‘சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம்

சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ஜாதிப்பேய்என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது எந்த சாதி பெரிய சாதிஎன எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?

வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1931-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.

அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம்.

இதை ஒட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


தேதி: ஜூன் 1, 2010. செவ்வாய்க்கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை:

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி

கருத்துரை:

எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா

வழக்கறிஞர் சுந்தர்ராஜன்

பெண்ணியலாளர் ஓவியா

தலித் முரசுபுனித பாண்டியன்

ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம்

கேள்வி நேரம்:

விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர்.

நன்றியுரை:

பாஸ்கர், கீற்று.காம்

அனைவரும் வருக!
கீற்றிலிருந்து வந்த தகவலைப் பகிர்ந்துள்ளேன். வாய்ப்பிருப்பவர்கள் செல்லவும். தொடரப்பட வேண்டிய முக்கியமானதாக இதனைக் கருதவேண்டும்.

2 comments:

said...

இது போன்ற கணக்கெடுப்பின் நோக்கம் எதுவெனப் புரியாமலே, சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் சாதி உணர்வு குறையாமல் பாதுக்காக்கப்படும் என "இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க கும்பல்" புலம்புவதைக் காணச் சகிக்கவில்லை.

இன்றைய இந்தியக் கட்டுமானத்தின் அடித்தளமே சாதி தான் என்னும் பொழுது அதைக் கணக்கெடுப்பது எப்படித் தவறாகும் என்பதும் புரியவில்லை.

இது போன்ற விவாதங்களை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கு நன்றி. இத்தலைப்பில் ஏற்கனவே ஏதேனும் விவாதங்கள் நடைபெற்றிருப்பின், அது சம்பந்தமான சுட்டிகளை இங்கு பகிருங்கள், குறிப்பாக ஆங்கிலத்தில் உள்ளவைகளை. தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப சற்றே உபயோகமாக இருக்கும்.

said...

நல்ல பகிர்வு சுந்தர வடிவேல்..