ஈழம் என்ற ஒற்றைச் சொல்லின் பின்

இப்போதெல்லாம் ஒரு வெள்ளைத் தாளையோ அல்லது கணினித் திரையில் வெண்மையாய்ப் பரந்து திறக்கும் ஒரு புதிய கோப்பினையோ கண்டால் என்னுள் எதுவும் பீறிட்டெழுவதில்லை. பொறுக்கியெடுத்துக் கோர்த்துக் கவிதையெனக் காட்டுவதற்கும் பாதைவழிகளில் எதனையும் சேகரித்துக் கொள்ளும் உற்சாகமில்லை. அவ்வப்போது திரளும் வார்த்தைகள் வெண்புகையாய்க் கலைந்து பறந்து போகின்றன. தந்தையைப் பறிகொடுத்த நண்பனுக்காகவோ, பத்தாண்டுகளாய்க் கூடிவாழ்ந்தவளுக்காகவோ எதையும் எழுதவில்லை. சிற்சில நாட்களில் சிற்சிலவற்றின் பின் ஓடிப் பார்க்கிறேன். ஒரு குறுகியகாலப் பரபரப்பின் பிறகு அவை என்னை முன்னிலும் தனிமையில் விட்டுப் போய்விடுகின்றன. எப்போதாவது எழுந்துவிடலாம் என்றுதான் வறண்ட கிணற்றிலிருந்து வெளியே பார்க்கிறேன். கிணற்றின் சுவர்களைக் கெள்ளிக் கெள்ளி மறுபுறத்திலே படிகளை அமைக்கத்தான் உள்ளுகின்றேன். அல்லது என்றேனும் மழைவந்து கிணறு நிரம்ப மேலேறிவிடத்தான் வானை நோக்கியிருக்கிறேன். செய்வதறியேன். சுடுபட்டவர்களைக் காக்கவியலாத, புறங்கைகள் கட்டப்பட்டுச் சுடுகொட்டடியில் நாட்களை எண்ணி நிற்பவர்களை விடுவிக்கவியலாத சொற்களால் வேறு எப்பயனுமில்லை என்று நினைக்கும்போது சொல்ல எதுவுமிருப்பதில்லை. அழுது பொறுக்காது அயர்ந்து கிடந்தாரை அப்புறப்படுத்தி இல்லையேல் அவர்களின் மேலாகவே ஊர்வலத்துக்காகப் பாதையமைக்கப்படுகிறது. அசோகனின் சக்கரங்கள் நிணச் சேற்றில் உருள வெற்றித் தேர் நகர்கிறது. நம்பிக்கை என்று காதில் விழும் வார்த்தை என்னுள் அச்சத்தைத் தோற்றுவிப்பதைப் பார்க்கிறேன். இருப்பினும் இது இப்படியே இருந்துவிடப் போவதில்லை.

3 comments:

said...

i am really excited மாமா-கார்த்தி.

said...

enakkum ithuthaan

said...

உங்களைப் போல கவலைகளை மறக்கவே சுற்றுலாப் பயண அனுபவங்களை எழுதுகிறேன்.