ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா!

பன்மொழி மற்றும் பல்கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டாடும் நோக்கில் உலகெங்குமுள்ள ஐ.நா. அலுவலகங்களில், ஐ.நா.வின் ஆறு ஆட்சி மொழிகளுக்குமான விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்த ஆறு மொழிகளும் "வரலாற்று முக்கியத்துவமும், அடையாள முக்கியத்துவமும்" வாய்ந்தவை என்று ஐ.நா. தனது உலகத் தாய்மொழி தினத்தன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

இந்நாட்களாவன:

அரபு மொழி தினம் - டிசம்பர் 8. (ஏனென்றால் 1973 டிசம்பர் 8ஆம் நாளன்றுதான் ஐ.நா. அரபு மொழியைத் தனது ஆறாவது ஆட்சிமொழியாக அறிவித்தது)

ஆங்கில மொழி தினம் - ஏப்ரல் 23 (வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாள்; பிறந்தது 1564 வாக்கில்)

பிரெஞ்சு மொழி தினம் - மார்ச் 20 (1970, மார்ச் 20ல் ஆரம்பிக்கப்பட்ட, பிரெஞ்சு மொழியைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகளுக்கான, ஒரு கூட்டமைப்பு).

ரஷிய மொழி தினம் - ஜூன் 6 (அலெக்ஸாண்டர் புஷ்கின் என்ற கவிஞர் 1799 ஜூன் 6 ஆம் தேதி பிறந்தார்)

ஸ்பானிஷ் மொழி தினம் - அக்டோபர் 12 (1492ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இந்நாள் உலகெங்கும் ஸ்பானிய மொழி பேசும் மக்களால் கலாச்சார நாளாகவும், கொலம்பஸ் நாள் என்றும் கொண்டாடப் படுகிறது)

சீன மொழி தினம் - இதற்கும் விழா உண்டு. ஆனால் இன்னமும் தேதி அறிவிக்கப்படவில்லை.

இப்போது நமது கேள்விகளுக்கு வருவோம்:
1. உலகத் தாய்மொழிகள் தினம் என்ற ஒன்றை பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடும்போதே எல்லா மொழிகளையும் கொண்டாடுவதாக ஆகாதா? அல்லது அம்மையப்பனைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியது போல, இந்த அறுபடை மொழிகளைக் கொண்டாடினால் உலக மொழிகளையெல்லாம் கொண்டாடியதாக அர்த்தம் என்று ஐ.நா. சொல்கிறதா?

2. "அடையாள மற்றும் வரலாற்று முக்கியத்துவம்" ("symbolic or historic significance") என்று சொல்லிவிட்டு இந்த ஆறு மொழிகளை முன்னிறுத்தும்போது மற்ற மொழிகளுக்கு இந்த முக்கியத்துவம் குறைவு என்று மறைமுக அர்த்தம் கற்பிக்கிறதா ஐ.நா.?

3. இவ்விழாக்களுக்காக நிச்சயமாக ஆண்டுதோறும் பணம் வாரி இறைக்கப்படும். இவ்விதம் இந்த ஆறு மொழிகளும் ஆடம்பர விழாக்களோடு கொண்டாடப்படும்போது மற்ற மொழிக்காரர்கள் ஏழைக் குழந்தைகளைப் போல விரல் சூப்பிக்கொண்டு தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது எல்லாமே நம் மொழிதான் என்று பரந்த மனதுடன் அள்ளி இறைக்கப்படும் பன்னாட்டு மிட்டாய்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டுமா? இப்படிப் பொறுக்கித் தின்னும்போது "பார், உன் தாய்மொழியைப் படிப்பதை விட இந்த மாதிரி ஏதாவது படித்தாலாவது இப்படிப் பொறுக்கித் தின்னலாமே" என்று நாலு புத்திசாலிகள் யோசனை சொல்லும்போது அப்படித்தானோ என்ற எண்ணம் பிறக்குமா?

உங்களுக்குக் கண்டனம் இருந்தால் அல்லது பாராட்ட விரும்பினால் மேற்கண்ட செய்தியில் இருக்கும் தொடர்பு மின்னஞ்சலில் இருப்பவருக்குத் தெரிவியுங்கள்.

2 comments:

said...

அல்லது அம்மையப்பனைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியது போல, இந்த அறுபடை மொழிகளைக் கொண்டாடினால் உலக மொழிகளையெல்லாம் கொண்டாடியதாக அர்த்தம் என்று ஐ.நா. சொல்கிறதா?//

:)) எப்படியெல்லாம் யோசிக்கிற. சரியாக போட்டிருக்கிறாய் கேள்விய. எப்படியெல்லாம் தங்களுடைய உலக ஆளுமையை தக்க வைச்சிக்க போராடுரய்ங்கப்பான்னு வருது...

said...

கொடுமையா இருக்குண்ணே! ஆட்சி மொழி இந்த ஆறும்தாம்; அப்படியென்றால் எல்லாத் தொடர்புகளும் இந்த ஆறினால்தாம்; விழாவும் இந்த ஆறுக்குத்தான். அப்பன்னா மத்ததெல்லாம்?