று கொள்ளும். எனவே முத்திரை குத்துவதைத் தவிர்க்கவும். அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாடுகளின் குறைபாட்டைப் பற்றி ஒருவர் எழுதுகிறாரென்றால் அவரை அமெரிக்க எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்துவது நியாயமில்லை. சமூக அக்கறையே அவரை அவ்வாறு எழுத வைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

டுபுக்கு சொல்வது போல இந்த மாதிரியான விவாதங்களை விடுத்துப் பேசாமல் ஜோதிகாக்குக் கல்யாணம், சிம்ரனுக்குச் சீமந்தம் என்று எழுதிக்கொண்டிருக்கலாம். நண்பர்கள் கூடுவார்கள். ஒருத்தரோடும் பிரச்சினை வராது. என் நண்பர்கள் மீதும் என்னால் buy one get one free ரக முத்திரைகள் குத்தப்படாது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் என்னால் அது முடியாது. நான் உண்மையென்று நினைப்பவற்றை, அநீதியென்று எதிர்ப்பவற்றை எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இதனால் யாருடைய அதிருப்தியை நான் சம்பாதித்துக் கொள்ள நேர்ந்தாலும், அருணின் முகப்புப் பக்கத்திலே இடப்பக்கம் இருக்கிறதே ஒரு கொள்கைப் பாட்டு, அது போல் என்ன செய்தாலும்; நீங்கள் எந்த சாதிக் காரராயிருந்தாலும் உங்களது உண்மைக்காகவும் சமூக அக்கறைக்காகவும் உங்களை மதித்துக் கொண்டே.

நான் மனித வதையில், வன்முறையில் கடவுள் நம்பிக்கைத் தகர்வதைக் குறித்துக் கவிதை எழுதினால் அது பிராமண எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இதில் எனக்கு ஆச்சர்யமே. எனக்கு வைணவர்களை, ஐயங்கார்களைத் தெரிவதற்கு முன்பேயே பெருமாள் கோயில் கட்டி, வருடாவருடம் கம்பசேவை நடத்தும் தாத்தாக்களையும், மாமாக்களையும்தான் தெரியும். நான் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று சொன்னது அவர்களையும் மனதில் வைத்துக்கொண்டுதான். திருவரங்கமும், சிலையும் மட்டுமில்லை, தங்கமணியின் இரண்டு தாத்தாக்களும் தலா சைவத்துக்கொன்றும் வைணவத்துக்கொன்றுமாய்க் கட்டிய இரண்டு ஊர்க்கோயில் சாமிகளும்தான் கடவுள் எதிர்ப்பில் உதிர்கின்றன. கடவுள் மறுப்பினால் நான் எவ்வாறு பிராமணத் துவேஷியாகிறேன்?

தமிழிசைக்கு ஆதரவுக்குரலால் நான் பிராமணத் துவேஷியா? அப்படியென்றால் என் கர்நாடக சங்கீத எதிர்ப்பானது தண்டபாணி தேசிகர் திருவையாற்றிலே தமிழில் பாடியதற்காக மேடையை அலம்பிவிட்ட சாதி வெறிக்கு, மொழி ஆணவத்துக்கு எதிராகப் பிறந்தது. தமிழ்வழிக் கல்வி வேண்டுமென்று ஆசைப்படுவதால் பிராமணத் துவேஷியா? தாய் மொழியிலே கற்க வேண்டுமென்று பாரதியிலிருந்து, ஐநா அமைப்புகள் வரை கூப்பாடு போட்டதிலிருந்து தெளிந்து அவ்வழி செல்ல விழைகிறேன். இதிலே எங்கே வரும் பிராமணத் துவேஷம்? ஐயா, ஈழ மக்களின் பிரச்சினைக்கு, அவர்களது கண்ணீருக்கு எனக்கு இருக்கும் ஆதங்கத்தால் நான் பார்ப்பன துவேஷியாகப் பார்க்கப் படுகிறேனா என்றால் அதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உன்னைச் சொல்லவில்லை, ஆனால் இணையத்திலே பிராமணத் துவேஷம் கொப்பளிக்கிறது என்று சொன்னால் அதை என் சொற்ப கால இணைய அனுபவத்தைக் கொண்டு ஆமாமய்யா, கொப்பளிக்கிறது என்றுதான் சொல்வேன். இணையத்திலே இது தொடங்கவில்லை. வேதகாலத்திலே சார்வாகர்கள் தொடங்கி, சமணத்தில் வளர்ந்து, புத்தனில் உச்சத்தை அடைந்தது அந்த எதிர்ப்புக் குரல். வள்ளுவனை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எழுத வைத்தது. சட்டநாத பட்டரின் முகத்தில் கோபக்கேள்வியை வீசும் சித்தனை வளர்த்தது. அதே கோபந்தான் பாரதியை "தமிழ்நாட்டுப் பார்ப்பார்" என்று கொதிக்க வைத்தது, ஈரோட்டிலே தழலைப் பரப்பியது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் நடுவில்தான் பாரி வள்ளல்-கபிலன், பாரதி-பாரதிதாசன், பெரியார்-ராஜாஜி, நானும்-என் பக்கத்து வீட்டுப் பிராமணப் பிள்ளைகளும் (என் வீடு அக்ரஹாரம்) நட்பையும் அன்பையும் நெஞ்சுக்குள் வைத்திருந்தது. இந்த வரலாறு கண்ட பிராமண எதிர்ப்புக் குரலை எங்கள் தெரு அனுமார்க் கோயில் ஐயருக்கு எதிரானதாக நான் பார்க்கவில்லை. எங்கப்பாவின் உயிர்த்தோழரான என் நல்லதொரு வழிகாட்டியான பத்மநாபன் வாத்தியாருக்கு எதிரானதாக நான் பார்க்கவில்லை. நானும் பார்க்கவில்லை, பெரியாரை உண்மையாய்ப் பின்பற்றிய எவரும் பார்க்கவில்லை. ஆனால் இந்த எதிர்ப்பு இந்துப் பத்திரிகைக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், நால்வர்ண சாதிய முறைக்கும் எதிரானது என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்த விதமான சமூக விழிப்பு சார்ந்த இயக்கங்களோ எதிர்ப்புகளோ இந்த இணையத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, தமிழில் பேசுபவர்களால் மட்டுமில்லை, ஒடுக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சிவதர்மா என்றொரு புதிய மதம் தோற்றுவிக்கப் படுவதாகப் படிக்கிறேன். இவர்கள் இந்து மதத்தின் அடக்குமுறையைத் தகர்த்தெறியத் தயாராகிறார்கள் என்றும் படிக்கிறேன்.

எனக்குக் கபிலன் பிராமணனில்லை, பாரதி பிராமணனில்லை, வாஞ்சிநாதனில்லை, சின்னக்குத்தூசியில்லை, தி.ஜானகிராமனில்லை, இணையத்திலும் வெளியுலகிலும் இருக்கும் எத்தனையோ பூணூல் போட்ட நண்பர்கள் பிராமணர்களில்லை, அவர்கள் என்னின் ஒரு கூறு. சமுதாயப் பிரக்ஞையும், இதயமும் உள்ள மனிதர்கள். எனவே என்னைப் பிராமணத் துவேஷி என்று முத்திரை குத்திவிட்டுப் போகாதீர்கள்.

ஒரு கவிதையை எழுதிவிட்டு அதற்குப் பிறகு இப்படியொரு கட்டுரையையும் எழுத வேண்டி வந்த நிலையை எண்ணிச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

0 comments: