திசைநாயகம்: இலங்கை அரசின் தண்டனையும், அனைத்துலகத்தின் விருதுகளும்


J.S. திசைநாயகம் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இலங்கையில் தமிழர்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வன்கொடுமைகளைப் பற்றி எழுதியமைக்காக மார்ச் 2008ல் கைது செய்யப்பட்டார். சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாமல் பயங்கரவாதத் தடை சட்டத்தின் மூலம் கடுமையான சித்திரவதைகளுடன் "விசாரிக்கப்பட்டார்". இனப் பாகுபாட்டை வளர்த்ததற்காகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு உதவியமைக்காகவும் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஆகஸ்டு 31, 2009ல் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பாகி, தற்போது சிறையில் இருக்கிறார். தமிழர்களின் நியாயமான குறைகளைக் குறித்தும், அந்நாட்டு அரசாங்கத்தின் குற்றங்களைக் குறித்தும் துணிச்சலோடும், ஊடக நெறிகளுக்கு ஏற்பவும் எழுதியமைக்காகவே அவருக்கு இந்தத் தண்டனை. இதற்கும் வ.உ.சிதம்பரனாருக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த தண்டனைக்கும் அதிக வித்தியாசமில்லை. இந்தத் தண்டனையை எதிர்த்து அனைத்துலகப் பத்திரிகைகளும், ஊடக அமைப்புக்களும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றன.
"ஒடுக்கப்பட்ட ஊடகத்தின் சின்னம்" என்று ஒபாமாவினால் வர்ணிக்கப்பட்டவர் திசைநாயகம். தமிழர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி சர்வதேசத்தின் அதிருப்தியையும், புறக்கணிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் இன்னொரு கோர முகமே திசைநாயகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனை. இது எக்காலத்திலும் தமிழர்களுக்கான நியாயமான அரசியல், சமூக சுதந்திரத்தை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை என்பதை இன்னொரு முறை உறுதி செய்கிறது. இவ்வகையான உதாரணங்களைக் கொண்டு அனைத்துலக நாடுகள் இலங்கையைத் தனிமைப்படுத்த முனைகின்றன. இத்தகைய தனிமைப்படுத்தலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் ஒரு விருது அறிவிப்பு.

"துணிச்சலான, நெறியான பத்திரிகையாளரு"க்கான விருதாகிய பீட்டர் மேக்லர் விருதினைப் (Peter Mackler Award for Courageous and Ethical Journalism) பெறும் முதலாவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் திசைநாயகம். பீட்டர் மேக்லர் என்பவர் AFP செய்தி நிறுவனத்தில் கடமையாற்றியவர். அந்நிறுவனத்தின் ஆங்கிலச் செய்திப் பிரிவை உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவர். மேலும் போர்கள், தேர்தல்கள் போன்ற நிகழ்வுகளைக் குறித்த செய்திகளை வெளியிட்டவர். அவரது பெயரால் சென்ற ஆண்டில் Reporters Without Borders (US Branch) மற்றும் Global Media Forum ஆகியவற்றால் நிறுவப்பட்டிருக்கும் இவ்விருதினைப் பெறும் முதலாமவர் திசைநாயகம். அவர் சிறையிலிருப்பதால் அவரது மனைவி நேற்று அமெரிக்கத் தலைநகரில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். திசைநாயகத்துக்கு ஏற்கெனவே 2009ஆம் ஆண்டின் அனைத்துலக ஊடகச் சுதந்திர விருது (2009 International Press Freedom Award) வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் காலங்காலமாக நிலவிவரும் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில், இலங்கை அரசு விட்டெறியும் விருதுகளுக்கு நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் தரும் செய்திகளை கர்ம சிரத்தையுடன் அப்படியே வெட்டி ஒட்டி வெளியிடும் ஊடக தர்மகர்த்தாக்களுக்கு மத்தியில், மானத்தோடும், துணிச்சலோடும், நெறியோடும் வாழும் திசைநாயகம் போன்றவர்களைக் கைகூப்பி வணங்குகிறேன். அனைத்துலக அழுத்தங்களுக்குப் பணிந்து இலங்கை அரசு அவரை விடுதலை செய்யும் நாளை எதிர்நோக்குவோம்.