இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறதா?

புலிகளின் அரசியல் தலைவராகவும், அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்குத் தலைமையேற்றவருமான சு.ப. தமிழ்ச்செல்வனைக் கொன்றிருப்பது இலங்கையரசுக்கு அரசியல் தீர்வின் மேல் இருக்கும் மரியாதையை இன்னொரு முறை வெளிக்காட்டுகிறது. ஒரு போர்க் குற்றத்துக்குள் இன்னொரு போர்க் குற்றமாக, ஒரு அரசியல் தலைவரைக் கொல்வதற்கு சூட்டழுத்த (thermobaric) ஆயுதத்தினைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது (பிபிசியின் குறிப்பை மேற்கோளிட்ட குருவிகளின் பதிவிலிருந்து http://kundumani.blogspot.com/2007/11/thermobaric.html).

சூட்டழுத்தக் குண்டுகளை இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தயாரிக்கின்றன. இவை ஏதாவது ஒரு நாட்டிலிருந்து இலங்கை இத்தகைய ஆயுதங்களை வாங்கியிருக்கலாம். பதுங்கு குழிகள், நிலவறைகள், கட்டிடங்கள் போன்றவற்றில் இருப்பவர்களை ஒரு அணு ஆயுதத்தைப் போலத் தாக்கி அழிக்கக் கூடியது இந்தச் சூட்டழுத்த ஆயுதங்கள். அணு ஆயுதங்களுக்கும் சூட்டழுத்த ஆயுதங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் கதிர் வீச்சு மட்டும்தான். சூட்டழுத்த ஆயுதங்களில் கதிர் வீச்சு கிடையாது. ஒரு இடத்தில் இந்த ஆயுதம் வெடிக்கும்போது அங்கிருக்கும் ஆக்சிஜனை முழுமையாக எரித்து ஒரு மாபெரும் வெற்றிடத்தினை உருவாக்குகிறது. இதனால் சுற்றியுள்ள இடங்களிலிருந்து அழுத்தம் பாய்ந்து வந்து நிரப்பப் பார்க்கிறது. அங்கேயிருக்கின்ற மக்களும் அதீத அழுத்தத்தால் ஏற்படும் உடற்சிதைவுக்கு (நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் முக்கியமாக பாதிக்கப்படும்) ஆளாகி இறக்க நேரிடுகிறது. இன்றைய குண்டு வீச்சில் இத்தகைய குண்டுகளை இலங்கை பயன்படுத்தியது போலத் தெரிகிறது, விரிவான செய்திகள் வெளிவரலாம். நேற்றைய இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகச் செய்தியொன்று நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது. பங்கர் என்ற சொற்பயன்பாட்டுக்கும் பங்கர்பஸ்டர் (bunker buster) என்ற சூட்டழுத்த ஆயுதப் பயன்பாட்டுக்கும் தொடர்பிருக்குமா என்று தெரியாது. ஆனால் மகிந்தவின் அரசு தன்னுடைய தோல்விகளைச் சரிகட்ட வேண்டிய அரசியல் அழுத்தத்தில் இருப்பதால், எதைச் செய்தாவது புலிகளை ஒடுக்கிவிட முயலும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்விடத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அரசு முயலக் கூடும். அமெரிக்காவானது ஈராக் பலூஜாவிலும், இஸ்ரேலானது பாலஸ்தீனத்திலும், ரஷ்யாவானது செச்னியாவிலும் செய்த அதே வேலையை இப்போது இலங்கை அரசு செய்யத் தீர்மானித்திருப்பது வெகு சாத்தியமே.

தமிழ்க் குடிமக்களைப் பற்றிய பெரும் கவலை இல்லாத இலங்கை அரசு, இத்தகைய ஆயுதங்களைக் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்விடங்களில் வீசி, புலிகளைக் கொன்றுவிட்டதாக வரும் நாட்களில் அறிவித்து, இன்றைப் போலவே குடித்து மகிழும். இன்றைப் போலவே எல்லா நாடுகளும் ஏடுகளும், தமிழ்ச்செல்வன் நல்ல மனுசன், அழகா சிரிப்பாரே என்று முனகுவதோடு நிறுத்திக் கொள்ளும். குடிமக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் (சூட்டழுத்த ஆயுதங்கள் உட்பட) ஏவப்படுவதை ஐ.நாவின் ஆயுத விதிகளுக்கு எதிராக இலங்கையரசு மேற்கொள்ளக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான இராணுவ மற்றும் அரசியல் தற்காப்புக்களைப் புலிகள் எவ்விதம் மேற்கொள்வார்கள் என்பது இப்போதைய கேள்வி.

0 comments: