ஒரு இரவும், சில நினைவுகளும்

மாட்டுப் பொங்கல். காலயில எந்திருச்சு வீட்ல இருக்க எல்லா மாடு கண்ணுகளயும் குளிப்பாட்டுவோம். பெத்தாரின்னு ஒரு குளம் இருக்கு. அந்தக் குளத்துல தண்ணி கிடந்தா அங்க போயி, இல்லன்னா வீட்டிலேயே. அப்புறம் அதுகளுக்கு சாம்புறானி போட்டு, கொம்புக்குக் காவி அடிச்சு (அப்பா பெயிண்ட்டெல்லாம் அடிக்க மாட்டார், ஆனா எங்க தெரு முத்து மாமா அவரோட வண்டி மாட்டுக்கு பெயிண்ட் அடிப்பார்), அப்புறம் கொட்டாங்கச்சியில காவியைத் தொட்டு வட்ட வட்டமா மாட்டு முதுகுல 'டிசைன்' போடுவோம். இப்படியாகப் பகல் பொழுது போயிரும்.

சாயங்காலமாக எல்லா மாடுகளையும் எங்க அப்பாயி வீட்டுத் திடலுக்குக் கொண்டு போவோம். எங்க சித்தப்பா ஒன்னு இருக்கு. அதுதான் எங்க மாட்டுப் பொங்கலின் கெளரவ பூசாரி. இப்படி ஒவ்வொரு தெருவுலயும் அன்னக்கி ராத்திரி பல திடீர் பூசாரிகள் தோன்றுவார்கள். மாடுகள் மட்டுமில்லை. ஆடுகள்கூட வரும். எல்லாத்துக்கும் மாலை அல்லது கொஞ்சம் கதம்பப் பூ போட்டிருக்கும். எல்லா வீட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் சாமான்கள் வரும். பெண்டுகள் சேர்ந்து பொங்கல் வைக்க, ஆம்பிளைகள் பலா இலைகளைச் சீவாங்குச்சியால் கோர்த்து இலையும், தொன்னையும் (சின்ன கிண்ணம் மாதிரி இருக்கும், இலையால செய்றது) தைப்பதும், பூசாரியின் அவ்வப்போதைய கட்டளைகளான, மாவிலை ஒடிச்சுக்கிட்டு வாங்க, இந்த வெல்லத்தை நுணிக்கிட்டு வாங்க, சம்முவம் வரமுடியாதுன்னான் அவன் மாட்டப் புடிச்சுகிட்டு வாங்க, என்பன போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

வாண்டுகள் என்ன செய்வோம், தாம்பூலத் தட்டு, சாப்பாட்டுத் தட்டு இவைகளைத் தூக்கிக் கொண்டு கரும்பு அல்லது குச்சியை வச்சுத் தட்டிக்கிட்டே தெரு முழுக்க ஓடுவோம். எதுக்குன்னு கேக்காதீங்க. பொங்கலோ பொங்கல்னு அப்பப்ப சத்தம் வேற. இதே மாதிரி பல க்ரூப்புகள் அந்த அழகான இளம் ராத்திரியில ஓடித்திரியும். பறையடித்துக்கொண்டு நாலைந்து பேர் தெரு முழுக்கச் சுற்றுவார்கள்.

ஒரு வழியா பொங்கல் வச்சு முடிப்பாங்க. பூசாரி தையல் இலையில அதைக் கொட்டி, வாழைப்பழம், கரும்பு இன்னபிற சரக்குகளையெல்லாம் போட்டுப் பிசைந்து உருண்டை உருண்டயா உருட்டி வைப்பார். அப்புறம் எண்ணெய், அரப்புத்தூள், தண்ணி, பொங்கல் எல்லாத்தையும் ஒவ்வொருத்தர் எடுத்துக்கிட்டு ஒவ்வொரு மாடு ஆட்டுக்கிட்டயும் போவோம். முதல் ஆள் எண்ணெ எண்ணெ அப்படின்னு சொல்லிக்கிட்டே அதுகளுக்கு எண்ணெய் வைக்கும். இதே மாதிரி அடுத்த ஆள் அரப்புத்தூள். அப்புறம் தண்ணி, அப்புறம் பொங்கல். இந்த வைபோகத்தின்போது இந்த தாம்பூலம்/தட்டு கோஷ்டி வேகமாய் அடிச்சுக் கிளப்பும். சில மாடுக அடடா நம்மள என்னமோ பண்ணப் போறாங்யன்னு அத்துக்கிட்டு பறியுறதும் உண்டு. அதுகளைத் தேடி இழுத்துக்கிட்டு வர நாலு ஆளு போவும். இந்தக் கூத்து முடிஞ்சதுக்கப்புறம் மாடாடுகளுக்கு திருஷ்டி சுத்திப் போடுறதோ என்னமோ, 'கோயிந்தா கொட்டுறது'ன்னு சொல்லுவோம், ஒரு சட்டியில நெருப்பைத் தூக்கிக்கிட்டு சுத்தி சுத்தி ஓடித் தெரு முனையில கொண்டு கொட்டுறது. தாம்பூல வாண்டுகளும் உச்சவேகத்தில் அடித்துக்கொண்டே பின்னால் ஓடும். அப்புறம் வந்து எல்லாருக்கும் ஒரு உருண்டைப் பொங்கல். வீடு வர பத்து மணியாயிரும்.

இந்த நினைப்பெல்லாம் கனவுமாதிரி சுத்துது. அந்நினைவுகளின் மையத்தில் இருக்கதெல்லாம் அந்த மங்கிய ராவெளிச்சத்தில் தாம்பூலத் தட்டை அடித்துக் கொண்டு ஓடினதும், இந்த மாதிரி ஒரு மாட்டுப் பொங்கல் ராவில் ஓடும்போது கிணத்துக்குள் விழுந்து செத்த ஸ்டீபன் வாத்தியார் மகன் ஸ்டான்லியும்தான்.
அவனுக்கு என் வயது.

0 comments: