நம்பிக்கைச் சாடலும், அழகியலும்

இது சண்டையில்லை. நேற்றைய கவிதை மீதான திரு. பத்ரியின் விமர்சனத்துக்குப் பதில் எழுதும் பொருட்டு யோசித்தபடி இருந்தேன். எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன். இதிலே பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். அல்லது இந்த மாதிரி யோசிக்கலாமே என்று வாசனைப் போல் வழிப்படுத்துங்கள். இன்னுமொன்றும் சொல்லிவிடுகிறேன், பத்ரியின் பல விஷயங்கள் குறித்த பார்வைகளை நான் மதிக்கிறவன். சரி. அவர் அந்தக் கவிதையிலே இரண்டு விஷயங்களைக் குறைபாடென்று சொன்னார். ஒன்று நம்பிக்கைச் சாடல். இன்னொன்று அழகற்ற கலைவடிவம். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நம்பிக்கை: மனிதனுக்கு நிறைய நம்பிக்கைகள் இருக்கின்றன. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மற்றும் இடைப்பட்ட வாழ்வு குறித்தும் நிறைய நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்நம்பிக்கையில் எதிர்பார்ப்பும் மிகவே கலந்திருக்கிறது. தான் மற்றவரால் சமூகத்தில் கண்ணியத்துடன் காணப்பட வேண்டும் என்பது மனிதன் சமூகத்தின் மேல் வைக்கும் நம்பிக்கை. தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி மன்றத்துக்குச் செல்வது நீதி மேல் இருக்கும் ஒரு நம்பிக்கை. எதிர்பார்ப்பு. இதே மாதிரிதான் வேலை கிடைப்பதிலிருந்து தண்ணீர் கிடைப்பது வரை நம்பிக்கைகள். இவை நடைமுறை வாழ்வு சார்ந்த நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகள் நம் நாட்டிலே பொய்த்துப் போவது கண்கூடு. இந்த வாழ்வுசார் நம்பிக்கை மறுப்புகள் மனிதர்களை எந்த அளவுக்குப் பாதிக்கிறது?

இப்போது மத நம்பிக்கைகளை எடுத்துக் கொள்வோம். இகத்தில், பரத்தில், அல்லது இரண்டிலும் நல்வாழ்வு வாழ மதங்கள் போதிக்கின்றன. நல்வாழ்வு மேல், நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளவர்கள், மதங்களின் வாயிலாக இவை கிடைக்குமா என்பதைத்தான் தேடுகிறார்கள்.

இந்த இரு நம்பிக்கைகளிலே எந்த நம்பிக்கை பெரியது, எது சிறியது? நசுக்கப்பட்ட வாழ்வு வாழ்ந்தபடி சாதாரணத் தேவைகள்கூடக் கிட்டாத மனிதனின் நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவமதிப்பு, இந்த நம்பிக்கைச் சாடல் அல்லது நம்பிக்கை முறிப்பு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா? இதுதான் வாழ்க்கை என்ற நிலையில் தன்மீது கவிந்து கிடக்கும் இருளை அவன் உணரவோ அல்லது அதை நீக்கவோ தலைப்படுகிறானா? இப்போது மத நம்பிக்கைச் சாடலை நினைப்போம். மதநம்பிக்கைச் சாடல் ஏன் இவ்வளவு கடுமையாகக் கண்டிக்கப் படுகிறது? அந்த மனிதனுடையதும் நம்பிக்கை. இந்த மனிதனுடையதும் நம்பிக்கை. அந்த மனிதனின் வாழ்வுகுறித்த நம்பிக்கைகள் கலைக்கப் படுவது கண்டு கொள்ளப் படவில்லை. ஆனால் இந்த மனிதனின் மதநம்பிக்கைகள் விமர்சிக்கப்படும் போது மனம் அதிக அளவில் புண்படுகிறது. இந்த வித்தியாசம் ஏன் என்று யோசிக்கிறேன். மனிதனுக்கு வாழ்வை விட மதம் பெரியதா? இப்போதைய தேர்தல் முடிவை மதமா, வாழ்வா என்ற நோக்கில் பார்த்தால் மதத்தை விட, தனிமனித வாழ்வு மேம்பாட்டுக்காகவே மக்கள் ஏங்குவது புரிகிறது. இல்லையா? கடந்த கால மத மாற்றங்களில் இந்த ஏக்கங்களின் பங்கு அதிகம் என்றே நினைக்கிறேன். அதே நேரத்தில் மாற்றுமதத்துக்காரன் கையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக நெருப்பில் பாய்ந்த ராஜபுதனப் பெண்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இவர்களுக்கு வாழ்வை விட மதமே பெரிதாயிருந்ததா, அல்லது மாற்றான் கையில் தம் வாழ்வு சீரழியும் என்பதை உணர்ந்து, நல்வாழ்வு அல்லது சாவு என்ற முடிவுக்கு வந்தனரா? எது எப்படியோ, நம்பிக்கை நசுக்கல் தவறு. அதிலே வாழ்வு சார்ந்தது அமைதியாய் அடியில், அதிக எதிர்வினைகளின்றி நடந்து கொண்டிருப்பதாகவும், மத நம்பிக்கைச் சாடல் மேம்போக்கில் தெரியும்படி ஆரவாரமாக நடப்பதுவும், அதற்கு எதிர்வினைகள் உடனுக்குடன் கிடைக்கும் என்பதுதான் நானறிந்த உண்மை.

கலை வடிவம்: அந்தக் கவிதை அசிங்கமாக இருக்கிறதென்றார். ஒத்துக் கொள்கிறேன். எனக்கே அதைப் படிக்கும்போது தொண்டையில் ஏதோ செய்தது. அதிர்வலையை மெல்லவும் ஏற்படுத்தலாம். கடுமையாகவும் ஏற்படுத்தலாம். பண்டைய கிரேக்கக் கலை வடிவங்களில் இந்த இரண்டும் உண்டு. அபலோனியம் (appollo), டயோனிசம் (dianoisia). நியெட்சேயின் கூற்றுக்களின்படி அபலோனியக் கலையம்சம் அமைதியானது, அமரிக்கையானது. டயோனிசக் கலைகள் ஆர்ப்பாட்டமும், ஆவேசமும். அபலோனியம் தெய்வீகம் என்று கொண்டாடப் பட்ட போது டயோனிசக் களியாட்டங்கள் குரூரமாகவும், அநாகரீகமாகவும் காட்சியளித்தன. இந்த டயோனிசமே கிரேக்கத் துன்பியல் நாடகங்களுக்கு அடித்தளம். இந்நாடகங்களில் வரும் பாத்திரங்கள் தெய்வங்களின் நிரந்தர அன்பையும் ஆசியையும் வேண்டி நிற்பதில்லை. தம்முடைய ஆற்றல்களில் நம்பிக்கை கொண்டு கடவுளர்களைப் புறக்கணிக்கவும், அவர்களை மீறிச் செல்லவும் அவர்கள் தயங்குவதில்லை. நியெட்சே இவர்களில் ஒருவனான ப்ராமிதியஸ் என்பவனைப் பற்றிச் சொல்லும்போது, "தனக்கு அப்பாற்பட்ட சக்திகளைத் தொழுது வணங்கித் தன்னை வாழ்விக்குமாறு இறைஞ்சுவதை விட்டுவிட்டுத் தன் ஆற்றலில் முழு நம்பிக்கை வைத்துத் தன்னுடையை வாழ்க்கையை நடத்தும் பொறுப்பைத் தானே துணிவுடன் ஏற்றுக்கொள்ள மனிதன் முன்வந்து விட்டான்" என்கிறார். இவ்வகையான டயோனிசக் கலைகளிலே மென்மையையும் அழகையும் தேட முடியாது. எங்கள் ஊர்க் கொம்புக்காரனுக்குக் கொம்புகள் இருக்கும், பெருங்கடா மீசை, கையிலே கத்தி பார்க்கப் பயம். பக்கத்து முருகன் கோயிலிலே முருகன் அழகாய் நிற்பார். இது ஒரு வடிவம் அது ஒரு வடிவம். ஒரு கவிதையில், அம்மாவின் யாசிப்பில் எப்போதாவது கிடைக்கும் பழஞ்சட்டையைப் போட்டுக் கொண்டவனை, சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன அம்மா நெட்டி முறித்து அழகு பார்ப்பாளாம். இவரிடம் அம்மா வழக்கம் போல் மஞ்சளும் குங்குமமும் மணக்க வருகிறதுதான் அழகு என்று சொல்ல முடியாது. இரண்டு வகையான வெளிப்பாடுகள். முடிவாக, நான் இந்த வடிவில்தான் இந்த வார்த்தைகளைப் போட்டுத்தான் இதை எழுத வேண்டும் என்று முன்யோசனையுடனெல்லாம் எழுதவில்லை. நான்கு நாட்களாய் ஊறிக்கிடந்ததை எழுத உட்கார்ந்தேன். அப்படித்தான் வந்தது. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

0 comments: