ஆறாறு முப்பத்தியாறு



நித்தஞ் சுழலுபணிச் சங்கிலி தெறித்தோர்
மார்கழி மாலையில் மகவுமனை யாட்டியுமாய்க்
குடிக்குந் தண்ணீராதித் துடைக்குந் துணியந்தமாய்ப்
பெட்டியைந்துப் பொதிமூன்று இழுத்தும் சுமந்தும்
தூரம் தூக்கம் பொழுது பசியாவையுமோர்
மயக்கிற் கிடத்து ஆகாயக் கப்பலிலேறி
வந்திறங் கினம்யான் பிறந்தநன் னாட்டினுக்கே.

எரித்தே னில்லைத் துடைத்தேனு மில்லை
துயிலா அல்லுந் துயிற்பகலுமாய்ப் போனதுபோகி
ஆண்டுபத் திருக்கலாம் பொங்கலைநான் கண்டு
பொங்கல் புதிதென் மனைவி மகற்கு
வறண்ட மூவாண்டில் இல்லா விளைச்சலுக்கு
ஒத்தடமாய்ச் சொந்தவயல் நெல்லிந்த வருடம்
மருமகளும் மாமியாரும் ஆளுக்கோ ரடுப்பெரிக்க
பொங்கலோ பொங்கல் இனித்த தவ்விரவு.

இரவை யதிர்க்கும் தெருச்சிறார் ஒலியூடே
கொப்பி கொட்டிப் போம் மங்கையரில்லை
முழக்குப் போட்டுவரும் பறையில்லை அன்றி
இல்வந் தொலிக்கும் நாயனந் தானுமில்லை
ஆட்களுக்கு மட்டுமோ அகவை எமக்கில்லையோவென்று
தளர்ந்தே நடந்தன மாட்டுப்பொங்கலும் காணும்பொங்கலும்.

வீட்டுக்குவீடும் வெளியே சந்தியிலும் பெட்டியொன்றுண்டு
ராப்பகலா யதிலே பாட்டொலிக்கும் ஆட்டமாடும்
வெளியோடு மூர்ப் பாராதே யண்டையில்
முகங் கொடுத்தும் பேசாதே யென்று
ஓடு பேருந்தினுள்ளும் வந்தாட்டம்போடுது அப்பெட்டி
கண்டேனிவ் வாட்டத்தில் அமிழ்ப்பெருந் திரள்தன்னை.

சுனாமி சோக மெல்லாம் பட்டவருக்கும்
அயல் நாட்டினருக்குமே யன்றிச் சற்றே
அண்டையி லிருக்கும் எம்மூர்க் கில்லை
பெட்டியிலேதோ வொருநிமிடச் செய்தி வரும்
அப்புறமாயொரு விளம்பரமும் பாட்டும் வரும்
சுனாமிக்கப்புறமாய் வளர்ப்புமீன் மட்டும் வாங்குமெந்தைக்கு
வயற்பூச்சி அறுவடை வந்தமகனெனக் கவலையாயிரம்
வீட்டிற் கிடந்த கந்தலொரு கூடை
அளந்து கொடுத்த அரிசிப்படி ரெண்டாய்
அயலாரனைய சுனாமிக்கடன் தீர்ந்திருந் தாரே.

ஓர்புறம் சாலைக்குழியினில் வண்டிகள்வீழ மறுபுறம்
சாலையொப்பந்தக்காரர் வீடு மாடியாயுயரலும் அது
அப்படித்தானப்பாவென மக்கள் ஒத்துப் போதலும்
கருவையும் காட்டாமணியும் குளங்களை நிரப்பலும்
அன்ன வாயிரம் முடிவிலி முரண்களில்
அழுந்தியான் கிடந்த நாட்களின் முரணாய்
என்றன் மைந்தன் கதையைக் கேட்பீராயின்
கன்றைப் பார்ப்பதுவும் வைக்கோலைப் போடுதலும்
போம்போக்கில் நாய்வாலை மிதித்துத் துள்ளுதலும்
வெளியே வெயிலடாவென்று கதவினைப் பூட்டிட்டால்
கதவுடையு மோவெனக் கத்தி யுதைப்பதுவும்
கால்பதியு நிலமெலாம் வீடு வழியிற்
கண்படு வுயிரெலாந் தோழ ரென்று
உருகுபனி யாயாங்கே யோடித்திரிந் தானவன்.

கடல்கொண்டநிலந்திருத்தி பிறந்தமண் செப்பனிட்டு
இலக்கியந்திரட்டி வரலாற்றுச் சுவடெலாங்கண்டு
கழிப்போம் மாதமென வந்திருந்தோனிங்கே
போனோம் வந்தோமெனத் தூதரகத்துக்கொருமுறை
குறிஞ்சிப்பூ பூத்ததெனப் பறம்புமலைக்கொருவோட்டம்
கொல்லத்துக்கொன்று குடந்தைக்கொன்று சரசுவதி
மகாலுக்கொன்றாய்க் கோர்த்திருந்தேன் பயணமாலை
போம்வழியெல்லாம் கதிரறுப்புப் போரடியல்
கல்லணையிற் றண்ணீர் குளங்களிற்றாமரை
போதுமினி யடுத்தமுறை போம்வரை
இழுத்திழுத்துச் சேர்த்துக்கொண்ட யீரக்காற்று.

விடுப்பு முப்பத்தி யாறுநா ளென்றாரப்பா
ஆச்சுதுதங்கை தமக்கைமார் விருந்துக்கு நாளாறு
சிற்றப்பன் மாமன்மச்சான் அழைப்புக்கு நாளாறு
முகூர்த்தவோலை பந்தக்கால் கலியாணம் அதிலோராறு
வீட்டிலேயோராறு குண்டுகுழிப்புகை ரோட்டிலேயோராறு
பருப்புப்பொடி மிளகாய்ப்புளி ஒடியல்மா நெல்லிவத்தல்
கடைநூறில் விரித்தெறிந்த வஸ்திராதிவகை யொருமூட்டை
சேர்த்துக்கட்டி முடிக்கவோராறாய் ஆச்சுது முப்பத்தாறு
மீண்டுவந்து தேசம்மாறி உருளுதுவோர்க் காட்டாறு.

6 comments:

said...

அருமை!

said...

//உருகுபனி யாயாங்கே யோடித்திரிந் தானவன்//

இதுதானடா அருமையான உவமை. இங்கு உறைந்த பனியாய் இருந்தவன் அங்கு உருகுபனியானான். அதுவும் ஓடித்திரிந்து!

நல்ல பதிவுடா! நல்ல கவிதை!!

said...

நன்றி ராதா.
தங்கமணி: உறைந்து கிடப்பவருக்கே உருகலின் அருமை தெரிகிறது போலிருக்கே:)
நன்றி உனக்கு.

said...

வாங்க சுந்தரவடிவேல் வாங்க. படிக்க நல்லாருந்துச்சு. குறிஞ்சிப்பூவெல்லாம் என்ன சொன்னதுன்னு எழுதுங்க.

said...

இந்தப்பதிவை எப்படியாகத் தப்பவிட்டேன்?

said...

மெய், போனது மட்டுந்தான் உண்மை. பாக்க முடியலையே. அப்புறமா புதுக்கோட்டை - பொன்னமராவதி வழியில இருக்க வீடு/கட்டடங்களையெல்லாம் பாக்குறப்போ நீங்கதான் அதைப் பத்தி எழுத சரியான ஆளுன்னு நெனச்சுக்கிட்டேன்!

பெயரிலியண்ணே, தங்கமணி பதிவுல 4ஆவது பாயிண்டு மாதிரி வழுக்கிருச்சு:)
நான் நினைப்பது என்னவென்றால் தமிழ்மணத்தில் இருக்கும் நம் விளம்பரத் தட்டியைக் கொஞ்சம் சரி செய்ய வேண்டும். இன்றைக்கு முட்டிப் பார்க்கிறேன்.