தி இந்து பத்திரிகையில் மாவீரர் நாள் உரையைப் பற்றிய செய்தியில் அது பரப்பும் ஒரு தவறான சொற்றொடரைச் சுட்டிக் காட்டவே இந்தக் குறிப்பு:
இந்து சொல்கிறது: "...Prabhakaran said in his annual Heroes' Day speech on his 53rd birthday."
அதாவது மாவீரர் நாள் உரை என்பது பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற குறிப்பினைப் படிப்பவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் இவ்வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரையில் போராடி மடிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான இந்த நிகழ்வு, நானறிந்த வரையில், பிரபாகரனின் நண்பரும் போராளியுமான சார்ல்ஸ் அண்டனியின் மறைவு நாளையொட்டியே நினைவுகூரப்படுகிறது. பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26. ஆனால் இப்படியொரு இரட்டைநாக்கு வாசகத்தை எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் இந்து படிக்கும் பெரும்பாலானவர்களுக்கிடையே "பிரபாகரனின் பிறந்த நாள்தான் மாவீரர் நாள்" என்பதான கருத்தைப் பரப்ப இந்து விழைகிறது. இதன் மூலம் பிரபாகரன் என்பவர் சுய துதியில் திளைக்கும் ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போன்றவர் என்பதான கருத்தைத் திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு, அதுவும் கர்வம் கொள்ளக்கூடாது என்ற கருத்தியலில் ஊறித் திளைத்திருக்கும் நம் இந்தியக் குடிகளுக்கு, பிரபாகரனை ஒரு கர்வியாக, ஆணவத்தின் சின்னமாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆணவம் பிடித்தவர்கள் அழிவார்கள், அழிய வேண்டும் என்ற வரலாற்று நியதி நம் கதைகளுக்கு உண்டு. ஆணவம் பிடித்தவர்களுக்கு சுதந்திரம், மக்கள் நேயம் போன்ற சிந்தனைகள் இருக்கும் என்று சாதாரணர்கள் நம்புவதில்லை. எனவே ஆணவத்தோடு ஒருவரை அடையாளப்படுத்துவது நெடுங்கால நோக்கில் ஒருவரைப் பற்றிய நல்லபிமானத்தை எழச் செய்யாது.
அந்தச் செய்தியிலேயே "his outfit's cause" என்பதும், இவர் தனியொரு ஆளாக, கும்பல்களை வைத்து அட்டகாசம் செய்யும் ஒரு பேட்டை ரௌடியைப் போன்றதொரு படத்தையும் இந்து வரைய முனைகிறது. இது விடுதலைப் புலிகள் மீது ஈழத்தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கை, அபிமானம், இணக்கம், ஆதரவு ஆகியவற்றை மறுதலித்து, மக்களையும் புலிகளையும் தனித்தனியான அங்கங்களாகக் காட்டும் நரித்தனம். இவர்களால் கேணல் கருணாவை மக்களின் அங்கமாகக் காட்ட முடிந்தது. கருணா இங்கிலாந்தில் பிடிபட்டதற்குப் பிறகு, வெகு தந்திரமாக அவரைக் கழுவிவிட்டிருக்கிறது. இதே இந்து பிள்ளையான் அணி, பொக்கையான் அணி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த அணி தோன்றினாலும் அதனை அரவணைத்துச் செல்லும். ஈழத்தைப் பொறுத்தவரை இவர்களது நோக்கம் புலிகளுக்கெதிரான, அதிலும் பிரபாகரனுக்கெதிரான, ஊடக, அரசியல் குழிபறிப்புதானேயொழிய ஈழச் செய்தி, தமிழர் சுதந்திரம், மக்களாட்சி என்று எந்த மண்ணாங்கட்டியுமில்லை.
இந்துவின் தமிழீழ விரோதப் போக்கைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். வலைக்கும், ஈழப்போராட்டத்தைப் பற்றிய பதிவுகளுக்கும் புதியவர்களுக்காக இந்தக் குறிப்பு.
தி இந்து பரப்பும் பொய்
Posted by சுந்தரவடிவேல் at 11 comments
Subscribe to:
Posts (Atom)