அச்சுத வாய் ரோகம்

என் வயதோ எண்ணில, நான்
அகிலம் படைத்த காலங் கணக்கில
ஈறு வெடித்துப் புதுப்பல்லா முளைக்கிறது?
இதுயென்ன பல்லில் வலி,
பாரேன் சற்றேயென வாய்பிளந்த திருமாலின்
வாயிலே லோகங்கண்ட லெச்சுமி யீதுசொன்னாள்:

கோபுர உயரங்களிற் கிழியுதுன் மேலன்னம்
பல்லிடுக்குத் துருக்கலப்பைக்குச் சீழ்
இவரையவர் அடித்தாரென்று அவரையிவரடித்ததனால்
அவரையிவர் கழுத்தறுத்த ரத்தங்கொஞ்சம்
இவர்மேல் அவர் போட்ட குண்டின் புகை,
இன்னும்...

போதும் நிறுத்து பொன்னாளே.
யோசனையாய் வாயெரிகுண்டுப் புகையிழுத்து
மூக்கின்வழி வெளிவிட்டுப்
புதுசாய் வெடித்துப் பூத்த கோளொன்றை
வெளித் துப்பிச் செருமினான்.

வேண்டாமிந்த அண்டம், இவ்
விண்மீன்களை அவித்துக் கரியகற்றிப்
புதுசாய் வேறுசெய்வேன் என்றுசொல்லி
அள்ளி வாயிலிட்ட நீரில்
அடித்தது மனுசக் கவுச்சி.
விண்மீனேதும் அணையுமுன்னே
அவசரமாய்த் துப்பிச்
சுளித்த முகங்கண்டு தேவி,
நாராயண மன்னிக்க, அது
நிலஞ்செத்துக் கடலிற் சேர்ந்ததுவும்
கடலிலேயே மாண்டுக் கரைந்ததுவும்,
நும் கை அள்ளியது ஈழத்தண்ணீர்!

நாராயண நாராயண.
வாசவி வால் நுனியெடுத்து
உள்நாக்குக் குடைந்து ஓக்காளித்தும்
கமலப்பூமணந் திரும்பவே யில்லை.
பின் இளவளர் கொங்கைபற்றி
முறையேழு புணர்ந்து ஓய்ந்து
ஊனீர்க்கடவாய் அச்சுதன் உறங்கிப்போனான்.


பின்குறிப்பு:
திருமால் விஸ்வரூபத்திலே வாய் திறப்பார். அதற்குள் லோகமெல்லாந் தெரியும். காட்சிகள் தெரியும். இப்போதைய காட்சிகளால் திருமாலுக்கு வேதனை. ஆயினும் அவரால் ஒன்றும் செய்வதற்கில்லையென்பதைக் கவிதை சொல்கிறது. 1985 இதே நாளில் (மே 15) ஈழத்தில் குமுதினிப் படகில் மக்கள் வெட்டப்பட்டதற்கும், மற்ற நாட்களில் மற்ற இடங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கும் காரணமாயிருக்கும் அரசுகளின் பயங்கரவாதத்தை நினைவில் வைப்போம்.

0 comments: