நிறம் மாறும் இலைகள்


சில வாரங்களாக இலைகள் உதிர்கின்றன. சாலைகளெங்கும் பழுத்த இலைகள். மரங்களில் வண்ணப் பூச்சு. பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்றன. காற்று பழுத்த இலைகளைக் கீழே தள்ளுகின்றது. மழை அவற்றை நனைக்கிறது. சீக்கிரம் மக்கிப் போக வைக்கவா இந்த மழை? சில்லென்று கார்காலம் கவிகின்றது.

அமெரிக்க வேகப்பெருஞ்சாலைகளைத் தவிர்த்துச் சிறு சாலைகளில் மெல்லப் பயணிக்கலாம். பன்னிற மரங்களை இருபுறமுங் கண்டபடி போகலாம். சிலவிடங்களில் ஏதோ பூக்களினால் செய்யப்பட்ட தோரணவாயிலினூடே நடப்பது மாதிரியான தோற்றம். தலையைச் சுற்றி அத்தனைத் திக்கிலும் வண்ணங்கள். எந்தப் புகைப்படக்காரனும் எடுத்துவிட முடியாதெனுமொரு சூழல். நானெடுத்த சிலவற்றை இங்கே இடுகிறேன். இனிவரும் வார இறுதிகளிலும் பயணிக்கவும், புகைப்படமெடுத்துக் காட்டவும் ஆவல். இலைகள் எனக்காகக் காத்திருக்குமாவெனத் தெரியாது. ஒரு கனத்த மழையிலும் காற்றிலும் சீக்கிரமாகவே உதிர்ந்து போகலாம்.


கொசுறு: இந்த இலைகளின் நிற மாற்றத்துக்கு, பச்சையம் குறைகின்ற காலத்தில், கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள் என்ற நிறமிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் காரணமாம். அத்தோடு இலையின் நிறமாற்றம் அந்த மரத்தின் வயது, வெளிச்சம், காற்று, மண், ஈரம், தகைவு(stress), சுரப்பு(hormone) எல்லாம் காரணமாம். இதனால்தான் பாருங்கள் ஒவ்வொரு மரமும் நிறமாறும் விகிதத்தில் மாறுபடுவதை. ஏன், ஒரே மரத்தில் அடியில் ஒரு நிறமும் உச்சியில் ஒரு நிறமும் இருப்பதைப் பாருங்கள். ரொம்ப எல்லாத்துலயும் அடிபடுறது சீக்கிரமே பழுக்குது, உதிருது!



6 comments:

said...

மரங்களின் நிறம் மாறுதல் என்பது எனக்குப் புதுமையான செய்தி. நம் நாட்டில் இலைகள் பழுத்து உதிர்வதைக் காண்கிறோமே அப்படியின்றி மொத்த மரமும் நிறம் மாறுகிறதே எப்படி? மா புளி வேம்பு போன்ற மரங்கள் உண்டா? அவையும் நிறம் மாறுமா? நம் நாட்டில் ஏன் இத்தகைய விளைவுகள் இல்லை?

said...

ஆச்சிமகன், பதில் சற்றே நீண்டுவிட்டது!
1. நானிருப்பது அமெரிக்க வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இங்கு சுமார் நான்கு மாதங்களுக்காவது கடுங்குளிர் இருக்கும். அப்போது மரங்கள் (சில ஊசியிலைத் தாவரங்களைத் தவிர) இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு வெறுங்கிளைகளோடு மட்டும் நிற்கும். இந்த தட்பவெப்ப நிலையில் மா, வேம்பு, புளி போன்ற வெப்ப/மிதவெப்பத் தாவரங்கள் வளர்வது அரிது. ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற தென்மாநிலங்களில் இம்மரங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை.

2. இலைகளின் நிறம் மாறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று அறியக் கிடைக்கிறது. முக்கியமானது இந்தக் குளிர்காலத்தின் துவக்கத்தில் பகல் பொழுது சுருங்கி விடுவதால் சூரிய ஒளி கிடைக்கும் நேரமும் குறைந்து விடுகிறது. சூரிய ஒளி இல்லாமையாலும், குளிரினாலும் இலைகளில் பச்சைய உற்பத்தி நின்று போகிறது. அப்போது கரோட்டினாய்டுகள் (மஞ்சள், செம்மஞ்சள் நிறமிகள், வாழைப்பழம், காரட், இத்யாதிகளில் காணப்படுவது) தம்மை வெளிக்காட்டிக் கொள்ள முடிகிறது. இந்நிறமி வெயில் காலங்களில் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும் பச்சையத்தின் அளவு அதிகமாக இருந்ததால் பச்சை நிறத்தால் மறைக்கப் படுகிறது. இப்போது பச்சையம் இல்லாததால் மஞ்சள்/செம்மஞ்சள் ஆகியன வெளிப்படுகின்றன. சிவப்பு நிறத்துக்கு ஆந்தோசயனின் (தக்காளி, செர்ரிகளில் இருப்பது) என்ற நிறமிகளின் தொகுதி காரணம். இவை கோடை காலத்தின் பிற்பகுதியில் உண்டாக ஆரம்பிக்கின்றன. இலைகளில் சர்க்கரை அதிக அளவில் தேங்கும்போது இந்நிறமிகள் அதிகமாக உண்டாக்கப் படுகின்றன. இலைகளில் பாஸ்பேட் குறைதலும் இதற்கொரு காரணம் எனக் கருதப் படுகிறது. நல்ல சூரிய வெளிச்சம் கொண்ட நாட்பொழுதும், குளிர்ந்த (ஆனால் உறைந்துவிடாத) இரவும் கொண்ட இலையுதிர்காலத்தில் இந்தச் சிவப்பு நிறமிகள் அதிகமாக இலையில் தேங்கும். எனவேதான் இலைகளில் இத்தகைய நிறங்கள் தோன்றுகின்றன. இந்தக் காரணங்களோடு பலவிதமான காரணிகளும் இந்நிறமாற்றத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றில் மண், ஈரப்பதம், மண்ணின் அமிலத்தன்மை, மரத்தின் வகை, அவை உருவாக்கும் நிறமிகள், தட்பவெப்பம் ஆகியன அடங்கும். இந்த நிலையில்தான் மரம் இலையோடான தன் உறவை முடித்துக் கொள்கிறது. இலையும் உதிர்கிறது. வழக்கம் போல் இதுவும் முற்றுப்பெறாத ஒரு ஆராய்ச்சி. இன்னும் ஆராய்கிறார்கள்.

3. நம்மூரில் இத்தகைய தீவிரமான தட்பவெப்ப மாறுபாடுகள் இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம். இலைகளின் காலம் அங்கு நீண்டிருக்கலாம். பூவரச மரவிலைகள் மஞ்சளாய் உதிர்வது நினைவுக்கு வருகிறது. வாதா இலைகள் (பாதாம்?) அழகிய சிவப்பாய் உதிரும். ஆனாலும் பல தாவரங்கள் ஆண்டு முழுவதும் பச்சையிலைகளை வைத்திருப்பதாலேயே சில இலைகளில் தோன்றும் இந்நிற மாற்றங்கள் கண்களைக் கவருவதில்லை. அமெரிக்காவில் இது கூட்டாக எல்லா மரங்களிலும், எல்லா இலைகளிலும் நடப்பதால் கண்ணுக்குப் படுகிறது போல. வட இந்தியாவிலோ, ஊட்டி போன்ற குளிர்ப்பகுதிகளிலோ இத்தகைய நிறம் மாற்றம் அதிகமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.

4. இந்திய இலைகளைப் பற்றிய அனுமானங்களைத் தவிர மற்றவற்றுக்கு நான் கீழ்க்கண்ட இணையதளங்களைப் படித்துச் சொல்லியிருக்கிறேன்.
http://www.state.me.us/doc/foliage/kids/movie.html
http://www.dnr.state.wi.us/org/caer/ce/eek/veg/trees/treestruecolor.htm

said...

அருமையான விளக்கம். பல தமிழ்ப்பதங்களையும் அப்படியே மனதில் வாங்கிக் கொண்டேன் ;-)

சந்தடி சாக்கில் அறிவியல் பிட் ஒன்று:
http://www.nytimes.com/2004/10/19/science/19leaf.html?th=&pagewanted=all&position=
(இலைகள் நிறம் மாறுவதற்கான வேறு காரணங்களையும், தற்கால ஆராய்ச்சியையும், தொகுத்தளிக்கிறார்கள்.)

அரசியல் பிட் ஒன்று:
'மரங்களில் இருக்கும் இலைகள் எல்லாம் உதிர்வதற்கு யார் காரணம் தெரியுமா? சுற்றுப்புறச்சூழல் விரோதி ஜார்ஜ் புஷ்ஷினால்தான் மரங்கள் எல்லாம் சோகமாக, களையிழந்து காணப்படுகின்றன' என்று கெர்ரி விளம்பரம் செய்தாலும் ஆச்சரியமில்லை. - என்கிறார் இரவு நேர சிரிப்பு மன்னன் 'டேவிட் லெட்டர்மேன்' :-D

said...

உனது விளக்கம் மிக அருமை தம்பி. எனக்கும் புரிந்தது.

said...

பாபா, அந்த சுட்டி ஆர்வமூட்டுவது. நன்றி.

said...

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன்.