உங்களுக்குக் கற்பனை செய்யத் தெரியுமா? அப்படின்னா என்னோடு வாங்க. ஒரு 150,000 வருசத்துக்கு முந்தி போவோம். இது ஆப்பிரிக்கா. நாமதான் இந்தப் பூமியோட புது மனுசங்க. இப்ப நாம கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர ஆரம்பிக்கிறோம். இதோ இந்தக் கிழக்காப்பிரிக்கக் கடற்கரையோரமாவே வடக்கே போறோம். ஆயிரமாயிரமா வருடங்கள் கடக்குது. நம்ம புள்ளை, அதுக்குப் புள்ளை எல்லாம் நம்மள மாதிரியே நடந்துகிட்டே இருக்கு. செங்கடல் வருது. மேற்கே போக முடியாது, பாலை. செங்கடல் சின்னதாத்தான் தெரியுது. நமக்கு ஓடம் கட்டத் தெரியும். நாம் ஓடம் கட்டி அந்தக் கடலைக் கடக்குறோம். அரேபியப் பிரதேசம் வருது. இங்கேயும் வடக்கேயோ மேற்கேயோ போக முடியலை. வெப்பம். மெல்லக் கடற்கரையோரமாவே போய்க்கிட்டு இருக்கோம். பாதையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் தலைமுறைகளையும் ஒழித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறோம். வழியெங்கும் நம் தடங்களை விட்டுக் கொண்டே வருகிறோம். இந்தியாவையும் மெல்லத் தாண்டி அந்தமான் நிகோபார், மலேசியா, ஆஸ்திரேலியா வரை நாம் வந்து விட்டோம்.
ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........
இப்படித்தான் இருந்திருக்குமாம் மனித இனத்தின் பயணம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளப் பட்டதும் தெரிஞ்சதும்தான். ஆனா சரியாத் தெரியாதது என்னன்னா, ஆப்பிரிக்காவுலேருந்து வடக்கு முகமாகக் கிளம்பின கூட்டம் வடக்கே நைல் நதி, ஐரோப்பான்னு போயிட்டு இந்தியா பக்கம் வந்துச்சா (கீழேயிருக்க படத்துல பாருங்க) அல்லது செங்கடலைக் குறுக்கே தாண்டி இந்தியா பக்கம் போச்சான்னு தெரியாம இருந்துச்சு. ஐரோப்பாவில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் வெறும் 45,000ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. மேலும் இந்த இடம்பெயர்வின் போது அங்கு பாலையின் வெப்பநிலையிருந்ததால் கூட்டம் தெற்கே நகரத்தான் அதிகம் வாய்ப்பிருந்திருக்க வேண்டும். இப்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு இந்த செங்கடல்-இந்தியப் பாதை ஊகத்தை மேலும் நிச்சயப்படுத்துகிறது.
சுமார் 65,000-70,000 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்குள் இந்த மனித இனம் வந்திருக்கலாம். இங்கிருந்து கிளம்பி அந்தமானுக்குச் சென்ற கூட்டங்களில் ஒன்று அங்கேயே மாட்டிக் கொண்டு இத்தனைக் காலமும் அங்கேயே இருந்திருக்கிறது. நிக்கோபார் தீவிலிருப்பவர்கள் சீனர்களைப் போலிருக்க, அந்தமானில் இருக்கும் இந்த இனம் (அந்தமானீஸ், ஒங்கே, கிரேட் அந்தமானீஸ் குடிகள்) எப்படி ஆப்பிரிக்கர்களை மாதிரி இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. யாருக்கு? ஐதராபாத் தங்கராஜுக்கும்(Centre for Cellular and Molecular Biology) கூட்டாளிகளுக்கும். அந்த இனக்குழுக்களின் இரத்த செல்களிலிருந்து மைட்டோகாண்டிரியா எனும் அறைக்குள் இருந்த மரபணுவைப் (mitochondrial DNA, சுருக்கமாக mtDNA) பரிசோதித்தார்கள்.
இந்த மரபணுவின் சிறப்பு என்னன்னா, இது அம்மாகிட்டேருந்து மட்டுந்தான் பிள்ளைகளுக்குப் போகும். அப்பாகிட்டேருந்து போவாது. அதனால இதிலிருக்கும் மரபு மூலக்கூறு வரிசையை வச்சு அம்மம்........ம்மாவுக்கு அம்மாச்சிக்கு அம்மாயி யாருன்னு சொல்லலாமாம். கிட்டத்தட்ட 150,000 வருசத்து அம்மா வழிக் கதையெல்லாம் தெரிய வாய்ப்பு இருக்காம். இந்த வகையில பாத்தா அந்தமான் காரங்களோட பூர்வீகம் ஆப்பிரிக்கான்னு தெரிஞ்சது. இத வச்சு தலைமுறைக் கணக்குப் போட்டுப் பாத்தாரு தங்கராஜ். கிட்டத்தட்ட 50,000-70,000 வருசத்துக்கு முந்தி இந்த ஆளுக அந்தமானுக்கு வந்திருக்கனும்னு கணிச்சாரு. அப்படின்னா 45,000-50,000 ஆண்டுகளே பழமையான ஐரோப்பிய இனத்திலிருந்து இந்த இந்திய-அந்தமான் இனம் வந்திருக்காது என்பதாகத்தானே அர்த்தம்?
இதே மாதிரிதான் மெக்காலேன்னு ஒருத்தரு (ஸ்காட்லாந்து, க்ளாஸ்கோ பல்கலைக்கழகம்) மலேசியாவுல இருக்க ஓரங் அஸ்லி (Orang Asli) பழங்குடி மக்கள்கிட்ட இதே மாதிரி ஆராய்ச்சி பண்ணி அவங்க 64,000 வருடங்களுக்கு முந்தி மலேசியாவுக்கு வந்திருக்கலாம்னு கணிச்சாரு. இதுவும் வடக்கு நோக்கிய இடம் பெயர்தலை சாத்தியப் படுத்தாமல் செங்கடல்-இந்தியப் பாதைக்கே வலுச் சேர்க்கிறது. இவங்களோட வழித் தோன்றல்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கும் சுமார் 63,000 வருசங்களுக்கு முந்தி போயிருக்காங்களாம். இந்த மக்கள் ஒரு வருசத்துக்கு 4 கிலோமீட்டர் இடம் பெயர்ந்திருக்காங்கன்னு சொல்றார் மெக்காலே. அப்போ ஆப்பிரிக்காவுலேருந்து மனுசப் புள்ள கிளம்பிப் போன பாதையைக் கோடு போட்டம்னா இப்புடி வருதாம்.

இதுல Sinai வழியாப் போகாம செங்கடலைத் தாண்டிய வழித்தடம் இருக்கு பாருங்க, அது வழியாத்தான் நாமெல்லாம் வந்தோம்னு இந்த ஆராய்ச்சி சொல்லுது. இப்பதிவை
நாராயணனின் "மனித இனத்தின் வரலாறு" பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். இனி வரும் ஆராய்ச்சிகளில் இந்திய இனக் குழுக்களையும் அவர்களின் குடியேறுதல் பற்றியும் மென்மேலும் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் கிடைக்கக் கூடும். இதிலிருக்கும் தங்கராஜ் மற்றும் மெக்காலேயின் கட்டுரைகள் மே 13ம் தேதியிட்ட
Science பத்திரிகையில் (படம் நன்றி). முழுக்கட்டுரை வேண்டுமெனில் கேளுங்கள் தரப்படும்! இக்கட்டுரைகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்:
National Geographic.
பிற்சேர்க்கை: ரோசாவசந்த் சுட்டிக்காட்டியதன் பேரில் இப்பதிவோடு தொடர்புடைய இன்னும் இரண்டு பதிவுகள்:
1.
அனாதை ஆனந்தன் 2.
மாண்ட்ரீஸர் எழுதிய "மொட்டை பிளேடு"