சைக்கிள் பாதை

வீட்டுலேருந்து வேலைக்கு 16 மைல். அந்தக் கார் நெரிசல்ல நகர்ந்து நகர்ந்து போறதுக்குள்ள மனுசனுக்கு சீவனத்துப் போயிரும். அப்படி அல்லாடுனப்பதான் புதுப் பேருந்து, எக்ஸ்பிரசாக்கும், ஒன்ன விட்டாங்ய. பெட்ரோல் விக்கிற விலையில மாசத்துக்கு நூத்தம்பது டாலர் பெட்ரோலுக்கே போகுதேன்னு தாடையைச் சொறிஞ்ச வேலையில இது நல்ல சேதிதானே. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்க சூப்பர் வால்மார்ட்டுலேருந்து கிளம்புது. சுமார் 40 நிமிசத்துல வேலைக்கு வந்துடலாம். போக ஆரம்பிச்சேன். படிக்கலாம், தூங்கலாம், நாம பஸ்சை ஓட்ட வேண்டியதில்லை. பஸ் புடிச்சிருச்சு.

இந்த ஊரு பஸ்ல எல்லாம் முன்னாடி, வெளிய, ஒரு சின்ன rack இருக்கு. அதுல ரெண்டு சைக்கிள் வச்சுக்கலாம். போற எடத்துக்கெல்லாம் சைக்கிளையும் எடுத்துக்கிட்டுப் போகலாம். அதைப் பார்த்ததும் எனக்கும் சைக்கிள் ஆசை வந்துடுச்சு. ஆனா பிரச்சினை வீட்டுலேருந்து வால் மார்ட்டுக்கு வர்றது 55 மைல் வேகப் பெரிய ரோடுதான். அதுல சைக்கிள் பாதையும் இல்ல. ஒரு ஞாயித்துக் கெழம சைக்கிளை எடுத்துக்கிட்டு அது வழியாத் திரிஞ்சப்ப ஒரு சின்ன உள் ரோடு இருக்கதைக் கண்டுபிடிச்சேன். அது ஒரு காடு மாதிரி இருக்கும். Campground இருக்க இடம். ஒரு அழகான சின்ன ஏரி, அல்லது பெரிய குளம். நிறைய மரங்கள். வளைந்து வளைந்து போகும் பாதை. காரோடு முட்டிக்கத் தேவையில்லாம சின்ன நடை/சைக்கிள் பாதை. ஆகா. கிளம்பிட்டேன். இப்பதான் கொஞ்சம் குளிர் குறைஞ்சுக்கிட்டு வருது.

நேத்து நல்ல வெய்யில். சைக்கிள்லதான் வந்தேன். ஊர்ல இருக்கும்போது, விடுமுறைக்குப் போகும்போதோ தங்கமணியுடன் சேர்ந்துகொண்டு பெரியாறு, கருப்பர்கோயில் அப்படின்னு சைக்கிள்ல திரிவோம். சைக்கிள்ல போயிக்கிட்டே அவனைக் கூப்பிட்டேன். இருந்தான். கொஞ்ச நேரம் கதையடிச்சோம். அப்புறம் அமெரிக்கக் குடிநீர்ல மருந்து கலந்திருக்காம்னு பேச்சு வந்துச்சு. செயற்கை மருந்துகள். மண்ணுயிரிகளால் சாதாரணமாக அழிக்கப் பட முடியாத மருந்துகள். உங்க உடம்புல ரொம்ப நேரம் தங்கி வேலை செய்யணும்னே திடமாகச் செய்யப்பட்ட மருந்துகள். திடமாகவே மண்ணிலும், தண்ணீரிலும் தங்கிவிடுகின்றன. மறுபடியும் மனிதனுக்கே வருகின்றது என்று பதறுகிறார்கள். யாரு அப்படியாபட்ட மருந்துகளைக் கண்டுபுடிக்கச் சொல்லுறது? இயற்கை மருந்துகளைப் பற்றிய அறிவை நாம் சரிவரப் பயன்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ம ஊர்லயே மஞ்சளிலிருந்து கிடைக்கும் curcumin என்ற மருந்தை, கூடுதல் செயற்பாட்டுக்காக வேதிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் சாதாரணமாக மட்கிப் போகக் கூடிய இயற்கை மருந்துப் பொருட்களை ப்ளாஸ்டிக் மாதிரி ஆக்கி உடம்பையும், வெளியையும் மாசுபடுத்துகின்றன. இதில் இந்த மருந்துக் கம்பெனிகளின் அராஜகம் தாங்க முடியாதது. இதெல்லாம் மாற வேண்டுமானால் மக்களின் உணவு முறையில், இயற்கை சார்ந்த உணவாக, வாழும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை அமெரிக்கா விரும்பாது. இப்படியாக வளர்ந்த பேச்சு கீற்றின் பக்கம் திரும்பியது. யமுனா ராஜேந்திரன் சினிமா விமர்சனத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சினிமாவின் விமர்சகர்கள், சினிமாவைப் பற்றிய இலக்கியப் படைப்பாளிகள் ஆகியோரை ஒரு வாங்கு வாங்கியிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உபபாண்டவம் படித்து முடித்து எஸ்.ராமகிருஷ்ணன் சுழற்றிவிட்டிருந்த பரிசலில் மிதந்துகொண்டிருந்தேன். சினிமா, மற்றும் சினிமா அரசியல் குறித்து எஸ்.ராவை யமுனா போட்ட போட்டில் பரிசல் ஆட்டம் கண்டுபோச்சு.

அ! வீடு வந்துடுச்சு. சைக்கிளை வெளியே சுவரோரம் சாய்த்துவிட்டு (ஏன்னா ஸ்டாண்டு இல்ல பாருங்க) வீட்டுக்குள்ள போனேன். ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. ஆமா, அவங்க பள்ளிக்கூடத்துல இன்னக்கி சர்க்கஸாம். இவர்தான் சிங்கமாம். மூஞ்சியில அப்பின சாயத்தோட அப்பாகிட்ட காட்டுறதுக்காக நிக்கிறார். இனிமே பேச்செல்லாம் வேற இடங்களுக்குப் பறந்து போகும்.

1 comments:

said...

சைக்கிள் பயணங்கள் அருமையானவை இல்லையா?
நன்றி!