குடிமக்களைக் கொலை செய்யும் இலங்கை அரசு.

சி.மகேந்திரன் எழுதியிருக்கும் இந்தப் பத்தி ஈழப் பிரச்சினையை இதுவரையில் பெரிதும் தொடர்ந்து வாசிக்காதவர்களுக்கு, தற்போதைய நிலையை எடுத்துச் சொல்லும்.

ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே இலங்கை உள்நாட்டு போல் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டனர். இதுநாள் வரை கிளஸ்டர் என்னும் மனிதவிரோத குண்டுகளை வானத்திலிருந்து போட்டவர்கள், இப்பொழுது வெள்ளை பாஸ்பரஸ் கலந்த குண்டுகளைப், பீரங்கிகளின் மூலம் பொதுமக்களைக் குறிபார்த்து ஏவுகிறார்கள். இது மனிதன் உட்பட மரஞ்செடிகள் அனைத்தையும் எத்து சாம்பலாக்கிவிடும். இதனால் தமிழ்மக்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கணக்கிட்டுப் பார்க்க முடியாது. சாம்பல் மட்டுமே தான் மிச்சமாய் கிடைக்கும்.

இதற்கு முன்னர் மருத்துவமனைகளில் குண்டுகள் விழுந்து போது உலகத்தின் மனிதநேய சமூகம் இதனை கண்டித்து, இது போன்றவை, இனிமேல் நடக்காத உறுதியை இலங்கை அரசிடம் கேட்டிருந்தன. இந்தியாவும் அமைதி வேடமணிந்து பொது மக்களில் ஒருவரைக்கூட கொல்லாத போரை நடத்துமாறு கோரிக்கை விட்டது. உண்மை என்னவெனில் பொதுமக்களை மட்டும் கொலை செய்யும் போரைத்தான் இப்பொழுது இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
குண்டு மழையிலிருந்து காயங்களுடன் சிலரால் மட்டுமே உயிர் தப்பித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. இவர்களில், குழந்தைகள் மட்டும் மருந்தும், மருவத்துவ வசதிகளுமற்ற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிகிறார்கள். மற்றவர்கள் பரிசோதனை என்ற பெயல் சித்ரவதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு இளைஞர்கள், காணாமல் போய்விட்டார்கள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்படலாம். கடந்த சில நாட்களில் மட்டும் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்களில் 500 பேரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்கள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் குழந்தைகள் தங்கள் இறுதி மூச்சை விடுவதற்காகப் போராடுகின்றன. உயிர் பிரிவதற்கு முன், தங்கள் கண் முன்னாலேயே குண்டு வெடிப்புகளில் சிதறிப்போன தங்கள் தம்பி தங்கை பற்றிய பாசத்தால் இரண்டு துளி கண்ணீர் சிந்திக்கொள்கிறார்கள். கண்ணீர்த் துளிகளோடு உயிர் பிரிந்து உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் படுகொலையைப் பார்ப்பதைப் போலக் கொடுமையானது வேறு எதுவும் இருக்க முடியாது. மரங்களுக்கு அடியில் பூக்கள் உதிர்ந்து கொட்டிக் கிடப்பதைப் போல, குழந்தைப் பிணங்கள் வன்னிப்பிரதேசம் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இவர்களுக்காக கண்ணீர் விடவோ, கதறி ஒப்பாரி சொல்லி அழுவதற்கோ யாரும் மிச்சமாய் இல்லை. யாருக்கும் நேரக்கூடாத இந்த வாழ்க்கை இலங்கைத் தமிழ் மக்களுக்கு மட்டும் எப்படி நேர்ந்தது?

தமிழ் மக்கள் கொலை செய்வதையே இலங்கை அரசு ஒரு தொழிலாக வளர்த்து வந்திருப்பதை ஆழ்ந்து யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக, தொடர்ந்து நடத்தி வரும் இந்தக் கொடுஞ் செயலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்திலும், இந்தியாவிலும் எழுப்பப்படாமல் இல்லை. இலங்கைத் தமிழ் மக்களும் காந்திய வழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடிப் பார்த்துவிட்டார்கள். கடைசியாக இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நார்வே அரசு பெரிதும் முயற்சி செய்தது. 2002 ஏற்பட்ட போர்நிறுத்தம் 2006 ஆம் ஆண்டில் முறிந்து போனது. முறித்தவர்கள் யார்? இலங்கை அரசு தான் என்பதை, எளிதில் புந்து கொள்ள இயலும்.

மக்கள் தரும் அதிகாரத்தை ராணுவ அதிகாரமாக மாற்றிக் கொண்டவர்கள், ஹிட்லரை போன்ற கொடுமைக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. மகிந்த ராஜபக்சேவின் குடும்பம் ராணுவத்தைச் சுவராக அமைத்துக்கொண்டு தங்கள் சுயநலவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. தேசப்பாதுகாப்பு என்ற சொல், இவர்களுக்கு எல்லையற்ற பணத்தை திருடிச் செல்லவே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைப் போல, இவ்வாறு கொள்ளை அடிப்பதற்குப் பாதை அமைத்துக் கொடுப்பது வேறு எந்தத்துறையும் இல்லை. யாராலும் கண்டுபிடிக்க முடியாத உயரத்தில் இந்த ஊழலுக்கான மர்மக் கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளது. யாராலும் இந்தக் குறைபாட்டைப் போக்க முடியவில்லை. இதனைக் கண்டறியும் வல்லமையைப் பெற்ற மாவீரர்கள் தோன்றினால் அவர்கள் சண்டே லீடர் பத்திக்கையின் ஆசியர் லசந்த விக்கரமதுங்க கொல்லப்பட்டதைப் போலக் கொலை செய்யப்படுகிறார்கள். ராணுவ விமானம் வாங்கியதில் ராணுவ செயலாளர் கோத்தபாய ராஜபக்சே செய்த பெரும் ஊழலை அம்பலபடுத்திற்காகவே லசந்த கொலை செய்யப்பட்டார்.

ராணுவத்தின் வழியே நடந்து செல்லும் இவர்களால் தமிழ் மக்களின் போராட்டத்தை அழிப்பதற்கான போரை நடத்தியே தீர வேண்டும் என்ற போதையில் மூழ்கிப் போய்விட்டார்கள். உள்நாட்டுப் போரை நடத்தும் வலிமை இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்பது அனைவரும் அறிந்தது. பாக்கிஸ்தான், சீனா, இஸ்ரேல், ஈரான் முதலிய நாடுகளிடம் தங்கள் நாட்டின் கடல் வளம், நிலம் தரும் கனிம வளங்கள் ஆகிய அனைத்தையும் நூற்றாண்டு கால குத்தகைக்கு இலங்கை அரசு அடகு வைத்துவிட்டது. இந்தப் பணத்தில் ஆயுதம் வாங்கி ராணுவ போதையில் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தின் குண்டு வீச்சால் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், யுத்தப் பொருளாதார பேரழிவால், சிங்கள மக்களின் வாழ்க்கையும் அழிக்கப்படுகிறது.

தமிழ் பேசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு பேர் அண்மைக் காலத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் மட்டக்களப்பிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் கிருஸ்துமஸ் வழிபாட்டில் பங்கேற்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அம்பாறையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அயநாயகம் சந்திர நேரு சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் ராணுவம் செயற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டைப் பலமாக எழுப்பியிருக்கிறார்கள். இதைப் போல, சென்ற ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் ராணுவத்தின் கிளைமோர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகேஸ்வரன் சிவன் கோயிலுக்கு வழிபாட்டிற்கு சென்ற இடத்தில் அங்கேயே கொல்லப்பட்டார். ராணுவத்தின் பலத்தால் விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்த்துவிடுவேன் என்று கூறும் இலங்கை அரசுக்கு, தமிழ் மக்களின் வலிமை பொருந்திய அரசியல் கருத்துகளை முன் வைக்கும் திறன்படைத்த இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஊடகங்கள் அனைத்தையும் இலங்கையின் ராணுவம், சிறை வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். உலகத்தின் எந்த நாட்டின் ஊடகமும் வன்னிப் பகுதிக்குச் செல்ல முடியாது. அப்படிச் சென்றவர்களில் யாரும் உயிருடன் திரும்பியதில்லை. அரச பயங்கரவாதத்தால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 14 என்று ஊடகங்களின் அமைப்புகள் அறிவித்துள்ளன. 20 க்கும் அதிகமானவர்கள் கொலைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலகின் பல நாடுகளுக்குத் தப்பி சென்றவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். தமிழகத்தில் சிங்களப் பத்திரிக்கைளில் சிலர் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.
அமெரிக்கா முதலான உலகத்தை ஆதிக்கப்படுத்தும் நாடுகளிடம் இலங்கை அரசு மண்டியிட்டு அடிபணிந்து நிற்கிறது. ஆனால் அதே சமயம், இந்த நாட்டின் ஊடகங்கள் உள்நாட்டுப் போர்ப் பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கிறது. பிரிட்டனின் பிபிசி, அமெரிக்காவின் சி.என்.என் முதலான தொலைக்காட்சிகளை, எங்கள் விருப்பத்திற்கு மாறாகச் செய்திகளை வெளியிட்டால் அடித்துத் துரத்துவோம் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்நாட்டு ஊடகங்களின் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு ஊடகங்களின் மூலமாகவோ எந்தச் செய்திகளும் செல்லக் கூடாது என்பது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள சட்டம். ராணுவம் எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதை அப்படியே வெளியிட வேண்டும். ஊடகச் சுதந்திரம் இந்த எல்லையோடு நின்றுவிடுகிறது.
பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு போடுவதில் தனியான திட்டத்தை வகுத்து வைத்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தன் ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று உலகின் மனிதநேய கொண்ட சக்திகள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். அமெக்காவின் புகழ்மிக்க அரசு தலைமை துணை வழக்கறிஞராகச் செயல்பட்டவர் புரூஸ்பெயின். போர்க் குற்றவாளிகள் என்று அமெரிக்கக் குடிமக்கள் இவருவரை இவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் ஒருவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான ராணுவச் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்சே. மற்றொருவர் இலங்கையின் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இருவரும் அமெரிக்க நாட்டின் குடிமக்கள். இலங்கையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகத் தான், உள்நாட்டைப் போரை உயிரைப் பணயம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று அறிவித்துள்ள இவர்கள் இருவரும் அமெரிக்க குடிமக்கள். இவர்களின் தேசபக்தி லட்சணம் இவ்வளவு தான். தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகள் இவர்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆயிரம் பக்கங்களில் தயாரித்து அமெரிக்க நீதிமன்றத்தில் புரூஸ்பெயின் வழக்குத் தொடர இருக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும், தனது குடிமக்களையே இனஅழிப்புக் கொள்கைக்காக படுகொலை செய்து கொண்டிருக்கிருக்கும் யாரும் போர்க் குற்றவாளியாகத்தான் இருக்கமுடியும். அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தபாயவும், பொன்சேகாவும் தண்டிக்கப்படவேண்டும் என்ற புரூஸ் பெயின் விருப்பத்தைப் போலவே, உலகநீதிமன்றத்தில் ராஜபக்சேவும் போர்க் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகத்திலுள்ள ஜனநாயக சக்திகளின் விருப்பமாகும்.

0 comments: